த.ஜெயகாந்தன்,
கே.ஏ.அப்பாஸ் புதினங்களில் பெண்கள்
முன்னுரை
மனித
வாழ்க்கையை அவர்களின் நம்பிக்கைகளோடும் விமர்சனங்களோடும் வெளிப்படுத்தும் ஊடகங்களில்
முக்கியமானதாக இலக்கியம் திகழ்கிறது. அவ்விலக்கியம் சமூகக் கருத்தியல்களுக்கு ஏற்ப
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனக்கான விதிமுறைகளை மாற்றிக்கொள்கிறது. அதே போன்று
இலக்கியத்தின் தாக்கம் சமூக மாற்றத்திற்கு முக்கியக் காரணியாகவும் விளங்குகிறது.
இவ்வாறே இலக்கியமும் சமூகமும் ஒன்றுடன் ஒன்று உறவாடிக் கொள்கின்றன. சமூகக்
கருத்தியல்களுக்கு மனித வாழ்க்கை அடித்தளமாக விளங்குவது போன்று இலக்கிய
உருவாக்கத்திற்கும் மனித வாழ்க்கை அடித்தளமாகின்றது. மனித வாழ்க்கைக்கு அடித்தளமாக
விளங்குவது மனித செயல்பாட்டில் தோன்றுகின்ற முரண்பாடுகளே ஆகும். முரண்பாடுகள் மனித வாழ்வை ஒரு நிலையிலிருந்து மற்றொரு
நிலைக்கு இட்டுச் செல்கின்றன. அவை சாதகமானவைகளாகவோ எதிர் விளைவுகளைக்
கொண்டவைகளாகவோ அமையப் பெறலாம்.
முரண்பாடுகளுடன் கூடிய மனித வாழ்க்கை சிக்கலுக்குரியதாகிறது. ஆணாதிக்கக் கருத்தியல்
கொண்ட சமூகத்தில் பெண்களின் வாழ்வு மேலும் சிக்கலுக்குரியதாகிறது.
சிக்கல்கள்
நிறைந்த மனித வாழ்வில் பாலியல் ரீதியான முரண்பாடுகளுள் முதன்மையானதாக ஆண் × பெண்
என்ற கருத்தாக்கங்கள் விளங்குகின்றன. ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் பற்றியான
கருத்துருவாக்கம் ஆண்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்படுவதால்,
பெண்களின்
வாழ்வு ஆணாதிக்கக் கருத்தியலோடு முரண்பட்டும் இயலாத நிலையில் உடன்பட்டும்
அமைகின்றது. முரண்பாடுகள் நிறைந்த நிலையில் பெண்கள் ஒவ்வொரு நாளும் சமூகக்
கட்டுப்பாடுகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காகப் போராட வேண்டியுள்ளது.
ஆணாதிக்கச்
சிந்தனைப் போக்கினை எதிர்த்து பெண்ணியச் சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்குப் பெரிதும் துணை நிற்கின்ற
முக்கியமான இலக்கிய வடிவமாகப்
புதினம் விளங்குகிறது எனலாம். அதனடிப்படையில் இந்திய இலக்கியத் தளத்திலிருந்து
தமிழ் இலக்கியத்தைச் சார்ந்த எழுத்தாளர் த.ஜெயகாந்தன் (1934 – 2015) எழுதிய புதினங்களையும்
உருது இலக்கிய எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் (1914 – 1987) எழுதிய புதினங்களையும்
அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு அவர்களின் புதினங்களில் படைக்கப்பட்ட பெண் கதைமாந்தர்களை
அவர்கள் வாழ்க்கையோடு நிகழ்த்துகின்ற போராட்டங்களைப் படைப்பாசிரியர்களின்
அணுகுமுறைகளோடு ஒப்பிடுவதன் வழி இவ்விரு படைப்பாளர்களின் பெண்ணியக்
கருத்தாக்கத்தினை அறிவதாக இக்கட்டுரை அமைகிறது. குறிப்பாக இவர்கள் படைத்துள்ள பெண்
கதை மாந்தர்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண் கதைமாந்தர்களின் வாழ்க்கை
எத்தகையப் போக்கினைக் கொண்டிருக்கின்றது என்பதைப் பற்றி இக்கட்டுரையின் வழி விளக்கப்படுகிறது.
பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட
பெண்களின் வாழ்க்கை சமூகத்தில் பெரும் சிக்கல்கள் நிறைந்ததாக விளங்குகிறது.
