பெண்ணியச் சிந்தனையாளர்கள்;
தமிழில் பாரதியார்,
உருதுவில் கே. ஏ. அப்பாஸ்.
பெண்ணியம்
ஓரிடத்தில் நிலையாகத் தங்கி பொருள் உற்பத்தியில்
சமூகம் ஈடுபடத் துவங்கியபோது வேட்டைச் சமூகத்தினர் வேளாண் சமூகத்தினராக மாற்றம் பெற்றனர்.
இச்சமூகத்தில் ஆண் முதன்மையானவனாகவும் பெண் அதற்குத் துணை நிற்பவளாகவும் கருதப்பட்டனர்.
ஆகவே உற்பத்தியில் உரிமை உடையவனாக ஆண் கருதப்பட்டான். ஆண் வேளாண் தொழிலில் ஈடுபடுகின்ற
பொழுது பெண் வீட்டு வேலைகளுக்கு உரியவளாகக் கருதப்பட்டாள். அதற்குப் பெண்ணின் உடல்
சார்ந்த சிக்கல்களும் (குழந்தை பெறுவதும் பராமரிப்பதும்) காரணங்களாயின. இத்தகைய பொருளாதாரத்தை
மையமிட்ட வாழ்வில் பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழவேண்டிய நிலை உருவாகியது. ஆண், அதிகாரத்திற்கு
உரியவனாகக் கருதப்பட்டான். இச்சூழலில் தாய்வழிச் சமூகம் சிதைந்து தந்தை வழிச் சமூகம்
தோற்றம் பெறத் துவங்கியது. எனவே இத்தகைய வேளாண் சமூகம், ஆணாதிக்கச் சமூகத் தோற்றத்திற்குக்
காரணமாக அமைந்தது எனலாம். அவ்வாறு தோன்றிய ஆணாதிக்கச் சமூகம் பெண்களை ஆண்களின் உடைமைப்
பொருளாகப் பாவித்தது. காலப் போக்கில் ஆணாதிக்கச் சமூகத்தால் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது.
பெண்களின் சிந்தனைகள் ஆணாதிக்க சமூகத்திற்கு ஏற்றார்போல் மாற்றி அமைக்கப்பட்டது. பெண்களுக்கு
எல்லைகள் வகுக்கப்பட்டது. நூற்றாண்டுகள் பல கடந்தும் ஆண்களின் பார்வையிலேயே பெண்களின்
ஒழுக்கங்கள் வரையறுக்கப்பட்டன. அவ்வாறே இலக்கியங்களும் படைக்கப்பட்டு வந்தன.
இத்தகையப் போக்கினை எதிர்த்து மேலைநாட்டின்
தாக்கத்தால் இந்திய சமூகத்தில் (20ஆம் நூற்றாண்டு) பெண்களின் விடுதலைக்காகப் போராடும்
இயக்கமாகத் தோன்றிய ஒரு சிந்தனைப் போக்கு, பெண்ணியம் எனும் பெயரில் உருக்கொண்டது. மேலும்
“பெண்ணியம் என்பது உலகளவில் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, வரலாறு, பரிணாமம் ஆகியவற்றில்
காணலாகும் ஆணாதிக்கத்தைக் கண்டுரைப்பதாகும். அனைத்துத் துறைகளிலும் நிலவும் ஆணாதிக்கக்
கருத்தியல்களை அகற்றி ஆண் - பெண் சமத்துவத்திற்கு வழிகாண்பதாகும்.” ஆணின் அதிகாரத்தில், சிந்தனையில் உருவாக்கப்பட்ட
மனிதகுல வரலாறு ஆண்களின் பார்வையில் பெண்களுக்கு எதிராக எழுதப்பட்டது. எனவே தற்காலத்தில்
ஆண்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றைத் திருத்தி பெண்களுக்கான புதிய வரலாறாக பெண்களின்
உணர்வுகளையும் சிந்தனைகளையும் பெண்களின் பார்வையில் பதிவு செய்தல் என்ற நோக்கில் பெண்ணியப்
படைப்புகளும் திறனாய்வுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பாரதியார், அப்பாஸ்
ஆகிய இருவரின் படைப்புக்களும் கவிதை, புதினம் என்ற அடிப்படையில் வெவ்வேறு வடிவமைப்பினைக்
கொண்டிருப்பினும் கருத்தளவில் பெண்களுக்கான விடுதலையின் தனித்துவத்தை விளக்குவதில்
ஒத்துக் காணப்படுகின்றன. இதனடிப்படையில் தமிழில் பாரதியாரின் கவிதைகளிலும் உருதுவில்
அப்பாஸின் புதினங்களிலும் உள்ள பெண்ணியச் சிந்தனைகளை ஒப்பிட்டுக் கூறுவதாக இக்கட்டுரை
அமைகிறது.
