செவ்வாய், மே 05, 2020

நடத்தை வகைமை நோக்கில் கே.ஏ.அப்பாஸ் புதினங்களில் பெண்கள்

நடத்தை வகைமை நோக்கில் கே.ஏ.அப்பாஸ் புதினங்களில் பெண்கள்
அறிமுகம்
                      கே.ஏ. அப்பாஸ் (1914 - 1987) உருது, இந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளிலும் இலக்கியப் படைப்புகளை எழுதியவர். உருது மொழியை தாய்மொழியாக உடையவர். சிறுகதை, நாவல், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை என பன்முகத் தன்மையில் இலக்கியத்திற்குப் பங்களிப்பு செய்தவர். மேலும் இவர் இதழியல் துறையிலும் தன்னுடைய பங்களிப்பினைச் செய்துள்ளார். திரைத் துறையில் இயக்குனராகவும் கதாசிரியராகவும் பாடலாசிரியராகவும் விளங்கியவர். இவர் இந்திய சமூகத்தில் சாதி, மதம் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் கற்பிக்கப்படுகின்ற ஏற்றத் தாழ்வுகளை தன்னுடைய படைப்புகளின் வழி விமர்சித்துள்ளார். இவரது புதினங்களில் உள்ள பெண் கதைமாந்தர்களின் நடத்தை வகைமை அடிப்படையில் இக்கட்டுரை  உருவாக்கப்படுள்ளது.
          நவீன இலக்கிய வகைகளில் ஒன்றான புதினம் மற்ற இலக்கிய வகைமைகளிலிருந்து வேறுபட்டு அளவில் பெரியதாக, நீண்ட கால பதிவுகளை உடையதாக விளங்குகின்றது. ஒரு நாள் பொழுதையோ அல்லது பல நூற்றாண்டுகளையோ உள்ளடக்கியதாக உள்ளது. எண்ணிக்கையில் மிகுந்த கதை மாந்தர்களைக் கொண்டும் விளங்குகின்றது. தனி மனிதன் குறித்த அல்லது சமூகம் குறித்த பதிவுகளைக் கொண்டு விளங்குகின்றது. இவ்வாறு புதினம் தனக்கான களத்தினை பரந்துபட்டதாகக் கொண்டிருக்கின்றது. புதினம் ஒரு சமூகத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. அச்சமூகத்தில் உள்ள அனைத்துக் கூறுகளையும் கொண்டதாக விளங்குகின்றது. சமூக நிறுவனங்கள், சமூகச் சிக்கல்கள், சமூக மதிப்பீடுகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், அன்றாட  செயல்பாடுகள், சமூக முரண்பாடுகள் போன்ற கூறுகள் அனைத்தையும் விவரிக்கின்றது.
‘Psychology (உளவியல்) என்ற ஆங்கிலச் சொல் Psyche (சைக்) மற்றும் logos (லோகாஸ்) என்ற கிரேக்கச் சொற்களின் கூட்டுருவாக்கம் ஆகும். Psyche’ (சைக்) என்பது உள்ளம் ஆகும். ‘Logos’ (லோகாஸ்) என்பது உள்ளத்தைப் பற்றி ஆய்ந்தறியும் துறை ஆகும். டெமோகிரிட்டஸ் (Democritus கி.மு. 400), பிளாட்டோ (Plato கி.மு. 424–327), அரிஸ்டாட்டில் (கி.மு. 384–322) முதலானோர் உளவியலை ஆன்மா பற்றிய படிப்பு என்றே விளக்கமளித்தனர். அரிஸ்டாட்டில் எழுதிய ஆன்மாவின் இயல்புகள் என்ற நூலே உளவியலின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.[1] தனை அடுத்து பல நூற்றாண்டுகள் கடந்த பின்னர் தோன்றிய உளவியல் அறிஞர்களான டெஸ்கார்டஸ் (Descartes, 1596–1650) மற்றும் இம்மானுவல் காண்ட் (Immanuel Kant, 1727–1804) முதலானோர் உளவியல் என்பது ஆன்மா பற்றியது அன்று; மனம் பற்றியது என்ற வாதத்தினை முன்வைத்தனர். அதனை அடுத்த வளர்ச்சிக்கட்டமாக  வில்லியம் ஜேம்ஸ் (William James 18921910) மற்றும் வில்ஹெம் வுண்ட் (Wilhelm Wunt 1832 – 1920) ஆகியோர் உளவியல் என்பது நனவு மனம் (Conscious Mind) குறித்துப் படிப்பது என்ற கருத்தினை நிலைநிறுத்தினர். இதனை மறுக்கின்ற விதமாக சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud, 1856–1939) என்பவர் உளவியல் என்பது நனவிலி மனம்(Unconscious Mind) பற்றிப் படிப்பது என்ற விவாதத்தினை முன்வைத்தார்.’[2]