அவர்கள் சமூக அங்கீகாரத்திற்காக ஆணாதிக்கச் சமூகத்தோடு போராடுகின்றனர். சமூகக்
கட்டுப்பாடுகள் எனும் அடக்குமுறைகளிலிருந்து விலகி,
இயல்புநிலைக்குத் திரும்புவதற்காக ஒவ்வொரு நாளும் சமூகத்தை எதிர்த்து அவர்கள்
தங்களது வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
பாலியல்
ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள்
பெண்களின்
பாலியல் ரீதியான பாதிப்பு என்பது ஏதேனும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு
சூழலில் வலிந்தோ அல்லது ஏமாற்றப்பட்டோ அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுத்தப்பட்ட
பின்னர் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்கின்ற
பிரச்சினைகளைக் குறிக்கின்றது. பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட நிலையில் பெண்கள் ஆணாதிக்கச் சமூகத்தால்
வரையறுத்து வைக்கப்பட்டிருக்கும் சமூகச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக்
கொண்டு தங்களது அன்றாட வாழ்வில் அனுபவிக்கின்ற துன்பங்களிலிருந்து விடுவித்துக்
கொள்வதற்கான முயற்சியில் அவர்களின் வாழ்வு துன்பகரமானதாகிறது. மேலும் சமூகத்தில்
நடைபெறுகின்ற அநீதிகளுக்கு எதிராக தங்களை அற்பணித்துக் கொள்ளுகின்ற நிலையிலும் இத்தகையப்
பெண்களது வாழ்க்கை மாற்றப்படுகின்றது.
ஜெயகாந்தன்
மற்றும் அப்பாஸ் புதினங்களில் படைக்கப்பட்டுள்ள பெண் கதைமாந்தர்களை அடிப்படையாகக்
கொண்டு இத்தகையப் பெண்களின் போராட்டத்தினை
1. சுயம் சார்ந்து போராடுபவர்கள் என்றும் 2. சமூகம் சார்ந்து போராடுபவர்கள் என்றும்
இரு வகைப்படுத்தலாம். அவை முறையே பாதிப்பினைத்
தொடர்ந்து சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்தும்
அதன் பாதிப்புக்களிலிருந்தும் சுயம் சார்ந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல்
வேண்டி,
சமூகத்தொடு தன்னை இணைத்துக் கொள்ளுதல் வேண்டிப் போராடும் பெண்கள் சுயம் சார்ந்து
போராடுபவர்கள் என்றும் தன்னுடைய சுயம் சார்ந்த பிரச்சினைகளை விடுத்து சமூகப்
பிரச்சினைகளுக்காகத்
தன்னை அற்பணித்துக் கொள்கின்ற பெண்கள் சமூகம் சார்ந்து போராடுபவர்கள் என்றும் வகைப்படுத்திக்
கொள்ளலாம்.
சுயம்
சார்ந்து போராடுபவர்கள்
ஜெயகாந்தன்
தன் படைப்புக்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் “என் கதைகளில் வருகின்ற எல்லாப்
பாத்திரங்களுமே நான்தான். என் கதைகளில் வருகிற எல்லாப் பாத்திரங்களிலுமே ஒன்றைக்
கவனியுங்கள்;
என் பாத்திரங்களில் யாருமே முழுக்க முழுக்க நல்லவர்களுமில்லை கெட்டவர்களுமில்லை –
நான்தான். நான் போட்டுக் கொள்ளுகின்ற வாழ்க்கையில் சந்தித்த பிறர் மாதிரியான
வேஷங்களே அவை”[1]
என்கிறார். இதனைத் தொடர்ந்தே இவரது புதினங்களில் வருகின்ற பெண் கதைமாந்தர்களையும்
அணுக வேண்டியிருக்கின்றது.
ஜெயகாந்தனின் புதினங்கள் பெரும்பாலும் பெண் கதைமாந்தார்களை மையமிட்டு
இயங்குகின்றன. அதற்கு முக்கியக் காரணமாக அவர் பெரும்பாலும் பாலியல் சிக்கல்களை
மையக் கருவாகக் கொண்டு புதினங்கள் படைத்திருப்பதுவே ஆகும்.
ஜெயகாந்தன்
எழுதிய ‘அக்கினிப்
பிரவேசம்’ (ஆனந்த
விகடன் 1966) எனும் சிறுகதை ‘சில
நேரங்களில் சில மனிதர்கள்’ (1970)
எனும் புதினமாக வளர்ந்து ‘கங்கை
எங்கே போகிறாள்? (1978)
எனும் புதினமாக முடிவடைகிறது. ‘அக்கினிப்
பிரவேசம்’
எனும் சிறுகதையில் பாலியல் உறவிற்கு ஆட்படுத்தப்பட்ட பெண் நீரினால் சுத்தம்
செய்யப்படுகிறாள்,
மன்னிக்கப்படுகிறாள், சம்பவம்
மறைக்கப்படுகிறது. விமர்சனங்களை அடுத்து ‘காலங்கள்
மாறும்’
எனும் தலைப்பில் எழுதத் துவங்கிய புதினம் ‘சில
நேரங்களில் சில மனிதர்கள்’
எனும் தலைப்பில் வெளிவந்தது. இதில் ‘கங்கா’
பாலியல் உறவிற்கு ஆளாகியிருப்பது தெரிந்து அவளை சென்னையில் உள்ள மாமன் வீட்டிற்கு
அனுப்புகின்றனர். பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதால் கங்காவைத் திருமணம்
செய்துகொள்ள யாரும் முன்வரமாட்டார்கள் என்பதை அறிந்து மாமன் அவளை தனக்குரிய ஆசை
நாயகியாக மாற்ற நினைக்கின்றார். அவரது தவறான பார்வையிலிருந்தும் பெண்ணின் மீதான சமூகத்தின்
தவறான புரிதலிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள ‘கங்கா’
சுயம் சார்ந்து போராடுகிறாள். திருமணத்திற்கு முன்பே பாலியல் ரீதியாக
பாதிக்கப்பட்டவள் என்ற சமூகக் கட்டுப்பாட்டில் கங்காவின் வாழ்வு கேள்விக்குறியாகின்றது.
