திங்கள், மே 04, 2020

ஜெயகாந்தன், கே.ஏ. அப்பாஸ் புதினங்களில் பாலின விழுமியங்கள்

ஜெயகாந்தன், கே.ஏ.அப்பாஸ் புதினங்களில் பாலின விழுமியங்கள்
விழுமியம்
‘வேல்யூ’ (Value) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு மதிப்பு, மதிப்பீடு, விழுமம், விழுமியம் போன்ற சொற்கள் தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்க வழக்காறுகள் இன்றைய சூழலில் விழுமியங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. விழுமியம் என்பது குறித்து ஜெயமோகன், கலைச் சொற்கள் பற்றி எழுதிய கட்டுரையில் “உலகம் முழுக்க அறநெறிகள் பல உள்ளன. நீதிகள் உள்ளன. ஆசாரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சுட்டக்கூடிய சொல்லே விழுமியம். அவை மக்கள் வாழ்ந்து அறிந்து அடுத்தத் தலைமுறைக்குக் கொடுத்துச் செல்லும் நெறிகள் குறித்த நம்பிக்கை மற்றும் மனக் கட்டுமானமே விழுமியம்.”[1] என்கிறார். எழிலரசி குறிப்பிடுகையில் “ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில் மக்கள் சில வாழ்க்கை நடைமுறைகளை உயர்வானதாக எண்ணிப் போற்றுவர். சில கருத்துக்களை உயர்ந்தவையாகப் பின்பற்றுவர். அவை அச்சமூகத்தால் உயர்ந்தவை, சரியானவை என அங்கீகரிக்கப் பட்டவையாகும். அவற்றையே விழுமியங்கள் என்கிறோம்.”[2] என விளக்கியுள்ளார். ஒரு குறிப்பிட்ட மக்களிடம் கருத்தளவில் தோன்றிய ஒன்று நாளடைவில் நடைமுறைப் படுத்தப்பட்டு அதுவே காலப் போக்கில் சமூகத்தினர் அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகின்ற பொழுது விழுமியம் என்கிற தன்மையை அடைகின்றது. அவ்வாறு தோன்றிய விழுமியம் சமூக நியதியாகிறது. மேலும் தமிழ் நாவல்களில் மதிப்புகள் எனும் நூலில் சேதுமணியன் அவர்கள் விழுமியம் குறித்து விளக்குகையில் “மக்களின் தேவைகளுள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரின் நிறைவேற்றத்திற்குப் பயன்மை உடையதென்று கருதப்படுகிற ஒரு பொருள் / பண்பு / கருத்து / நிலை / ஒழுகலாறு / வழிமுறை இன்னபிற மக்களின் சிந்தனை நிலையிலும் உணர்வு நிலையிலும் இயங்கும் போது மதிப்பாகின்றது.”[3] என விளக்குகிறார்.
இவ்வாறான விளக்கங்களின் அடிப்படையில் நோக்குகின்ற பொழுது விழுமியம் என்பது தனிமனித விருப்பத்தின் அடிப்படையில் அல்லாது சமூக ஒழுக்க நெறிகளின் அடிப்படையில் வகுக்கப்படுகிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வர முயலும் சமூக நெறிமுறை விழுமியம் எனப்படுகிறது. இது ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தலைமுறை தோறும் பின்பற்றப்பட்டு வருகின்றது இலக்கியங்களின் வழியாகவும் சடங்குகள், வழிபாடுகள் வாயிலாகவும் விழுமியங்கள் மக்களுக்கு அறிவுறுத்தப் படுகின்றன. காலந்தோறும் பின்பற்றப்பட்டு வரும் விழுமியங்கள் மக்களின் ஆழ் மனதில் மாற்றமுடியாத கருத்துக்களாகப் பதிந்து விடுகின்றன. அவ்வாறு பதிந்த விழுமியங்கள் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகின்ற பொழுது  முந்திய விழுமியத்தை ஏற்று அதன்வழி வந்தவர்கள் சமூக மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள இயலுவதில்லை/விரும்புவதில்லை. ஒரு காலத்தில் தோன்றிய விழுமியம் மற்றொரு காலத்தில் மாற்றம் பெறுகின்ற பொழுது முந்தைய விழுமியத்தை பின்பற்றியவர்களுக்கும் புதிய விழுமியத்தை ஏற்பவர்களுக்கும் இடையேயான முரண்பாடு சமூகச் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு காலமாற்றத்தில் பழைய விழுமியம் மாறி புதிய விழுமியம் தோன்றுகிறது. விழுமியங்கள் இவைதாம் என்று வரையறைத்துவிட இயலாத அளவிற்குப் பரந்த எண்ணிக்கை கொண்டவை. குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர்கள் என ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவை எனவும் தனிநபர், குடும்பம், சமூகம் என இடத்திற்கேற்ப பின்பற்ற வேண்டியவை எனவும் காலத்திற்கேற்ப பின்பற்ற வேண்டியவை எனவும் விழுமியங்கள் பரந்து காணப்படுகின்றன.[4]