            உளவியல் தொடக்கத்தில் ஆன்மா என்பதாகவும் நனவு மனம் குறித்தது என்பதாகவும் பின்னர் நனவிலி மனம் பற்றியது என்பதாகவும் காலந்தோறும் பல்வேறு விளக்கங்களைப் பெற்று வந்த நிலையில், உளவியல் இருபதாம் நூற்றாண்டில் மற்றொரு பரிமாணத்தையும் பெற்றது, அதுவே நடத்தை உளவியல் என்றழைக்கப்பட்டது. நனவு மற்றும் நனவிலி மனத்தின் செயல்பாடுகளில் விளையும் மனித நடத்தைகளைப் பற்றிப் படிக்கின்ற அல்லது ஆராய்கின்ற துறையாக இது வளர்ந்துள்ளது. நடத்தை உளவியல் 1950 இல் ஒரு தனித் துறையாக சிறப்புற்று வளரத் துவங்கியது. வாட்சன் (John B. Watson) என்பவரே முதன் முதலில் நடத்தை உளவியல் என்னும் கோட்பாட்டை முன்வைத்தவர் ஆவார். அவரைத் தொடர்ந்து எட்வர்டு தார்ண்டைக் (Edward Thorndike 1874–1949), லெனார்டு ஹல் (Clark Leonard Hull 1884–1952), டோல்மேன் (Edward Chase Dolman 1886–1959), ஸ்கின்னர் (B.F. Skinner, 1904–1990) முதலானோர் நடத்தை உளவியல் துறை வளர்ச்சிக்கு வித்திட்டனர். உளவியலில் நடத்தை என்பது பல நிலைகளில் வைத்துப் பொருள் புரிந்து கொள்ளப் படுகின்றது. மனிதன் ஒவ்வொரு நேரத்திலும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றான். இறப்பு ஒன்றுதான் அந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆகையால் நடத்தை என்பது மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை செய்யக்கூடிய செயல்பாட்டை குறிக்கின்றது.”[3] ஸ்கின்னர் (Skinner) மனித நடத்தை பற்றிய உவியலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். அவரைப் போன்றே இவான் பாவ்லோ (Ivan Pavlov) என்பவரும் மனித நடத்தையானது மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ சுற்றுச் சூழல் காரணிகளோடு தொடர்புடையது என்பதை வலியுறுத்தினார்.
            மனிதன் நடத்தையை தீர்மானிக்கின்ற காரணிகளை 1. மரபு ரீதியான நடத்தை 2. சூழல் தொடர்பான நடத்தை என இருவகைப் படுத்தலாம்.  மரபு ரீதியாக அமையும் நடத்தை என்பது மரபணுக்கள் வழியாக ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படுபவை. மரபு ரீதியாக மனிதனின் நடத்தைகள் தொடர்ந்தாலும் மனிதன் தான் வாழுகின்ற சூழலுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்படுகிறான் என்பதும் உளவியலில் கண்டறியப்பட்ட உண்மையாகும். குழந்தை பிறந்து வளர்ந்து வருகின்ற சூழலுக்கு ஏற்பவே அதனுடைய சிந்தனையும் செயல்பாடும் அமையும் என உளவியல் அறிஞர்கள் விளக்கமளிக்கின்றனர்.
            இந்திய சமூகத்தில், பெண்களுக்கான ஒழுக்கவியல் கட்டுப்பாடும், ஆண்களுக்கான அதிகாரச் சுதந்ரமும் அவர்களின் நடத்தையை தீர்மானிக்கக் கூடியதாக விளங்குகின்றன. பெண்களுக்கு கற்பு ஒழுக்கத்தினை ஆண்தலைமைச் சமூகம் வலியுறுத்துகிறது. பெண்கள் அன்பு மிக்கவர்கள்; மைதியானவர்கள், பொறுமையுடையவர்கள், அஞ்சுபவர்கள்; வெட்கப்படுபவர்கள். குடும்பத்தைப் பராமரிக்கக் கூடியவர்கள், ஆண்களைச் சார்ந்து வாழ்பவர்கள் என்றும், ஆண்கள் வீரமுடையவர்கள், அதிகாரமுடையவர்கள், சம்பாதிப்பவர்கள், செல்வத்திற்கு உரிமையுடையவர்கள், ஆளும் திறனுடையவர்கள் என்றும் வரையறை செய்கிறது. இவ்வாறான பொதுப் புத்தியிலிருந்து பெண்கள் குறித்த வேறுபட்ட (உயர்வான) பார்வையினை அப்பாஸின் புதினங்களில் காண முடிகின்றது.