இதிலிருந்து மீண்டுவர,
தன்னுடன் உறவு கொண்டவனைக் (பிரபு) கண்டறிந்து அவனுடன் வாழ்வதுதான் சரி என்பதாக
அவனைக் கண்டடைகின்றாள். சேர்ந்து வாழ நினைக்கின்ற பொழுது அதே சமூகக் கட்டுப்பாடுகள்
மீண்டும் தடையாக நிற்கின்றன. ஏற்கனவே குடும்ப அமைப்பிற்குள் இயங்கி வருபவனை
மற்றொரு குடும்ப அமைப்பிற்குள் கொண்டு வருவதற்காக ஒரு பெண் முயற்சிப்பதை சமூகம் மீண்டும்
விமர்சிக்கின்றது. எனவே கங்காவின் வாழ்க்கைப் போராட்டம் முடிவிற்கு வராமல்
தொடர்கிறது. சமூகத்தால் ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையில் கங்காவின் வாழ்வு ‘கங்கை
எங்கே போகிறாள்?’
என்ற புதினத்தின் வழி கங்கையாற்றில் களப்பதாக (மூழ்கி இறத்தல்) நிறைவடைகின்றது.
‘உன்னைப்போல்
ஒருவன்’
(1964) புதினத்தில் ‘தங்கம்’
ஆதரவற்ற
நிலையில் கட்டிடத்
தொழிலாளியாக சேரியில் வாழ்ந்து வருகின்றாள். இளம் வயதில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு ‘சிட்டி’
எனும் ஆண் பிள்ளையைப்
பெற்றெடுத்து தாயும் மகனுமாக வாழ்ந்து வருகின்றனர். அன்றாட வாழ்வு
வறுமையுடையதாயினும் ஆண் துணையின்றி வாழும் தங்கத்தின் வாழ்வு புதினத்தில் மையப்
பொருளாகின்றது. மீண்டும் தனக்கான ஆண் துணையைத் தேடிக்கொள்ள விழைகின்ற பொழுது சிட்டி
அதற்குத் தடையாக இருகின்றான். ஒரு தாய் என்ற நிலையிலும் ஆண் துணையில்லாத ஒரு பெண்
என்ற நிலையிலும் தங்கத்தின் சுயம் சார்ந்த போராட்டம் தொடர்கிறது. சிட்டியின்
நடவடிக்கை பிடிக்காததால் தங்கத்துடன் சேர்ந்து வாழ நினைத்த ஜோசியக்காரன்,
தங்கம் கற்பமுற்ற நிலையில் விலகிச் செல்கிறான். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன்
தங்கம் இறந்து விடுகின்றாள். அக்குழந்தையும் அனாதையாகிறது. பெண்ணின் வாழ்வில், ஒரு சூழலில்
நடைபெறும் பாலியல் ரீதியான பாதிப்பு இறுதிவரை அவளின் வாழ்வை அர்த்தமற்றதாக
மாற்றுகிறது. அப்பெண் சமூகத்தில் மற்றப் பெண்களைப் போல வாழ்வதற்காக வாழ்க்கை
முழுவதும் போராட வேண்டியுள்ளது.
இலக்கணம்
மீறிய கவிதை (1963) எனும் புதினத்தில் ‘சரளா’
பெற்றோரின்
ஆதரவற்ற சூழலில் வறுமையின் காரணமாக ஒரு வேசிப் பெண்ணாக வாழ்கிறாள். தொழிலை
விட்டுவிட்டு இராமநாதன் என்பவனுடன் குடும்ப வாழ்க்கையை துவங்க நினைக்கின்றாள்.
அதற்குள்ளாக பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக
காவல்
துறையினரால் கைது செய்யப்படுகிறாள். சினிமாவுக்குப் போன சித்தாளு (1972)
புதினத்தில் ‘கம்சலை’
நடிகர் எம்.ஜி.ஆர் திரைப்படங்களின் மீதுள்ள ஆர்வத்தினால் சிங்காரத்தின் பேச்சை
நம்பி ஏமாறுகிறாள். குற்ற உணர்வின் மிகுதியால் கணவன் செல்லமுத்துவிடம் சேர்ந்து
வாழ விரும்பாமல் பைத்தியமாகிறாள். ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (1979) எனும்
புதினத்தில் ‘லீலா’
சிறுமியாக
இருந்த பொழுது இருந்த செல்வம்,
தந்தை இறந்த பிறகு உறவினர்களால் சீர்
குழைப்படுகிறது. வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட லீலா வேசிப் பெண்ணாகிறாள்.