பாரதியும் அப்பாஸும்
பாரதி (சுப்பிரமணிய பாரதியார்) (1882
– 1921) திருநெல்வேலியிலுள்ள எட்டையபுரத்தில் பிறந்து பன்மொழிபுலமை பெற்று விளங்கியவர்.
கவிஞர், கட்டுரையாளர். மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், விடுதலைப் போராளி என பன்முகத்
தன்மை கொண்டவர். அது போல உருது, இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் புதினங்கள் எழுதியுள்ள கே.ஏ. அப்பாஸ் (1914) ஹரியானாவில்
உள்ள பானிபட்டில் பிறந்து அலிகர் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று திரைத்துறையில்
இயக்குனராகப் பணியாற்றியவர். இவர் சிறுகதை, நாவல், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை
என பன்முகத் தன்மையில் இலக்கியத்திற்குத் தனது பங்களிப்பினைச் செய்தவர்.
பாரதியாருக்குப் பிறகு தோன்றிய படைப்பாளர்கள்
பலரும் அவரது படைப்புகளின் தாக்கம் பெற்றிருந்தனர் என்பதை தற்கால இலக்கியப் படைப்புக்களைப் படிப்பதன் வழி அறிய முடிகிறது.
“பாரதி மனித குல விடுதலையைப் பாடியவன். தலித்தியம், பெண்ணியம், தேசியவியம், சிறுபான்மையியம்,
சுற்றுச் சூழலியம் என இன்றைய தமிழ்க் கவிதை உலகின் எல்லாக் கிளைக் கால்வாய்களுக்கும்
மூல ஊற்று அவனே... பாரதி புதுமை செய்தது தமிழ்க் கவிதை உலகைத்தான். ஆனால் அவனுடைய கவிதைப்
புதுமை அவனுக்குப் பின் சிறுகதை, நாவல், நாடகம், விமர்சனம் என இதர துறைகளின் மீதெல்லாம்
செல்வாக்குச் செலுத்தின... எதார்த்த நாவல்கள், காந்திய நாவல்கள், தலித்திய நாவல்கள்,
பெண்ணிய நாவல்கள், இனவியல் நாவல்கள் என நாவல் வடிவங்கள் எல்லாமே பாரதியிலிருந்து உருப்பெற்றவைகளே.” என்று பொன்னீலன் கூறியது இக்கட்டுரை உருவாக்கத்திற்கு
தூண்டுகோலாக அமைந்துள்ளது எனலாம். தமிழிலக்கியத்தில் பாரதியின் தாக்கத்தினைப் பற்றி
பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை எனும் நூலில் ‘வல்லிக்கண்ணண்’ ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அப்பாஸின் புதினங்களைப் படிக்கின்ற பொழுது
பாரதியார் குறித்து அப்பாஸ் நன்கு அறிந்து வைத்திருந்தார் என்பதை அறிய முடிகின்றது.