          சமுதாய அமைப்பு காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றம் பெறுகின்ற பொழுது அதனுடன் சேர்ந்து மனிதனின் நடத்தைகளும் மாற்றம் பெறுகின்றன. மனிதனின் வாழ்வியல் முறைகளும் மாறுகின்றன. நிலவுடமைச் சமுதாயத்திலிருந்து தனியுடைமைச் சமுதாயமாக மாறுகின்ற நிலையில் மனித வாழ்க்கையில் சிந்தனைப் போக்குகள் மாறுகின்றன. இதனால் இயந்திர உற்பத்தியில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக முதலாளி - தொழிலாளி என்கிற வர்க்க முரண்பாடுகள் தோன்றுகின்றன. இந்நிலையில் முந்திய சமூகத்தால் பின்பற்றப் படவேண்டிய விழுமியங்கள் அதன் இறுக்கத் தன்மையிலிருந்து தற்கால வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப தளர்த்தப்பட வேண்டியுள்ளது. ஆனால் மக்களின் வாழ்க்கை முறை மாறிவிட்ட நிலையிலும் சமூகத்தால் பின்பற்றப்பட்டு வருகின்ற விழுமியங்கள் மக்களின் மனதிலிருந்து மாறாத பொழுது சிக்கல்கள் தோன்றுகின்றன. பழமையான விழுமியங்களுக்குள் சிக்கிக் கொள்பவர்கள், புதிய சூழலுக்கு ஏற்ப வாழ முடியாமல், தங்களை மாற்றிக் கொள்ளவும் இயலாமல் போராடுகின்றனர். காலத்திற்கேற்ப விழுமியங்கள் மாற்றப்படாமல் இருப்பதினை விமர்சனத்திற்கு உட்படுத்துவதோடு, விழுமியங்கள் மாறாத நிலையில் ஏற்படுகின்ற விளைவுகளையும் மாறுகின்ற நிலையில் ஏற்படுகின்ற சமூக அமைதியினையும் ஜெயகாந்தனும் அப்பாஸும் தங்களது புதினங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பாலினம் தொடர்பான விழுமியங்களைப் பற்றி இவ்விரு புதின ஆசிரியர்களும் எத்தகைய சிந்தனைப் போக்கு கொண்டு விளங்குகின்றனர் என்பது குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.  
        தந்தை வழிச் சமூகம் என்பதால் இச்சமூகத்தால் உருவாக்கப்பட்ட பாலினம் சார்ந்த விழுமியங்களும் ஒருதலைப் பட்சமானதாகவே அமையப் பெற்றுள்ளன எனலாம். காலச் சூழலுக்கு ஏற்ப அவை மாற்றம் பெற்றும் மாற்றம் பெற முடியாமலும் இருப்பதினை தற்கால நடைமுறைகளிலிருந்தே அறிய முடிகின்றது. பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண்களுக்கான விழுமியங்கள் இறுக்கமானதாகவும் ஆண்களுக்கான விழுமியங்கள் சுதந்திரமானதாகவும் வரையறுக்கப்பட்டு வந்துள்ளதினை இலக்கியங்கள் பலவும் சுட்டிக் காட்டியுள்ளன. “ஒவ்வொரு பெண்ணையும், நீ தெய்வம், நீ கற்பரசி, நீ குலமகள் என்ற விருதுகளை மாட்டியே அவளுடைய சுதந்திரத்தை நாம் விலைபேசி விடுகிறோமல்லவா? இந்த விருதுகளைப் பிடுங்கிக்கொண்டு விடக்கூடாது என்பதற்காக இந்தச் சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும் எப்படிப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்!”[5], என பெண்ணிற்கான விழுமியங்கள் எந்த அளவிற்கு இறுகிப்போய் உள்ளன. அதிலிருந்து அவர்கள் விடுபட முடியாதவர்களாய் உள்ளனர். என்பதை ஜெயகாந்தன் சுட்டிக் காட்டியுள்ளார். காலந்தோறும், பெண்கள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்கிற சட்ட திட்டங்கள் சமூகத்தில் இறுகிப் போயிருக்கின்றன. தற்காலச் சூழலில் நெருக்கடிகளுக்கிடையே வாழும் பெண்கள், விழுமிய மீறல்களைச் சந்திக்கின்ற பொழுது அவர்களின் வாழ்வு சமூகத்தினரால் விமர்சிக்கப்படுகிறது. பாலின சமத்துவம் குறித்து விளக்கும் ஜெயகாந்தன் “ஒழுக்கம் மட்டுமல்ல உணர்ச்சிகளும் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரிதான் இருக்க முடியும்.”[6] என்கிறார். ஆனால் சமூகத்தில் பாலினம் குறித்த சமத்துவப் பார்வை இல்லை என்பதை ஜெயகாந்தன் தனது புதினங்கள்தோறும் சுட்டிக் காட்டுகின்றார்.