இதற்கிடையில் ஏற்கனவே திருமணமான சபாபதியின் நட்பு தொடர்கிறது. வேசித் தொழிலை
விட்டு சபாபதியின் இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றாள். ஒவ்வொரு
கூரைக்கும் கீழே (1981) எனும் புதினத்தில் ‘மாலதி’
திருமணத்திற்கு
முன்பு ஏற்கனவே திருமணமான ராஜூ என்பவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. சிவகுருநாதனுக்கும்
மாலதிக்கும் நிச்சயம் செய்யப்பட பிறகு மாலதிக்குக் குற்ற உணர்வு மேலிட
ராஜூவிடமிருந்த தொடர்பைத் தவிர்த்து தன்னுடைய நிலையை சிவகுருநாதனிடம்
விளக்குகிறாள். மாலதியின் வெளிப்படையான செயல்பாட்டினால் திருமணத்திற்கு சிவகுருநாதன்
சம்மதம் தெரிவிக்கிறான். இதய ராணிகளும் இஸ்பெடு ராஜாக்களும் (1981) எனும்
புதினத்தில் ‘மேரி’
பெற்றோரின்
ஆதரவின்றி அக்காவின் வீட்டில் வளர்கிறாள். கொடுமையின் காரணமாக வீட்டைவிட்டு
வெளியேறி வேசிப் பெண்ணாகிறாள். சோமநாதன் என்பவனால் மீண்டும் குடும்பம் என்ற
அமைப்பிற்குள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றாள்.
மேற்கண்ட
நிலைகளில் வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளினால் பாலியல் ரீதியாகப் பதிக்கப்பட்ட பெண்கள்
ஜெயகாந்தன் புதினங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஒவ்வொருவரும் பாலியல்
ரீதியாகப் பாதிக்கப்பட்ட பின்னர் அப்பாதிப்பிலிருந்து
மீண்டு குடும்பம் என்னும் சமூக அமைப்பிற்குள்ளாக தங்களை இணைத்துக்கொள்ளப்
போராடுகின்றனர். இத்தகையப் போராட்டம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் தொடர்கின்றது.
சமூகம்
சார்ந்து போராடுபவர்கள்
அப்பாஸ்
எழுதிய பெரும்பாலான புதினங்களில் முதன்மைக் கதைமாந்தர்களாகப் பெண்கள்
விளங்குகின்றனர். உதாரணமாக ஏழு
இந்தியர்கள் புதினத்தில் மாரியா,
கண்ணாடிச் சுவர்கள் புதினத்தில் மம்முதா,
நான்கு நண்பர்கள் புதினத்தில் கௌரி,
இருதுளி நீர் புதினத்தில் சோணகி மற்றும் கௌரி,
பாபி புதினத்தில் பாபி,
மூன்று சக்கரங்கள் புதினத்தில் சாந்தா மற்றும் ரேகா,
நக்சலைட் புதினத்தில் அஜிதா,
இருளும் ஒளியும் புதினத்தில் இந்திரா,
ஒரு புதிய காலை புலர்ந்தது புதினத்தில் ஆஷா தேவி. அப்பாஸ் தனது படைப்புகள் பற்றிக்
குறிப்பிடுகையில் “நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் மனிதனின் அந்தரங்க
வாழ்வுக்கும் வெளிப்புற சமூகப்
பொருளாதார வாழ்க்கைக்கும் இடையில் ஒர் ஆழமான பொருள் நிறைந்த சம்பந்தமும் உறவும்
இருக்கிறது. உலகில்,
அவனது சொந்த வீட்டில்,
அவனுடைய சமூகத்தில் நடைபெறும் சம்பவங்கள்,
பிரதிபலிப்பு அவனுடைய செய்கைகளிலும் நடையிலும் காணப்படுகிறது. உலகத்தின் - சமூகத்தின்
- நாட்டின் பொருளாதார அரசியல் சமூக அமைப்புகள் எப்படி மாறுகின்றனவோ அதே வகையில்
மனிதனும் மாறுகிறான்.”[2]
எனக் குறிப்பிடுகின்றார். அதாவது தனிமனித செயல்பாடுகள் அனைத்தும் சமூக மாற்றத்தினால்
தீர்மானிக்கப்படுகின்றன. ஜெயகாந்தன் தன் படைப்புக்களில் வருகின்ற கதை மந்தர்களைப்
பற்றிக் குறிப்பிடுன்ற பொழுது அவர்கள் அனைவரும் நான்தான் என தனிமனித
நிலையிலிருந்து சமூகத்தை அணுக முயற்சிப்பதும்,
அப்பாஸ் சமூக மாற்றத்தின் வழி தனிமனித செயல்பாட்டினை மாற்ற முயற்சிப்பதுமாகவே
இவ்விருவரின் புதினங்களும் அமைகின்றன.
ஏழு
இந்தியர்கள் எனும் புதினத்தில் ‘மாரியா’வின்
பெற்றோர்கள் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் கோவா இருந்த பொழுது பிரெஞ்சுப்
படைவீரர்களால் கொல்லப்படுகின்றனர். மாரியாவின் சகோதரன் சிறையில் அடைக்கப்படுகிறான்.
மாரியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு யாருமற்ற அநாதையாக்கப்படுகிறாள். கோவாவின்
விடுதலைக்காக பிரெஞ்சுக் காலனியாதிக்கத்தை எதிர்த்து உருவான புரட்சிகர அமைப்பில்
இணைகிறாள். இவ்வியக்கம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஆறு இளைஞர்களைத்
தேர்ந்தெடுத்து போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகிறது. அவர்களுக்கு வழிகாட்டியாக ஆண்
வேடத்தில் வரும் ‘மாரியா’
பின்னர்
தான் ஒரு பெண் என்பதைக் கூறுகின்றாள். அதுவரை தங்களுடன் இணைந்து போராடிய ஏழாவது
நபர் ஒரு பெண் என்றறியாத மற்ற ஆறு பேரும் அவளை பாலியல் உறவிற்கு வற்புறுத்த
விழைகின்றனர். “மாரியா கோபத்தை வெளிப்படுத்தவில்லை. நீங்கள் ஆறு பேர்,
அவர்களோ! ஒன்பது பேர்களாக இருந்தார்கள்."[3]
என ஏற்கனவே தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பிரெஞ்சுப் படை வீரர்களைப்
பற்றிக் கூறத் துவங்குகிறாள். இதைக் கேட்ட
மற்ற ஆறு பேரும் தங்களது இழிவான எண்ணம் குறித்து வெட்கித் தலை குனிகின்றனர். அன்றிலிருந்து
மாரியாவின் தலைமையில் போராட்டம் நடத்தப்படுகிறது. இறுதியாகப் பிரெஞ்சுப் படையினரால்
சிறைபிடிக்கப்பட்ட மாரியா உடல்நிலை சரியில்லாமல் இறந்து போகிறாள். மாரியா நடத்திய
போராட்டத்தின் விளைவாக மக்கள் விழிப்படைந்து போராட்டங்கள் பெருகி மாரியாவின்
இறப்பிற்கு முன்பாகவே கோவாவின் விடுதலை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அப்பாஸ் தனது
புதினத்தில் பெண்ணிற்கு ஏற்பட்ட பாலியல் சம்பவம் அவளை சமூகப் பிரச்னைக்காகப்
போராடுகின்ற புரட்சிகரப் பெண்ணாக மாற்றுவதினைக் குறிப்பிடுகின்றார். அதே போன்ற
சம்பவம் ஜெயகாந்தன் பார்வையில் அவளை இச்சமூகத்தில் சுயம்சார்ந்த தனிமனிதப் பிரச்சினைக்காகப்
போராடுகின்ற பெண்ணாக மாற்றுகிறது. இருவரும் திருமணத்திற்கு முன்பாக பாலியல்
ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்களைத் தலைமைப் பாத்திரங்களாகக் கொண்டு
எழுதியிருப்பினும் அக்கதை மாந்தர் எதிர்கொள்கின்ற சிக்கல்களை வெவ்வேறு நிலையில் இருந்து அணுகுகின்றனர்.
இருதுளி
நீர் புதினத்தில் ‘சோணகி’
தண்ணீர்
எடுக்கச் சென்ற இடத்தில் மங்கள் சிங் என்பவனால் பாலியல் உறவிற்கு
உட்படுத்தப்படுகிறாள். அங்கிருந்து தப்பித்துச் சென்ற சோணகி ஊருக்காகக் கால்வாய்
வெட்டும் பணியில் ஊதியமற்ற தொழிலாளியாகப் பணி புரிகிறாள். இறுதியில் கால்வாய்
வெட்டும் பணியில் பொறியாளராக இருந்த கௌல் என்பவனைத் திருமணம் செய்து கொள்கிறாள்.
திருமானத்தைத் தொடர்ந்து கால்வாய் வெட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்
கொள்கிறாள்.
கண்ணாடிச்
சுவர்கள் புதினத்தில் ‘மஹ்மூதா’
அலிகரில் படித்து பட்டம் பெற்றவள். சலீம் என்பவனை காதலிக்கின்றாள். இருவரும் வேலை
காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். திருமணம் செய்யப் போகிறோம் என்ற நம்பிக்கையில்
மஹ்மூதா சலீமுடன் பாலியல் உறவிற்கு உடன்படுகின்றாள். இந்தியா பாகிஸ்தான்
பிரிவினையில் சலீம் பாகிஸ்தானைத் தனது தாய்நாடாக ஏற்று பாகிஸ்தான் செல்கிறான்.
மஹ்மூதாவும் பாகிஸ்தானியாக மாற விரும்பினால் திருமணம் செய்து கொள்வதாகக்
கூறுகிறான். திருமணம் என்ற உறவினால் நாடுவிட்டு நாடு மாற வேண்டிய நிலையை வெறுத்து
நாட்டுப் பற்றின் காரணமாக இந்தியாவிலேயே மஹ்மூதா
தங்கிவிடுகின்றாள்.