ஏழு இந்தியர்கள் (Saat Hindustani) புதினத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த மகாதேவன் இந்திப்
பிரசாரகராக இருந்தபோதிலும் இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டுள்ள நிலையில் “அவன் அந்தப் பெயர்ப் பலகையைப் பிடுங்கி இந்தி நூல்களை எரித்துக்
கொண்டிருந்த, தீயில் வீசி எறிந்தான். அதற்கு முன்பே ‘இந்திய இலக்கியம்’ என்ற அவனுடைய
நூல் எரிந்து கொண்டிருந்தது. அதில் அவன் கவியரசர் சுப்பிரமணிய பாரதியின் பாடல்களை மொழிபெயர்த்து
அவரை இந்தி உலகிற்கு அறிமுகப்படுத்தி இருந்தான்.”
எனும் புதின வரிகள் அப்பாஸிற்கு பாரதியார் பாடல்கள் அறிமுகமாகியுள்ளதைக் காட்டுகின்றன.
பாரதியின் கவிதைகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது போன்று மொழிபெயர்ப்புகளும்
வெளிவந்துள்ளன. அம்மொழிபெயர்ப்புகள் பாரதியை உலகம் அறியச் செய்துள்ளன. பாரதி பாடிய
சமூகப் பாடல் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள புதுமைப் பெண், பெண்கள் வாழ்க, பெண்கள்
விடுதலைக் கும்மி, பெண் விடுதலை, விடுதலைக் காதல் போன்ற பாடல்களின் வழி பாரதி காண விரும்பிய
புதுமைப் பெண்களை அப்பாஸ் தனது புதினங்களில் எவ்வாறு படைத்துக் காட்டியிருக்கின்றார்
என்பதை அறிவதாக இக்கட்டுரை அமைக்கப்படுகிறது.
பெண் விடுதலையும் சமூக விடுதலையும்
ஒரு இலக்கியப் பின்புலத்திலிருந்து மற்றொரு
இலக்கியத்தினை அறிய முற்படுகின்ற பொழுது அவ்விலக்கியப் பதிவுகள் சில இடங்களில் தங்களுடைய
இலக்கியப் பதிவுகளுக்கு ஒப்பாக அமைவதை உணரமுடிகின்றது. அவ்வாறு வாசித்த பொழுது பாரதியின்
கவிதைகளும் அப்பாஸின் புதினங்களும் சமூக விடுதலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதினை
அறியமுடிகின்றது. இருப்பினும் பெண் விடுதலையோடு இணைந்த ஒன்றுதான் சமூக விடுதலை என்பதை,
“பெண்ணடிமையுற்றால் மக்களெல்லாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ?” என்று பாரதி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது
போன்ற கொடுமைகளைக் கண்டு சினம் கொள்ளும் பாரதி,
“பெண்டாட்டி
தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை
முழுதடிமைப் படுத்தலாமா?”
என்று ஆணாதிக்கச் சமூகம்
நோக்கி வினவுகின்றார். இதனையொப்ப பெண் அடிமைத்தனமாக நடத்தப்படுவதால் ஏற்படுகின்ற சமூக
வீழ்ச்சியினை அப்பாஸ் புதினங்களில் வெளிப்படுத்தியுள்ளார். மூன்று சக்கரங்கள் புதினத்தில்
‘சாந்தா’ பெரிய வியாபாரியின் மகள். இவளைத் திருமணம் செய்தால் பெரிய வியாபாரியாகி விடலாம்
என்ற ஆசையில் அவளைத் திருமணம் முடிக்கின்றான் ‘சகன்லால்’. திருமணம் முடிந்ததும் சாந்தாவின்
தந்தை இறந்துவிட்டதால் சகன்லாலின் கனவு பலிக்காமல் போகின்றது. கணவன் விவாகரத்து செய்துவிட்டால் பிழைப்பிற்கு வேறுவழி
இல்லை. எனவே கணவனின் கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு வாழவேண்டிய நிலை இன்றளவும் பெண்களுக்குத்
தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. “காலையில் எழுவது, வீட்டைப் பெருக்குவது, பூசை செய்துவிட்டு
அடுப்பு மூட்டுவது, தேநீர் தயாரித்து கணவனுக்குக் கொடுப்பது. பிறகு சமைப்பது, கணவனுக்குப்
பரிமாறுவது, பிறகு மாமியாருக்கும் சாப்பாடு தருவது, கணவன் வேலைக்குச் சென்ற பிறகு துணிகள்
துவைப்பது. இதுதான் திருமணமான பெண்களின் உலகம் என்று நம்பினாள் அவள்.” என்று பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை ஆணாதிக்கச்
சமூகம் கட்டமைத்துள்ளதை அறியமுடிகிறது. இத்தகைய
கொடுமைகள் பின்பற்றப்படுவதால் சகன்லாலின் குடும்பம் முன்னேற்றமின்றிப் போவதினை ஆசிரியர்
குறிப்பிட்டுள்ளார்.