            நடத்தை உளவியல் கோட்பாட்டின் அடிப்படை கூறுகளாக விளங்கும்  நடத்தை வகைமைகளின் அடிப்படையில் மனிதர்களை கீழ்க்காணுகின்ற மூன்று வகைகளில் குறிப்பிடலாம்.
1.    ஒத்திசைவு நடத்தையர்
2.    வலியுறுத்து நடத்தையர்
3.    எதிர்த்துப் போராடும் நடத்தையர்
            இவ்வகைமை நோக்கில் அப்பாஸ் தனது புதினங்களில் படைத்துக் காட்டியுள்ள பெண் கதை மாந்தர்களின் வகைமைகளைப் பற்றி விவரிப்பதாகவே இக்கட்டுரை அமைக்கப்படுகின்றது.
1. ஒத்திசைவு நடத்தையர்
            ஒத்திசைவு நடத்தையர் எந்தவொரு சூழலிலும் எவருடனும் இணங்கி நடப்பர். பொறுமையும் சகிப்புத் தன்மையும் உடையவர் ஆவர். எதையும் நேர்மறையாகப் பார்க்கும் சிந்தனை கொண்டோராய் இருப்பர்; யாருக்கும் ஏதொரு தீங்கு ஏற்படாதவாறு அனுசரித்து நடப்பர்; கோபம் ஏற்படும் சூழலிலும் அதைத் ம்முள் அடக்கிக் கொண்டு இன்முகம் காட்டுவர்; எதையும் வெறுக்காமல் ஏற்றுக்கொள்வர்; பிறர் மீது ஆதிக்கம் செலுத்தார்; பிறருக்காக ஒத்திசைத்து இயங்குவர்; ம்மைச் சார்ந்திருக்கும் அனைவரையும் அரவணைத்துச் செல்வர்.    
            அப்பாஸ் தனது புதினங்களில் ஒத்திசைவு நடத்தை உடையோரை மிகவும் குறைவாகவே படைத்துக் காட்டியுள்ளார். குறிப்பாக மூன்று சக்கரங்கள் எனும் புதினத்தில் சாந்தா எனும் பெண் கதைமாந்தாரை இத்தகு குணமுடையவராய் அடையாளம் காண முடிகின்றது. இத்தகைய கதைமாந்தரைப் படைப்பதற்கான காரணத்தை பார்ப்பின் அது திருமணமான பெண்களின் கொடுமைகளை எடுத்துரைக்கவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகின்றது. இப்புதினத்தின் வழி சாந்தாவின் குணவியல்புகளை அப்பாஸ் பின்வருமாறு விளக்குகின்றார்.  “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை, என்ற நினைவு அவளுக்கு வந்தது. அதனால் சகன்லால்(கணவன்) அவளை விட்டுவிட முடிவு செய்கிறான் போலும். ஆனால் அதற்காக விவாகரத்து ஏன் செய்ய வேண்டுமாம்? வேறொரு மனைவியை கொண்டு வந்து விட வேண்டியதுதான். பல நூற்றாண்டுகளாக இவ்வாறு தானே நடந்து வருகிறது. இரண்டாவது மனைவி அதிகாரமும் ஆணவமும் காட்டுவாள். ஆனால் இதெல்லாம் விதிப்படி தானே நடக்கும். முதல் மனைவி நல்ல சேவை செய்தால் கணவன் அவளுக்கு உணவும் உடையும் கொடுக்கத்தான் செய்வான். எனவே விவாகரத்துப் பேச்சு தொடருவதற்கு முன்னாள் மாமியாரிடம் இதைப் பற்றி பேசிவிடுவது என்று முடிவு செய்தாள்.”[4] இவ்வாறு எதுவாயினும் யாரையும் எதிர்த்துப் பேசாமல் இவர்களின் செயல்பாடுகளுக்கு இணங்க தானும் செயல்படுகின்ற ஒரு கதிமாந்தாராக சாந்தவை சித்தரித்துள்ளார். இத்தகைய மனநிலை உடைய பெண்கள் பலரும் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்துள்ளனர். வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர் எனலாம். ஆண் தலைமையிலான சமூகக் கட்டுபாடு பெண்ணின் சிந்தனைகளை இந்த அளவிற்கு மாற்றி அமைத்துள்ளது என்பதை இக்கதை மாந்தரின் வழி உணரலாம். பெண்ணிற்கு குழந்தைப்பேறு இல்லாத நிலையில் அதற்கு பெண் மட்டுமல்ல ஆணும் காரணம் என்கிறது அறிவியல். எனினும் ஆணாதிக்க சிந்தனைப் போக்கு பெண்ணின் மனநிலையையும் பெண்ணிற்கு எதிராகவே மாற்றியமைக்கின்றது.