ஏழு
இந்தியர்கள் புதினத்தில் மரியா நாட்டின் விடுதலைக்காக போராடுபவளாகவும் இருதுளி
நீர் புதினத்தில் சோணகி ஊருக்கு வேலை செய்யும் சேவகியாகவும் கண்ணாடிச் சுவர்கள்
புதினத்தில் மஹ்மூதா நாட்டுப் பற்றின் காரணமாக திருமணத்தை வெறுத்து தன்னுடைய
நாட்டிலேயே தங்கும் நாட்டுப்பற்று உடையவளாகவும் அப்பாஸ் தனது புதினங்களில்
சித்தரித்துள்ளார். இவருடைய புதினங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள்
தங்களுடைய வாழ்க்கை குறித்து சுயம் சார்ந்து போராடுவதினை விடுத்து சமூகம் குறித்த
சிந்தனை உடையவர்களாக சமூகத்தின் தேவைக்காக செயல்படுபவர்களாக
சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட
பெண்களின் இயல்புகள்
சமூகம்
சார்ந்து போராடுகின்ற நிலையில் மனதளவிலும் உடலளவிலும் வலிமையுடைய பெண்
கதைமாந்தார்களை அப்பாஸ் புதினங்களில் காணமுடிகின்றது. சுயம் சார்ந்து தங்களுடைய வாழ்க்கை
குறித்துப் போராடுகின்ற நிலையில் ஜெயகாந்தன் புதினங்களில் வருகின்ற பெண்
கதைமாந்தர்களின் செயல்பாடுகள் சமூகத்திற்குக் கட்டுப்பட்டதாக எதிர்வினையாற்ற இயலாத
ஒன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அப்பாஸ் புதினங்களில் வருகின்ற பெண்
கதைமாந்தர்களின் செயல்பாடுகள் வீரம் நிறைந்ததாகவும் ஜெயகாந்தன் புதினங்களில்
வருகின்ற பெண் கதைமாந்தர்களின் செயல்பாடுகள் அமைதியான நிலையில் இருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஏழு
இந்தியர்கள் புதினத்தில் ஒருவனான சகாராமின் கையிலிருந்து துப்பாக்கியைக் கைப்பற்ற
நினைக்கும் ‘மாரியா’
அவனைத் தடுத்து நிறுத்துகின்றாள். “சகாராம்
துப்பாக்கியைக் கையிலெடுக்க மாரியா தனது மின்னல் வேகத்தில் கராடே முறையில்
சகாராமின் கையில் அடித்தாள். துப்பாக்கி கீழே விழுந்து விட்டதும் அது மாரியாவின்
கையில் இருந்தது.”[4]
என
மாரியாவின் வீரத்தினை விளக்குகின்றார். இங்கு மாரியா ஒரு வீரப்பெண் என்பதற்கு
அப்பாஸ் விளக்குகின்ற காட்சியிலிருந்து ஜெயகாந்தன் கங்காவைப் பற்றிக் கூறுகின்ற
பொழுது வேறுபடுகின்றார். தன்னுடைய மாமன் தன்னுடன் தாகத உறவு கொள்ள நினைப்பதை
அறிந்த கங்கா காந்தியடிகள் கூறிய கருத்தினைக் கொண்டு எதிர்கொள்கின்றாள். அதாவது “நான்
பெண்களுக்குச் சொல்லுவது இதுதான் உன்னை ஒருவன் பலக்காரமாக கற்பழிக்க முயலும்
பொழுது உனக்கு நான் அகிம்சையை உபதேசிக்க மாட்டேன். நீ எந்த ஆயுதத்தையும் பிரயோகிக்கலாம்.
நீ நிராயுதபாணியாக இருந்தால் இயற்கை உனக்குத் தந்த பல்லும் நகமும் எங்கே போயிற்று?
இந்த
நிலைமையில் நீ செய்கிற கொலையோ அது முடியாத போது நீ செய்து கொள்கிற தற்கொலையோ
பாபமாகாது"[5]
என்ற வரிகளைப் படிப்பதன் வழி தன்னைத் தற்காத்துக் கொள்கின்றாள். இதே சூழலில் பெண்
தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டி செயல்படுகின்ற முறையினை அப்பாஸின் 'மூன்று
சக்கரங்கள்' புதினத்தில்
காணமுடிகின்றது. ‘ரேகா’
உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக மும்பை செல்கிறாள். அங்கு ரமேஷ் என்பவனாள் வழிநடத்தப்படுகின்றாள்.
ரேகாவின் அனுமதியின்று அறைக்குள் நுழைந்த ரமேஷ் அவளுடன் தவறுதலாக நடந்து கொள்ள
முயற்கிறான். ரேகா அவனை எதிர்த்துப் போராடுகின்றாள். "எங்கிருந்தோ
ரேகாவிற்குத் துணிவு வந்துவிட்டது. அவள் புலியைப் போல் பாய்ந்தாள். தனது கைகளை
ஆயுதமாகப் பயன்படுத்தி ரமேஷின் முகத்தில் அடித்தாள். அவளுடைய நகங்கள் நீளமாக
வளர்ந்து இருந்தன. அப்போது அவை அவளுக்குப் பெரிதும் பயன்பட்டன. ஒரே தாக்குதலில்
ரமேஷின் முகத்தில் நீண்ட காயங்கள் தோன்றிவிட்டன."[6]
அவனுடைய பிடி தளர்ந்து விட்டது, ஒரு
புலியின் பற்கள் தனது உதடுகளைக் கடித்து விட்டது போல ரமேஷிற்குத் தெரிந்தது.