“ஆணும்
பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி
லோங்கி, இவ் வையம் தழைக்குமாம்.”
என்ற பெண்விடுதலை பற்றிய உணர்வு பாரதியின்
பெண்ணியச் சிந்தனைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
பெண்ணின் உயர்வு
பெண்கள் மீதான அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து,
பெண்கள் கல்வி கற்று, ஆண்களுக்கு நிகரான பணிகளைச் செய்து உலகில் புகழ் பெற்று வாழ வேண்டும்
என்பதில் இருவரின் சிந்தனைகளும் உயர்ந்திருக்கின்றன. துறைகள் பலவற்றிலும் பெண்கள் சிறந்து
விளங்குவதை அப்பாஸ் புதினங்களில் பரவலாகக் காணமுடிகின்றது. மூன்று சக்கரங்கள் புதினத்தில்
‘துர்கா’ இருளும் ஒளியும் புதினத்தில் ‘நாஜீன்’, மற்றும் ‘இந்திரா’ போன்ற பெண்கள் திரைத்துறையில்
சிறந்த நடிகைகளாகவும் ஒரு புதிய காலை புலர்ந்தது புதினத்தில் ‘ஆஷாதேவி’ வழக்குரைஞராகவும்,
கண்ணாடிச் சுவர்கள் புதினத்தில் ‘மம்முதா’ வெளிநாடு சென்று பயிலும் பெண்ணாகவும் விளங்குகின்றனர்.
ஏழு இந்தியர்கள் புதினத்தில் ‘மாரியா’ கோவாவின் விடுதலைக்காகப் போராடும் போராட்டக்
குழுவின் தலைவியாக, நக்சலைட்டுகள் புதினத்தில் ‘கமலாசென்’, ‘அஜிதா’ நக்ஸல்வாதக் கூட்டத்தின்
முக்கியப் போராளிகளாகத் திகழ்கின்றனர். நான்கு நண்பர்கள் புதினத்தில் விஜயநகரத்தின்
மகாராணியாக மலர்க்கொடி (பூல்மதி) போன்றோர் புதினத்தின் முதன்மைக் கதைமாந்தர்களாகத்
திகழ்கின்றனர். இப்பெண்களின் செயல்களைப் படிக்கின்ற பொழுது அடுப்பூதும் பெண்களுக்குப்
படிப்பெதற்கு என்பதற்கு எதிராக,
“ஏட்டையும்
பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி
யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக்குள்ளே
பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை
மனிதன் தலைகவிழ்ந்தார்.”
என பெண்களின் எழுச்சியை பாரதியார் வெளிப்படுத்துகின்றார்.
பெண்கள் கல்வி பெறல் வேண்டும். அதற்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறல் வேண்டும். உயர்பதவிகளைப்
பெற்று நாட்டினை ஆட்சி செய்கின்ற அதிகாரத்தினைப் பெறல் வேண்டும்.
“பட்டங்கள்
ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில்
பெண்கள் நடத்த வந்தோம்”
என்ற பாரதியின் கனவு தற்காலத்தில் நனவாகிக்
கொண்டிருக்கின்றது என்றாலும் மிகவும் அரிதான பெண்களே வாழ்வியல் சிக்கல்களைக் கடந்து
வெற்றி பெறுகின்றனர். ஆகவே பாரதியின் கனவு முழுமை பெறவில்லை என்றே கொள்ளுதல் வேண்டும்.