வலியுறுத்து நடத்தையர்
வலியுறுத்து நடத்தையர் என்போர் அறிவுக் கூர்மையுடையவர்களாகவும் தன்னலம் ற்றவர்களாகவும் விளங்குவர்; மனித நேயம் மிக்கோராய் இருப்பர்; எளிதில் உணர்ச்சி வசப்படாதோராய் இருப்பர். இத்தகையோர் சிறந்த சிந்தனையாளர்களாகவும் பாராட்டத்தகும் பண்புநலன் கொண்டோராகவும் தலைமைப்பண்பு உடையோராகவும் விளங்குவர்.  இவர்கள் பிறருக்கு எது நல்லது, எது தீயது என்பது பற்றித் தெளிவான சிந்தனை கொண்டிருப்பர்; தம் எண்ணத்தை/ கருத்தைப் பிறர் மனம் கொள்ளத்தக்கவாறு எடுத்துரைப்பர்; வலியுறுத்துவர்.
            அப்பாஸின் புதினங்கள் பெரும்பாலும் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு கருத்தை எடுத்துரைக்கும் பாங்கினையே பெற்றிருக்கின்றன. புதினங்களில் வருகின்ற தலைமைக் கதை மாந்தர்களாக பெரும்பாலும் பெண்களே விளங்குகின்றனர். அப்பாஸ் புதினங்களில் வலியுறுத்தும் நடத்தையுடைய பெண் கதை மாந்தர்களாக, 1. ஒரு புதிய காலை புலர்ந்தது புதினத்தில் ஆஷா தேவி 2. இருளும் ஒளியும் புதினத்தில் இந்திரா 3. கண்ணாடிச் சுவர்கள் புதினத்தில் மஹ்மூதா 4. நக்சலைட்டுகள் புதினத்தில் அஜிதா போன்றோரைக் குறிப்பிடலாம்.  
ஒரு புதிய காலை புலர்ந்தது புதினத்தில் பணக்கார வீட்டுப் பையன் கௌதம் என்பவரை ஏமாற்றி அவரது சொத்துக்களை பறித்துக் கொள்ள நினைக்கும் தாய்மாமனின் சூழ்ச்சியிலிருந்து கௌதமை விடுவிப்பதாக ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஆஷாதேவி எனும் கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கௌதமினுடைய தாய்மாமனின் சூழ்ச்சியால் அவரது தந்தை கொல்லப்பட்டார் என்ற உண்மையை ஆஷாதேவி கௌதமிற்கு வலியுறுத்துகிறாள். கௌதமின்  சொத்துக்களைக் கைப்பற்ற நினைக்கும் தாய்மாமனை எதிர்த்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தருகின்றாள். கௌதமை ஒரு சமூக சேவகனாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கின்ற சொத்துக்கள் ஏழை எளியவர்களுக்கும் பயன்பட வேண்டும். அனைவரும் பலனடைதல் வேண்டும் எனும் கருத்தை ஆஷாதேவி கதாப்பாத்திரத்தின் வழி அப்பாஸ் விவரிக்கின்றார்.