வலியால் துடித்த அவன் முழு பலத்தையும் பிரயோகித்து அவளை உதறித் தள்ளினான்.”[7]
இக்காட்சி
கங்கா வாசித்துக் காட்டிய காந்தியின் வரிகளை நினைவூட்டுகின்றது. கங்கா தான் செய்து
விடுவதாகக் கூறியவை ரேகாவின் செயல்களில் வெளிப்படுகின்றன.
உன்னைப்
போல் ஒருவன் புதினத்தில் ‘தங்கம்’
தாய் என்ற முறையில் மகன் சிட்டிக்காகவும் ஆண் துணையின்றி வாழும் ஒரு பெண் என்ற
நிலையில் தன்னைத் தேடி வந்த ஜோதிடன் மாணிக்கத்திற்காகவும் அடங்கிப் போக
வேண்டியுள்ளது. இருவரையும் அமைதிப்படுத்த வேண்டியுள்ளது. சிட்டியின் செயல்களினால்
வெறுப்புற்ற மாணிக்கம் தன்னை விட்டுப் பிரிந்து விடுவானோ என்ற அச்சதில் தங்கம் தினமும்
வாழ்ந்து வருகின்றாள். கண்ணாடிச் சுவர்கள் புதினத்தில் மஹ்மூதாவிற்கு நாடா அல்லது காதலனா
என்ற குழப்பம் நேருகின்ற பொழுது தன்னுடைய வாழ்வு சார்ந்து சிந்திக்காமல்
நாட்டுப்பற்று முதன்மையானதாகக் கருதும்
பெண்ணாக விளங்குகிறாள்.
புதினங்களின்
முடிவுகள்
ஜெயகாந்தன்
புதினங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் சுயம் சார்ந்து
போராடுகின்ற நிலையிலும் அப்பாஸ் புதினங்களில் சமூகம் சார்ந்து போராடுபவர்களாகவும்
சித்தரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் பெண் கதை மாந்தர்களின் செயல்பாடுகள் வீரம்
நிறைந்ததாகவும் மறுபுறம் சமூகக் கட்டுப்பாட்டிற்குள் மாட்டிக் கொண்டு
துன்புறுவதாகவும் அமைகின்றன. அவற்றின் விளைவாகத் தோன்றும் முடிவுகள் இழத்தலும்
ஏற்றலும் எனும் எதிர்வினைகளின் வழி புரிந்து கொள்ளப்படுகிறது. இங்கு இழத்தல்
என்பது உயிரிழப்பு,
உறவுமுறை இழப்பு, ஏற்றல்
என்பது வெற்றியடைதல், அங்கீகரிக்கப்படுதல்
எனப்படுகிறது.
ஜெயகாந்தனின்
சில நேரங்களில் சில மனிதர்கள்,
கங்கை எங்கே போகிறாள்?
புதினங்களில் ‘கங்கா’
கங்கையாற்றில் இறந்துவிடுவதாகவும் உன்னைப் போல் ஒருவன் புதினத்தில் ‘தங்கம்’
குழந்தை பிறந்தவுடன் இறந்து விடுவதாகவும் அமைகின்றன. அப்பாஸின் ஏழு இந்தியர்கள்
புதினத்தில் ‘மாரியா’
போராட்டத்தின் முடிவில் இறந்து விடுகின்றாள். ஆனால் கொள்கையளவில்
வெற்றியடைகின்றாள். மூன்று சக்கரங்கள் புதினத்தில் ‘ரேகா’
இறந்து விடுகின்றாள். ஜெயகாந்தனின் ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் புதினத்தில் ‘லீலா’
இதய ராணிகளும் இஸ்பெடு இராஜாக்களும் புதினத்தில் ‘மேரி’
சினிமாவிற்குப் போன சித்தாளு புதினத்தில் ‘கம்சலை’
ஒவ்வொரு கூரைக்கும் கீழே புதினத்தில் ‘மாலதி’
என அனைவரும் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பின்னரும் சமூகத்தால் ஏற்றுக்
கொள்ளப்படுகின்றனர். அதுபோல இருதுளி நீர் புதினத்தில் ‘சோணகி’
ஏற்றுக் கொள்ளப்படுகின்றாள்.
முடிவுரை
ஜெயகாந்தனும்
அப்பாஸும் தங்களது புதினங்களில் பெண் கதை மந்தர்களை முதன்மைப்படுத்தியுள்ளனர். பெண்களுக்கு
எதிரான பாலியல் குற்றங்களை விமர்சித்துள்ளனர். பெண்களுக்கு ஆதவாக எழுதியுள்ளனர்.