        ஒருவனுக்கு ஒருத்தி என்ற விழுமியத்தைக் கொண்டுள்ள இச்சமூகத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் விரும்பியோ விரும்பாமலோ ஒருவனுடன் பாலியல் உறவிற்கு ஆட்பட்டாள் என்பதை, இச்சமூகம் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. அத்தகைய பெண் மீண்டும் குடும்ப அமைப்பிற்குள் இயல்பாக இயங்க, பெண் குறித்தான விழுமியங்கள் அனுமதிப்பதில்லை. ஜெயகாந்தன் புதினங்களில் கங்கா (சில நேரங்களில் சில மனிதர்கள்), தங்கம் (உன்னைப் போல் ஒருவன்), மாலதி (ஒவ்வொரு கூரைக்கும் கீழே), மேரி (இதய இராணிகளும் இஸ்பெடு இராஜாக்களும்), சரளா (இலக்கணம் மீறிய கவிதை) போன்ற பெண்களும், அப்பாஸ் புதினங்களில் மாரியா (ஏழு இந்தியர்கள்), சோணகி (இரு துளி நீர்), பாலி (மூன்று சக்கரங்கள்) போன்ற பெண்களும் தங்களுடைய வாழ்வை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை இரு புதின ஆசிரியர்களும் விளக்குகின்றனர்.    
          சில நேரங்களில் சில மனிதர்கள் செல்வக் குடியில் பிறந்த பிரபுவினால் கங்கா பாலியல் உறவிற்கு உட்படுத்தப்படுகிறாள். திருமணமானவர் என்றாலும் ஆண் என்பதால் பிரபுவிற்கு இச்சமூகத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கங்காவின் அண்ணனோ முடிந்தால் அவனையே திருமணம் செய்து கொள்! என வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார். கங்கா, குடும்பம் என்னும் சமூக அமைப்பிற்கு தகுதியற்றவளாகக் கருதப்படுகிறாள். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனைக் கண்டறிந்து திருமணம் செய்து கொள்வது என்ற முடிவிற்கு, பெண்ணிற்கான விழுமியத்தின் இறுக்கம் அவளை இட்டுச் செல்கின்றது. இந்நிலையினை அறிந்த யாரும் கங்கா போன்ற பெண்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. திருமணத்திற்கு முன்பு பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமில்லாத அளவிற்கு சமூகத்தில் விழுமியங்கள் இறுக்கமாகப் பிணைந்துள்ளன. உன்னைப் போல் ஒருவன் புதினத்தில் தங்கத்தின் வாழ்வும் அவ்வாறு பெண்கள் மீதான விழுமியத்தினூடாக சிதைந்து போவதினை எடுத்துரைக்கின்றார். திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவிற்கு ஆளான தங்கம் இறுதிவரைத் திருமணமாகாமல் மீண்டும் ஒருவனால் ஏமாற்றப்படுகின்றாள். கங்கா படித்தவள் பிராமணப் பெண், தங்கம் படிக்காதவள் சேரியைச் சேர்ந்த பெண். இருவருக்குள்ளும் விழுமியத்தின் போராட்டம் தொடர்கின்றது. பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் திருமணத்திற்குத் தயாராக நினைத்தால், சமூகம் என்ன சொல்லுமோ? என்ற கேள்வி அவர்களை உருக்குலைய செய்கிறது. அவ்வாறு திருமணம் செய்து கொண்டாலும் அச்சம்பவத்தை ஒரு வடுவாக எண்ணி காலத்திற்கும் சொல்லிக் காண்பித்து விடுவார்களோ? என்ற குற்ற உணர்வு தோன்றுவதால் அவர்களால் குடும்ப உறவுகளுக்குள் செல்ல இயல்வதில்லை.