இருளும் ஒளியும் புதினத்தில் கந்தன் படப்பு உதியாளன். இந்திரா பாடல் காட்சிகளில் நடனமாடுபவள். திரைத்துறையில் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என இவர்கள் மட்டுமே அதிக இலாபம் அடைகின்றனர். ஏனைய திரைத் துறை சார்ந்த தொழிலாளர்கள் அனைவரும் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய நிலையை எதிர்த்து திரைத்துறை சார்ந்த தொழிலாளார்கள் அனைவரும் போராட்டம் நடத்துவது என முதல் கூட்டத்தில் தீர்மானிக்கின்றனர். அதனை ஆதரித்து கந்தனும் இந்திராவும் முன்னின்று முழக்கம் எழுப்பினர். கந்தன் போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்க எண்ணிய தயாரிப்பாளர் சேட்ஜி கந்தனுக்குத் துணை இயக்குனர் பதவி உயர்வு தந்து ஊதியத்தையும் உயர்த்துகிறார். இந்திராவைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ இதுவே சிறந்த வழி என போராட்டத்திலிருந்து விலகுகிறான். இது போன்ற பலரின் பேராசையின் காரணமாக நடக்கவிருந்த போராட்டம் நின்றுவிட்டது. பதவி உயர்வு என்பது போராட்டத்தைத் தடுப்பதற்கான ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்படுகின்ற சூழ்ச்சி என்று அப்பொழுதுதான் கந்தனுக்குப் புரிந்தது. போராட்டம் நின்றுவிட்ட நிலையில் இந்திரா கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாள் என்பது தெரிந்து இந்திராவும் துரோகம் செய்துவிட்டாள் என அவள் மீது கோபம் கொள்கிறான். “இந்திரா! நீ பணம், புகழ், பட்டுப் புடவைகளுக்காக உனது கற்பையும் விற்றுவிட்டாயா? என்றான். தன்மானத்தை விற்பதின் இரகசியத்தை நீர் அல்லவோ கற்றுக் கொடுத்தீர் உமது துரோகத்தின் காரணமாக வேலை நிறுத்தம் முறிந்து விட்டது. திரையுலகில் நாம் கௌரவத்தோடு வாழ அது இறுதி சந்தர்ப்பமாக இருந்தது. இப்போது வேறு நம்பிக்கையே இருக்கவில்லை.”[5] என பதவி ஆசையின் காரணமாக கந்தன் போராட்டத்திலிருந்து விலக்கியதை இந்திரா சுட்டிக் காட்டினாள். முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையேயான போராட்டம் திரைத்துறையில் மட்டும் அல்லை. ஒவ்வொரு துறைகளிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இது போன்ற போராட்டங்கள் ஒவ்வொரு முறையும் தோல்வியுறுகின்ற பொழுது அதற்கு கந்தன் போன்ற சுயநலவாதிகள் இருப்பதால்தான் என்ற கருத்தினை இந்திரா காதாப்பாத்திரத்தின் வழியாக வலியுறுத்துகின்றார்.
கண்ணாடிச் சுவர்கள் புதினத்தில் மஹ்மூதா தேசப்பற்று நிறைந்த பெண் கதைமாந்தர். இப்புதினம் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் காலக் கட்டத்தைப் பதிவு செய்துள்ளது. மஹ்மூதா, சலீம் இருவரும் காதலர்கள். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் சலீம் பாகிஸ்தான் நாட்டிற்கு குடிபெயருகிறான். மஹ்மூதாவையும் பாகிஸ்தான் நாட்டிற்கு வரும்படி பலமுறை கடிதம் எழுதுதியும் தான் பிறந்து, வளர்ந்த தாய்நாட்டினை விட்டுச் செல்ல மனமின்றி காதலைத் தியாகம் செய்கிறாள். காதலை விடவும் நாட்டுப் பற்று முக்கியமானது என்பதை மஹ்மூதா கதாப்பாத்திரத்தின் வழி ஆசிரியர் வலியுறுத்துகின்றார்.
நக்சலைட்டுகள் புதினத்தில் அஜிதா நக்சலைட் இயக்கத்தில் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றாள். இயக்கத்திற்கான போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனைக் கைதியாகிறாள். அஜிதா தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முன் நக்சலைட் இயக்கத்தின் நடவடிக்கைகளை மாற்ற வலியுறுத்துகிறாள். தோழர்களே! நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களில் பலர் நிறைய கொலைகள் செய்து இருக்கிறார்கள். உங்களில் பலர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். ஆனால் இது புரட்சியின் பக்கம் நம்மை அழைத்துச் சென்று இருக்கிறதா என்பதை நினைத்துப் பாருங்கள். கொலைகள் மூலம் புரட்சியை தோற்றுவிக்க முடியாது. மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களை விழிப்படையச் செய்வதுதான் புரட்சிக்கான வழியாகும். மரணத்தின் வாசலில் நிற்கும் போது இந்தச் செய்தியை அனுப்புகிறேன். உங்கள் வழிமுறைகளைப் பற்றி மீண்டும் யோசனை செய்யுங்கள்.[6] இக்கூற்றின் வழி அப்பாஸ் அரசாங்கத்திற்குச் சாதகமான வாதத்தினை முன்வைக்கின்றார். வன்முறையில் ஈடுபடுவதை விடுத்து அமைதி வழியில் மக்களை ஒன்றிணைத்து சட்டங்களைப் பின்பற்றி நடப்பதே முறையானது என்பதை நக்சலைட் இயக்கப் போராளி அஜிதா வாயிலாகவே எடுத்துரைக்கின்றார்.