இருப்பினும் ஆண்களுக்கு நிகரான பொறுப்புக்களையும் தலைமையினையும் ஏற்று பெண்கள் செயல்படுவதினை
அப்பாஸ் தனது புதினங்கள் முழுவதும் குறிப்பிட்டிருக்கின்றார்.
பெண்ணின் வீரம்
ஏழு இந்தியர்கள் புதினத்தில் ‘மாரியா’
கோவாவின் விடுதலைக்காக வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்த ஆண்களுக்குத் தலைவியாகச் செயல்பட்டு,
அவர்களை வழிநடத்தி, கோவாவின் விடுதலைக்கு அடித்தளமிடுகிறாள். பெண்கள் தற்காப்புக் கலைகள்
கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அது ஆணாதிக்க சமூக அச்சுறுத்தல்களிலிருந்து
தங்களைப் பாதுகாக்க உதவுகிறது என்பதற்குச் சான்றாக மாரியாவை ‘கராத்தே’ கற்றுக்கொண்ட
வீரப் பெண்ணாக அப்பாஸ் படைத்திருக்கிறார். “மாரியா தனது கையால் மின்னல் வேகத்தில்
‘கராட்டே’ முறையில் சகாராமின் கையில் அடித்தாள். துப்பாக்கி கீழே விழுந்து விட்டது.
இப்போது அது மரியாவின் கையில் இருந்தது” பெண்களுக்கான
குண நலன்களைப் பற்றிய இலக்கியப் பதிவுகளை எதிர்த்து, “அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம்.” என்கிறார் பாரதி. பெண்கள் வீரம் மிகுந்தவர்களாகவும்
நேர்மையுடையவர்களாகவும் விளங்குதல் வேண்டும். இன்றைக்குப் பலராலும் மேற்கோள் காட்டப்படும்
பாரதியின் கவிதை வரிகளாக,
“நிமிர்ந்த
நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில்
யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த
ஞானச் செருக்கும்”
உடையவர்களாகப் பெண்கள்
இருந்திடல் வேண்டும் என்பதை அறிவித்தவர் பாரதியார். இதனை அப்பாஸ் எழுதிய ‘நக்சலைட்டுகள்’
புதினத்தில் உள்ள பெண்களின் வீரச் செயல்களினைப் பற்றி அறிகின்ற போது உணர முடிகின்றது.
“கமலாசென் இரண்டு வெடிகுண்டுகளை போலீஸ்காரர்களை நோக்கி வீசும்போது ‘புரட்சி வாழ்க’
என்று கோஷமிட்டாள்.” என பெண்களின் வீரச் செயல்கள்
குறிப்பிடப்படுகின்றன. தூக்கு மேடைக்குச் செல்லவிருக்கும் நக்சலைட் இயக்கத்தின் போராளியாக
‘அஜிதா’ திகழ்கிறாள். ஒரு பெண் புரட்சி இயக்கத்திற்கு தலைமை தாங்கியதோடு மரணத்தின்
போது அவ்வியக்கத்திற்கு வழிகாட்டும் விதமாக, “தோழர்களே! நீங்கள் என்ன செய்கிறீர்கள்
என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களில் பலர் நிறைய கொலைகள் செய்து இருக்குறீர்கள்.
உங்களில் பலர் கொல்லப்பட்டும் இருக்குறீர்கள். ஆனால் இது புரட்சியின் பக்கம் நம்மை
அழைத்துச் சென்று இருக்கிறதா என்பதை நினைத்துப் பாருங்கள். கொலைகள் மூலம் புரட்சியை
தோற்றுவிக்க முடியாது. மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களை விழிப்படையச் செய்வதுதான் புரட்சிக்கான
வழியாகும். சாவைக் கண்டு நான் பயப்படவில்லை. நீங்கள் கொலை செய்யும்படி என்னிடம் சொன்னீர்கள்;
நானும் கொலை செய்துவிட்டேன். அதுவும் நான் நேசித்த ஒருவரை. நீங்கள் சாகும்படிச் சொன்னீர்கள்.