          ஒவ்வொரு கூரைக்கும் கீழே புதினத்தில் மாலதிதன்னைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சிவகுருநாதனிடம் தனக்கும் ராஜூவிற்கும் பாலியல் உறவு  இருந்ததாகவும் இனி அவ்வாறு இருக்காது எனவும் கூறியதன் விளைவாக மாலதியின் நேர்மையைப் பாராட்டி சிவகுருநாதன் அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை ஜெயகாந்தன் எடுத்துக் காட்டுகின்றார். இத்தகைய மனப்பக்குவம் இல்லாதவர்கள் சமூகத்தில் பெண்களுக்காக வரையறுக்கப்பட்ட விழுமியத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல்/விரும்பாமல் இருக்கின்றனர் என்பதை ஜெயகாந்தன் தனது படைப்புக்களில் வெளிப்படுத்தியுள்ளார். இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் “படித்தவர்கள் பண்பாளர்கள் என்று சொல்லிக்கொள்கிற பலரிடம் பொய்மையும் போலித் தன்மையும் நிறைந்திருப்பதைக் கண்ட ஜெயகாந்தன், படிக்காத ஏழைகளிடம் நிறைந்திருக்கும் நேர்மையையும் வாய்மையையும் கண்டு நெஞ்சம் நெகிழ்கின்றார். சோரம் போகிறவள் மனத்திலும் ஈரம் இருப்பதைக் கண்டு சமூக நிர்ப்பந்தங்கள் அவளை இந்த விதிக்கு ஆளாக்கிவிட்டதே என்று அங்கலாய்க்கின்றார். மலிவான தரத்திலும் வாழ்க்கை அழகாக மலர்ந்திருப்பதைக் கண்டு மனம் பூரிக்கின்றார்.[7] என ஜெயகாந்தனின் படைப்புத்தனமையை எடுத்துரைக்கிறார்  செ.சு பழனிச்சாமி அவர்கள். “எய்ட்ஸ் நோயை பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் உருவாக்கி, அதை உலகம் பங்கு போட்டுக் கொண்டால் அதற்கு அவளா பொறுப்பு?”[8] என பாலியல் தொழிலாளி என்றாலே முகம் சுழிக்கும் சமூகத்தின் பார்வையை ஜெயகாந்தன் விமர்சனம் செய்கின்றார்.  இலக்கணம் மீறிய கவிதை புதினத்தில் சரளா பெற்றோரை இழந்துவிட்டதால் அநாதையான நிலையில் இளம் வயதிலேயே பாலியல் தொழிலாளியாகிறாள். இருப்பினும் தனக்கென ஒரு குடும்ப உறவை ஏற்படுத்திக் கொண்டு வாழ விரும்புகிறாள். அதற்கான சூழல் உருவாவதற்குள் பாலியல் தொழில் குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறாள். அதுபோல் இதய இராணிகளும் இஸ்பெடு இராஜாக்களும் புதினத்தில் பெற்றோர்களை இழந்து அனாதையாக்கப்பட்ட நிலையில் இளம் வயதில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மேரியை மனைவியாக சோமநாதன் ஏற்றுக் கொள்கிறார்.