அப்பாஸ் புதினங்கள் வழி மேற்கண்ட பெண் கதை மாந்தர்களின் நடத்தை வகைமைகள் சமூகத்திற்கு ஏதேனும் கருத்தை வலியுறுத்தும் தன்மை கொண்டு விளங்குகின்றன. பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்தும் அப்பாஸ் அரசாங்கத்திற்கு எதிரான செயல்பாடுகளை எதிர்க்கின்றார். அதோடு தேசப்பற்று உடையவராயிருத்தல் வேண்டும் என்பதையும் வலியுறுதுகின்றார். இத்தகு கருத்துக்களை வெளிப்படுத்த அப்பாஸ் தனது புதினங்களில் பெண் கதைமாந்தர்களையே தேர்ந்தெடுத்துள்ளார்.  
எதிர்த்துப் போராடும் நடத்தையர்
            எதிர்த்துப் போராடும் நடத்தையர் என்போர் உடல் வலிமையும் உளத்திண்மையும் ஒருங்கே கொண்டிருப்பர்; தம் ஆற்றல் மீது திடமான நம்பிக்கை கொண்டிருப்பர்; சவால்களையும் சண்டைகளையும் எப்போதும் தயங்காமல் எதிர்கொள்வர். எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அதன் பின்விளைவுகளையும் சிறிதும் சிந்திக்காமல் செயலாற்றுவர்
            எதிர்த்துப் போராடும் குண இயல்புகளுடைய பெண் கதை மாந்தர்களை அப்பாஸ் புதினங்கள் வழி இருவகைப்படுத்தலாம். 1. தனிமனித உரிமைக்காகப் போராடும் நடத்தையர். 2. சமூகம் உரிமைக்காகப் போராடும் நடத்தையர். இதனடிப்படையில் வலியுறுத்துதல் நடத்தை கொண்ட பெண் கதைமாந்தர்கள் அனைவரும் போராடும் நடத்தை உடையவர்களாகவும் விளங்குகின்றனர். போராட்டத்தின் விளைவாக ஏதேனும் கருத்தை சமூகத்திற்கு வலியுறுத்துகின்றனர். இத்தகு போராட்ட குணமுடைய பெண் கதைமாந்தர்களையே அப்பாஸ் புதினங்களில் பெரும்பான்மையாகக் காண முடிகின்றது.   
          பிறப்பு முதல் இறப்பு வரை ஆண்களின் ஆதிக்கத்தால் பெண்கள் பாதிக்கப்படுவதும் அதனை எதிர்த்துப் போராடுவதும் இன்றளவும் தொடர்கிறது. பெரும்பாலும் பாலியல் சார்ந்த சிக்கல்களால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழலில் பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ள ஆணாதிக்க மனநிலையை எதிர்த்துப் போராட வேண்டி உள்ளது. தனிமனித உரிமை சார்ந்து போராடும் குணமுடையவராக இருதுளி நீர் புதினத்தில் கௌரி மற்றும் சோணகி ஆகிய இருவரும் திகழ்கின்றனர். ராஜஸ்தானில் உள்ள பாரதீய கிராமத்திற்கு கால்வாய் கொண்டு வருவதற்காக கங்காசிங் வெளியூரில் தங்கிப் பணிபுரிகிறான். தண்ணீர் எடுத்து வருவதற்காக கங்காசிங்கின் தங்கை சோணகியும் பல மைல்கள் கடந்து சென்றுவிட்டாள். வீட்டில் இருந்த கங்காசிங்கின் மனைவி கௌரி ஊருக்குள் நுழைந்த திருடனிடம் சிக்கிக்கொண்டாள். அவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன்னைத் தயார்படுத்திக் கொண்ட