நானும் சாவதற்குத் தயாராகிவிட்டேன். மரணத்தின் வாசலில் நிற்கும்போது இந்தச் செய்தியை
அனுப்புகிறேன். உங்கள் வழிமுறையைப் பற்றி மீண்டும் யோசனை செய்யுங்கள்.” என பெண்களின் வீரத்தினை எடுத்துரைக்கும் காட்சிகள்
அப்பாஸின் புதினங்கள் முழுக்க காணப்படுகின்றன.
கற்பு
பெண்களை ஒடுக்குவதற்கு முக்கியமான கருவியாகக்
கற்போழுக்கத்தினை ஆணாதிக்கச் சமூகம் கையாண்டு வருகின்றது. பாரதியார் அதனை எதிர்த்துப்
பாடுகின்ற பொழுது,
“கற்பு
நிலை என்று சொல்ல வந்தால் இரு
கட்சிக்கும்
அது பொதுவில் வைப்போம்”
என்கிறார். எனவே கற்பு
நிலை தவறுதல் ஆண்களுக்கும் உரிய குற்றமாகும் என்கிறார். இதனை அப்பாஸ் எழுதிய நான்கு நண்பர்கள் புதினத்தில்
‘கௌரியின் செயல்கள் நினைவூட்டுகின்றன. “நான் முழு உலகத்தையும் விட்டு உங்களிடம் வந்து
இருக்கிறேன். நீங்கள் இன்னொரு மங்கையின் வலையில் வீழ்ந்து விட்டீர்கள் என்பது தெரிந்தால்,
இதை ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களை என் கையால் சுட்டுக் கொல்வேன்.” என்று ஆணையிட்டுக் கூறியதை கணவன் மீறிவிட்டான்.
“உன்னுடைய வாக்குறுதி நினைவு இருக்கிறதா? என்னுடைய ஆணையும் ஞாபகம் இருக்கிறதா? இதைக்
கூறி கௌரி துப்பாக்கியை எடுத்து விசையை அழுத்தி விட்டாள். குண்டு பாய்ந்ததும் சாத்தானும்
குதிரையிலிருந்து கீழே விழுந்தான்.” இங்கு
ஆண் தன்னுடைய கற்பு நிலையிலிருந்து தவருகிறான் என்பதை அறிந்து பெண் தண்டனையை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ள நிகழ்வு, அப்பாஸ் பெண்களுக்குக் கொடுக்கும்
முக்கியத்துவத்தினை உணர்த்துகின்றது.
பாலியல் கொடுமை
காலந்தோறும் பரத்தமை ஒழுக்கத்தை ஏற்று
அதை இலக்கியமாக்கியுள்ள ஆணாதிக்கச் சமூகம் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை தொடர்ந்து
நிகழ்த்தி வருகின்றது. இன்றைய சூழலில் திருமணத்திற்கு முன்பு, படிக்கச் செல்கின்ற இடங்களிலும்
வேலைக்குச் செல்கின்ற இடங்களிலும் பெண்களைப் பாலியல் கொடுமைகள் பயமுறுத்தவே செய்கின்றன.