இவ்வாறு ஒன்றுபட்டு நின்றாலும் அப்பாஸ் படைத்துக் காட்டுகின்ற பெண்கள் சமூகம் சார்ந்து
போராடுபவர்களாகவும் ஜெயகாந்தன் படைத்துக் காட்டுகின்ற பெண்கள் சுயம் சார்ந்து
போராடுபவர்களாகவும் விளங்குகின்றனர். பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்களைக்
கதை மாந்தர்களாகத் தேர்ந்தெடுத்துள்ள இரு புதின ஆசிரியர்களும் அவர்கள் எடுத்துக்
கொண்ட கதைத் தாளத்திற்கேற்ப வீரம் நிறைந்தவர்களாகவும் சமூகம் பெண்களுக்கென
கட்டமைத்துள்ள சீர்கேட்டில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து விடுபடுவதற்காகப்
போராடுகின்றவர்களாகவும் வெவ்வேறு
நிலைகளில் விளக்கியுள்ளனர். மேலும் தொடக்ககாலப் படைப்புக்களில் பாலியல் ரீதியாகப்
பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து ஜெயகாந்தன் எழுதிய பொழுது அவர்களின் முடிவு மரணம் அல்லது
சமூக அங்கீகாரமின்மை என்பதை வெளிப்படுத்துவதாகவும் 1980 களுக்குப் பிறகு தோன்றிய எழுதிய
புதினங்களில் இவ்வாறான பெண்களுக்கு வாழ்வியல் அங்கீகாரம் உண்டு என்பதாக கதைகளை
அமைத்துள்ளமை புலனாகின்றது. அப்பாஸ் பாலியல் ரீதியான பாதிப்பிற்கு ஆளான பெண்
கதைமாந்தார்களை புதினங்களில் படைத்திருப்பினும் அவற்றிலிருந்து அவர்கள் மீண்டு
புதிய சிந்தனைகளை உடையவர்களாக சமூகத்திற்காகப் போராடும் திறன் பெற்றவர்களாக
சித்தரிக்கின்றார். இவ்வாறான மாறுபட்ட கண்ணோட்டத்திற்கு இருவரும் தேர்ந்தெடுத்துக்
கொண்டுள்ள கதைத் தாளங்கள் காரணமாக அமைக்கின்றன. அப்பாஸின் புதினங்கள் பெரும்பாலும்
சமூக விடுதலை,
பொருளாதார விடுதலை,
நாட்டு விடுதலை என பரந்துபட்ட நிலையில் கதைத் தளத்தினைக் கொண்டிருப்பதும் ஜெயகாந்தன்
பாலியல் தொடர்புடைய சிக்கல்களை மையப் பொருளாகக் கொண்ட கதைத் தளத்தினைக்
கொண்டிருப்பதும் காரணங்களாகின்றன எனலாம்.
துணை
நூற்பட்டியல்:
அப்பாஸ்
கே.ஏ, 1977,
இரு துளி நீர்,
(மொ.பெ
– முக்தார் பத்ரி), சென்னை:
பூம்புகார் பதிப்பகம்.
அப்பாஸ்
கே.ஏ, 1977,
ஏழு இந்தியர்கள்,
(மொ.பெ
– முக்தார் பத்ரி), சென்னை:
பூம்புகார் பதிப்பகம்.
அப்பாஸ்
கே.ஏ, 1977,
கண்ணாடிச்
சுவர்கள், (மொ.பெ – முக்தார் பத்ரி),
சென்னை:
பூம்புகார் பதிப்பகம்.
அப்பாஸ்
கே.ஏ, 1983,
மூன்று சக்கரங்கள்,
(மொ.பெ
– முக்தார் பத்ரி), சென்னை:
பூம்புகார்
பதிப்பகம்.
ஜெயகாந்தன்,
2010 (3வது பதிப்பு) உன்னைப்போல் ஒருவன்,
ஜெயகாந்தன் நாவல்கள் முதல் தொகுதி,
சென்னை: கவிதா வெளியீடு.
ஜெயகாந்தன்,
2010 (3வது பதிப்பு) சில நேரங்களில் சில மனிதர்கள்,
ஜெயகாந்தன் நாவல்கள் இரண்டாம் தொகுதி,
சென்னை: கவிதா வெளியீடு.
ஜெயகாந்தன்,
2010 (3வது பதிப்பு) கங்கை எங்கே போகிறாள்?,
ஜெயகாந்தன் நாவல்கள் மூன்றாம் தொகுதி,
சென்னை: கவிதா வெளியீடு.
ஜெயகாந்தன்,
2007
(2வது பதிப்பு) சினிமாவுக்குப் போன சித்தாளு,
ஜெயகாந்தன் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி,
மதுரை:
மீனாட்சிப் புத்தக நிலையம்.
ஜெயகாந்தன்,
2007 (2வது பதிப்பு) ஒருமனிதனும் சில எருமை மாடுகளும்,
ஜெயகாந்தன் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி,
மதுரை: மீனாட்சிப் புத்தக நிலையம்.
ஜெயகாந்தன்,
2007 (2வது பதிப்பு) ஒவ்வொரு கூரைக்கும் கீழே,
ஜெயகாந்தன் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி,
மதுரை: மீனாட்சிப் புத்தக நிலையம்.
ஜெயகாந்தன்,
2007 (2வது பதிப்பு) இலக்கணம் மீறிய கவிதை,
ஜெயகாந்தன் குறுநாவல்கள் முதல் தொகுதி,
மதுரை: மீனாட்சிப் புத்தக நிலையம்.
ஜெயகாந்தன்,
2007 (2வது பதிப்பு) இதய ராணிகளும் இஸ்பெடு ராஜாக்களும்,
ஜெயகாந்தன் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி,
மதுரை: மீனாட்சிப் புத்தக நிலையம்.