கௌரியின் செயலை அப்பாஸ் பின்வருமாறு விளக்குகையில், “திருடன் ஏதாவது சொல்வதற்கு, ஏதாவது சிந்திப்பதற்கு முன்னாள் கௌரி வேகமாகக் குடிசையினுள் சென்றாள். இரண்டு வினாடிகளில் வெளியே வந்து நின்றாள். அவள் கையில் உரைபோட்ட வாள் இருந்தது. திருடனுக்குப் பக்கத்தில் வந்து அவள் அந்த வாளைக் காட்டினாள். இது என் கணவனின் வாளாகும். நாள் முழுவதும் கல் மீது இதைத் தீட்டிக் கூர்மையாக்கி வருகிறேன், என்றவாறு உரையிலிருந்து வாளை எடுத்துத் திருடனை நோக்கிப் பாய்ந்தாள்.”[7] எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பாகவே கௌரி தன்னைக் காத்துக் கொள்வதற்காக திருடனை எதிர்த்துப் போராடத் துணிந்து விட்டாள். சோணகியின் போராட்டம் இச்சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தண்ணீர் எடுக்க சென்ற சோணகியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த கங்காசிங்கின் நண்பன் மங்கள்சிங் கற்பழித்து கொலை செய்ய முயற்சிக்கிறான். தன் உயிரைப் பாதுகாக்க வேண்டி சோணகி மங்கள்சிங்கிடமிருந்த துப்பாக்கியை பறித்து அவனை சுட்டதில் மங்கள்சிங் மணல் மீது சாய்ந்து விடுகிறான்.  
            அப்பாஸ் தனது புதினங்களில் சமூக உரிமைக்காகப் போராடுபவர்களாக ஏழு இந்தியர்கள்  புதினத்தில் மாரியா மற்றும் நக்சலைட்டுகள் புதினத்தில் அஜிதா போன்ற பெண் கதைமாந்தார்களைப் படைத்துள்ளார். மாரியாவின் குடும்பம் போர்ச்குக்கீசியர்களால் சீர்குழைக்கப்பட்டதன் விளைவாக மாரியா கோவாவின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள். மாரியாவின் தலைமையில் பஞ்சாப்பிலிருந்து ஜோகெந்தர் நாத், சென்னையிலிருந்து மகாதேவன், உத்திரப் பிரதேசத்திலிருந்து ராம்பகத் சர்மா, பீகாரிலிருந்து அன்வர் அலி, மகாராஷ்ட்ரத்திலிருந்து சகாராம் சிக்காவ் ஆகிய அறுவர் கோவா விடுதலைப் போராளிகளாகத் திகழ்ந்தனர்.
            நக்சலைட்டுகள் புதினத்தில் அஜிதா நக்சலைட் இயக்கத்தில் போராளியாகத் திகழ்பவள். அஜிதாவின் காதலனும் நக்சலைட் இயக்கத்தில் போராளியாகத் திகழ்பவன். நக்சலைட்டுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆனந்த் வருகிற வழியில் காவல் துறையினர் அவனைப் பின்பற்றி வந்ததை அறிந்த அஜிதா, காதலனை விட இயக்கத்தின் வெற்றிதான் முக்கியம் என ஆனந்தைக் கொன்று விடுகிறாள். சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் நக்சலைட் இயக்கத்திற்குக் கூற வேண்டிய செய்தியை தனது இரத்தத்தால் எழுதி அனுப்பினாள் என ஆசிரியர் அஜிதாவின் போராட்ட உணர்வை வெளிப்படுத்துகின்றார்.