இருதுளி நீர் புதினத்தில் ‘சோனகி’ தண்ணீர் எடுக்கச் சென்றபோது ‘மங்கல்சிங்’ என்பவனால்
கற்பழிக்கப்படுகிறாள். மீண்டெழுந்த அந்தப் பெண் மங்கல் சிங்கிடமிருந்த துப்பாக்கியப்
பறிக்கிறாள். கையில் உள்ள “துப்பாக்கியின் கண் வழியே ஒரு சுவாலை பறந்தது; சத்தமும்
கேட்டது. மங்கல்சிங் பயங்கரமான அலறலுடன் மணல் மீது சாய்ந்து விட்டான். சோனகி துப்பாக்கியைக்
கையில் ஏந்தியவாறு அவனைப் பார்த்தாள்.” என்ற
காட்சி, பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே புதினத்தில் மற்றொரு பெண் பற்றியும் அப்பாஸ்
குறிப்பிட்டுள்ளார். கணவன் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறான். தண்ணீர் பஞ்சத்தின்
காரணமாக ஊரார் அனைவரும் அவ்வூரை விட்டுச் சென்று விட்டனர். கணவன் வருகையை எதிர்நோக்கி
கௌரி தனிமையில் வாழ்ந்து வருகிறாள். ஊருக்குள் புகுந்த திருடன், ஒரு பெண் மட்டும் இருப்பதை
அறிந்து தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அப்பொழுது “அவள் கையில் உறை போடப்பட்ட
வாள் இருந்தது. திருடனுக்குப் பக்கத்தில் வந்து அவள் அந்த வாளைக் காட்டினாள். இது என்
கணவனின் வாளாகும். நாள் முழுவதும் கல்மீது இதைத் தீட்டிக் கூர்மையாக்கி வருகிறேன் என்றவாறு
உறையிலிருந்து வாளை எடுத்துத் திருடனை நோக்கிப் பாய்ந்தாள்.” என்ற கட்சி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பெண்களுக்கான
கொடுமைகளை தாங்களே வீர உணர்வுடன் எதிர்த்துப் போராடும் தன்மை கொண்ட பெண்களை அப்பாஸின்
புதினங்கள் முதன்மைப்படுத்துகின்றன.
வெளிநாட்டில் பெண்கள்
விடுதலைக் காதல் எனும் தலைப்பில் பாரதி
வெளிநாட்டுப் பெண்களின் காதல் வாழ்வினை எடுத்துரைக்கின்றார்.
“காதலிலே
விடுதலை என்றாங்கோர் கொள்கை
கடுகி
வளர்ந்திடு மென்பார் யூரோப்பாவில்;
மாதரெல்லாம்
தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன்
வாழ்ந்திடலா மென்பார் அன்னோர்;
பேதமின்றி
மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்
வந்தால் கலந்தன்பு, பிரிந்து விட்டால்
வேதனையொன்
றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன்
றனைக்கூட வேண்டு மென்பார்.”
அதே நேரத்தில் தமிழ்
நாட்டில் உள்ள இழிவையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
“....................
ஆண்களெல்லாம்
களவின்பம்
விரும்புகின்றார். கற்பே மேலென்று
ஈரமின்றி
எப்போதும் உபதேசங்கள்
எடுத்தெடுத்துப்
பெண்களிடம் இயம்புவாரே.”
என ஆணாதிக்க மனோபாவத்தினை சமூகத்திற்கு
அடையாளப் படுத்துகின்றார்.
முடிவுரை: பெண்ணியச்
சிந்தனைகள் தொடக்கத்தில் ஆண்களின் அடக்கு முறைகளிலிருந்து விடுபெற்று ஆண்களுக்கு நிகரான
உரிமைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் மிதவாதப் பெண்ணியமாகவும், குடும்பத்தில் உள்ள
உரிமைகள் மட்டும் பெண்ணிற்கு முழுமையான விடுதலையைப் பெற்றுத் தராது எனவே பொருளாதாரத்தில்
பெண்கள் சுரண்டப்படுவதினை எதிர்த்து ஆண்களுக்கு நிகரான வேலை வாய்ப்பும் ஊதியமும் பெறவேண்டும்
என்ற நோக்கில் மார்க்சியப் பெண்ணியமாகவும் தோன்றியதை பெண்ணிய வரலாற்றின் வழி அறியலாம்.
சாதி ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த நிலையை உடைத்தெரிந்து பெண்களுக்கெதிரான
சாதிய ஒடுக்குமுறைகளை நீக்க தலித் பெண்ணியமாகவும் ஆண் பாலியல் ரீதியாகவும் பொருளாதார
ரீதியாகவும் இலக்கியக் கட்டமைப்பு ரீதியாகவும் பெண்களை அடக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றான்.