நிறைவுரை  
          நடத்தை உளவியல் நோக்கில் அப்பாஸ் புதினங்களில் பெண்கள் என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட இக்கட்டுரையில் நடத்தை உளவியல் கூறுகள் அனைத்தையும் விளக்காவிட்டாலும் நடத்தை உளவியலில் அடிப்படைக் கூறுகளாக விளங்கும் நடத்தை வகைமை அடிப்படையில் அமைந்த பெண் கதைமாந்தர்களை 1. ஒத்திசைவு நடத்தையர் 2. வலியுறுத்து நடத்தையர் 3. எதிர்த்துப் போராடும் நடத்தையர் என்ற மூன்றின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது. இம்மூன்று நடத்தை முறைகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கின்ற பொழுது அப்பாஸ் புதினங்களில் ஒத்திசைவு நடத்தையுடைய பெண் கதை மாந்தர்களை அரிதாகவே படைத்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.  அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு சில பெண்கதைமாந்தர்களை சமூகத்தில் பெண் கொடுமைகள் இவ்வாறெல்லாம் நடைபெறுகின்றன என்பதை குறிப்பிடுவதற்காக படைத்துக் காட்டியுள்ளார் எனலாம்.  பெரும்பாலும் போராடும் நடத்தையர் போராட்டத்தின் வழி சமூகத்திற்கு ஏதேனும் கருத்தை வலியுறுத்துபவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வாறு போராடும் நடத்தையுடைய பெண்களை விளைவிற்கு முன்னும் விளைவிற்குப் பின்னும் போராடுபவர்கள் எனலாம். இதனடிப்படையில் விளைவிற்கு முன் போராடுபவர்கள் இருதுளி நீர் புதினத்தில் வருகின்ற கௌரி’, மற்றும் நக்சலைட் புதினத்தில் உள்ள அஜிதா போன்றோராவர். விளைவிற்குப் பின் போராடுபவர்களாக இறுதுளி நீர் புதினத்தில் சோணகி மற்றும் ஏழு இந்தியர்கள் புதினத்தில் உள்ள மாரியா போன்றோராவர். மேலும் அப்பாஸின் புதினங்களில் பெண்கள் முக்கியக் கதைமாந்தாராக இடம் பெற்றிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆண்களுக்கு நிகராக செயல்படும் திறன் படைத்தவர்களாகவும் தலைமைப்பண்பு உடையவர்களாகவும் படைத்துள்ளார். இந்திய விடுதலைக்குரிய காலக் கட்டங்களில் இவ்வாறு எழுதியதன் வழி பெண்கள் குறித்த உயர்வான கருத்தினை அப்பாஸ் கொண்டிருந்தார் என்பதை இவரது புதினங்கள் வழி அறியமுடிகின்றது.
துணை நூற்பட்டியல்
Govindaswamy Rajagopal, 2014, Mind and conduct Behavioural Psychology in the Sangam Poetry, New Delhi: Sun International Publishers.
அப்பாஸ் கே.ஏ, 1977, இரு துளி நீர், மொ - முக்தார், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
அப்பாஸ் கே.ஏ, 1967, இருளும் ஒளியும், மொ - முக்தார், சென்னை: தமிழ்ப்பண்ணை
அப்பாஸ் கே.ஏ,1977, ஏழு இந்தியர்கள், மொ - முக்தார், சென்னை: பூம்புகார்
அப்பாஸ் கே.ஏ, 1977, ஒரு புதிய காலை புலர்ந்தது, மொ – முக்தார், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
அப்பாஸ் கே.ஏ, 1977, கண்ணாடிச் சுவர்கள்,  மொ – முக்தார், சென்னை: பூம்புகார்
அப்பாஸ் கே.ஏ, 1983, நக்ஸலைட்டுகள், மொ – முக்தார், சென்னை: பூம்புகார்
அப்பாஸ் கே.ஏ, 1983, மூன்று சக்கரங்கள், மொ – முக்தார், சென்னை: பூம்புகார்
பெனடிக்ற் பாலன், யோ., 1996, கல்வி உளவியல் அடிப்படைகள், இலங்கை: பூபால சிங்கம் புத்தக சாலை.
மீனாட்சி சுந்தரம், அ., (4 ஆம் பதிப்பு 2014), கற்றல் மற்றும் மனித வளர்ச்சி உளவியல், திண்டுக்கல்: காவ்யமாலா பதிப்பகம்.
ஜமாஹிர், பீ, எம்., 2002, பொது உளவியல் ஓர் அறிமுகம், இலங்கை: தென்கிழக்கு ஆய்வு மையம்.




[1] மீனாட்சிசுந்தரம். அ, கற்றல் மற்றும் மனித வளர்ச்சி உளவியல்,. 3.
[2] ஜமாஹிர், பீ, எம்., பொது உளவியல் ஓர் அறிமுகம், இலங்கை 
[3] மீனாட்சிசுந்தரம். அ,  கற்றல் மற்றும் மனித வளர்ச்சி உளவியல்,. 10.
[4] அப்பாஸ் கே.ஏ., மூன்று சக்கரங்கள், பக் – 63.
[5] அப்பாஸ், கே.ஏ., இருளும் ஒளியும், பக் – 140.
[6] அப்பாஸ் கே. ஏ., நக்சலைட்டுகள், பக் – 149.
[7] அப்பாஸ் கே. ஏ. இருதுளி நீர், பக் – 115.