இத்தகைய வீழ்ச்சிக்கு பெண்ணின் உடல் சார்ந்து பிள்ளைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது காரணமாக
உள்ளது. எனவே பெண்கள் பிள்ளை பெறுதலையும் குடும்பப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதையும்
விடுத்தலே பெண்ணிற்கான விடுதலை என்பதாகத் தீவிரவாதப் பெண்ணியமாகவும் தோன்றியது. இத்தகைய
பெண்ணிய வளர்ச்சிப் போக்கின் கருத்துக்கள்
ஒன்றிணைகின்ற விதமாக பாரதியை அணுகுகின்ற பொழுது
அவரது பாடல்கள் பெண்ணியத்தை எடுத்தியம்புவதில் உயர்வு பெற்று விளங்குகின்றன என்பதை
அறிய முடிகிறது. உருது இலக்கியத்தில் அப்பாஸூம் இத்தகைய மேன்மை பெற்று விளங்குகின்றார்
என்பதை பாரதியாருடன் ஒப்பிடுகின்ற பொழுது அறியமுடிகின்றது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கதிலேயே
பெண்ணியச் சிந்தனைகள் இவ்விரு ஆசிரியர்களாலும் சிறப்பிக்கப்பட்டு வந்துள்ளன என்பது
புலனாகின்றது. இக்கட்டுரையின் முடிவாக, பாரதியாரையும் அப்பாஸையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது அப்பாஸ் புதினங்களில்
உள்ள பெண் கதைமாந்தர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களாக விளங்குவதோடு பாரதி கண்ட புதுமைப்
பெண்களாகவும் விளங்குகின்றன.
துணை நூற்கள்
2006 (மூன்றாம் பதிப்பு),
மகாகவி பாரதியார் கவிதைகள், சென்னை: என். சி. பி. ஹச்.
2004 (ஐந்தாம் பதிப்பு),
பாரதியார் கவிதைகள், சிதம்பரம்: தென்றல் நிலையம்.
பொன்னீலன் (பதிப்பாசிரியர்),
(2008)பாரதி என்றென்றும், சென்னை: என். சி. பி. ஹச்.
அப்பாஸ் கே.ஏ, (மொ.பெ
– முக்தார் பத்ரி), 1977, இரு துளி நீர், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
அப்பாஸ் கே.ஏ, (மொ.பெ
– முக்தார் பத்ரி), 1967, இருளும் ஒளியும், சென்னை: தமிழ்ப்பண்ணை பதிப்பகம்.
அப்பாஸ் கே.ஏ, (மொ.பெ
– முக்தார் பத்ரி), 1977, ஏழு இந்தியர்கள், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
அப்பாஸ் கே.ஏ, (மொ.பெ
– முக்தார் பத்ரி), 1977, ஒரு புதிய காலை புலர்ந்தது, சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
அப்பாஸ் கே.ஏ, (மொ.பெ
– முக்தார் பத்ரி), 1977, கண்ணாடிச் சுவர்கள், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
அப்பாஸ் கே.ஏ, (மொ.பெ
– முக்தார் பத்ரி), 1983, நக்ஸலைட்டுகள், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
அப்பாஸ் கே.ஏ, (மொ.பெ
– முக்தார் பத்ரி), 1977, நான்கு நண்பர்கள், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
அரங்க மல்லிகா,
(2006) தமிழ் இலக்கியமும் பெண்ணியமும். சென்னை:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
முத்துச் சிதம்பரம்,
ச. (ஏழாம் பதிப்பு 2010) பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும். திருநெல்வேலி : முத்துப்பதிப்பகம்.
ராஜ்கௌதமன்,
(2011). பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் . கோயம்புத்தூர் : விடியல் பதிப்பகம்.
செல்வி, இரா.
(2010) பெண்மையச் சிந்தனைகள். சென்னை: காவ்யா பதிப்பகம்.