          சமூகத்தில் பின்பற்றப்படும் விழுமியங்கள் சில நேரங்களில் மீறப்படுகின்ற பொழுது அவற்றின் சூழல் அறிந்து மக்கள் அதற்கேற்ப விழுமியங்களைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். என்பதை ஜெயகாந்தன் புதினங்கள் எடுத்துரைப்பது போல அப்பாஸ் தனது புதினங்களில் திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவிற்கு ஆட்பட்ட பெண்களைப் படைத்துக் காட்டியுள்ளார். ஏழு இந்தியர்கள் புதினத்தில் கோவாவைச் சேர்ந்த மாரியா பிரெஞ்சுப் படைவீரர்களால் பாலியல் உறவிற்கு ஆட்படுத்தப்படுகிறாள். அவளின் குடும்பத்தினரையும் இழக்கிறாள். மாரியா எவ்வாறு வாழப்போகிறாள் என்பதாக அவளது வாழ்வியல் சிக்கல்களை விளக்கவில்லை. மேலும் அவளை பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட குழுவினருக்குத் தலைவியாக, ஒரு போராளியாகக் காட்டியுள்ளார். இரு துளி நீர் புதினத்தில் சோணகி திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவிற்கு ஆட்படுத்தப்பட்டவள் என்று தெரிந்தும் குடும்ப உறவிற்குள்  ஏற்றுக் கொள்வது ஒரு சிக்கலாக அப்பாஸ் கருதவில்லை. சோணகி மற்றவர்களைப் போல் திருமணம் செய்துகொண்டு இயல்பாக வாழ்வதைக் குறிப்பிடுகின்றார். மூன்று சக்கரங்கள் புதினத்தில் பாலி திருமணத்திற்கு முன்பாகவே பாதிக்கப்பட்டவள் என்பது அறிந்தும் பிக்கு திருமணத்திற்கு சம்மதித்ததை அறிய முடிகின்றது.
          விழுமியங்கள் தற்கால சூழலுக்கு ஏற்ப மாற்றப்பட்டு சட்டங்களாக இயற்றப்பட்டாலும் நீண்ட காலமாகப்  பின்பற்றி வந்த விழுமியங்களை மக்கள் எளிதில் மாற்றிக் கொள்வதில்லை. சான்றாக சாதியக் கலப்புத் திருமணங்கள் குற்றமல்ல என்பது சட்டமாக்கப்பட்ட பிறகும் அவற்றிற்கான வரவேற்பு சட்ட ரீதியாக நிறைவேற்றப்பட்ட பின்பும் சாதிய இறுக்கத்தில் பழமையான விழுமியங்களை ஏற்று வாழ்ந்த பலராலும் இத்தகைய புதிய விழுமியங்களை, நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள இயல்வதில்லை. “இரண்டு தனி மனிதர்களுக்கிடையே ஏற்படுகின்ற வழக்கில் வேண்டுமானால் சமூகம் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்கலாம். ஆனால் தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் ஏற்பட்டுவிட்ட வழக்கில் ஒரு நியாயமான தீர்ப்பைச் சமூகத்திடம் எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை.” என சமூகத்தில் உருவாக்கப்பட்ட விழுமியத்திற்கும் தனிமனிதனுக்குமான போராட்டத்தில் மனித வாழ்வு சிதைக்கப்படுவதினை விளக்குகிறார் ஜெயகாந்தன். திருமணத்திற்கு முன் ஒரு பெண் ஒரு ஆணுடன் இயல்பாகப் பழகுவது குறித்த விழுமியப் பார்வை பெரும்பாலான பெற்றோர்களிடம் மிகவும் கண்டிப்பிற்குரியதாகவே நிலவுகின்றது. அது ஒரு ஆணின் வாழ்க்கையைப் பாதிப்பதைவிட ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கின்றது. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து புதினத்தில் பைரவியின், நண்பர்கள் குழுவில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை. பைரவியின் பெற்றோர், அவள் ஆண் நண்பர்களுடன் பழகுவதற்காகக் கண்டிக்கின்றனர். பெற்றோரை எதிர்த்து பைரவி வீட்டை விட்டுச் சென்று சக நண்பர்களுடன் சேர்ந்து தனியாக வாழ்வதை அறிய முடிகிறது.
          திருமணமான பெண்களுக்கும் குடும்பம் சார்ந்த வாழ்வியல் விழுமியங்கள் சமூகத்தினரால் பின்பற்றப்படுகின்றன. கணவனுக்கு ஏற்ப பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற சட்ட திட்டங்கள் வழக்கமாக உள்ளன. திருமணமான பெண் சாதாரணமாக ஒரு ஆணிடம் பேசுவதைக்கூட தவறுதலாகக் கருதுகின்ற அளவிற்கு பெண் மீதான விழுமியங்கள் இறுக்கமடைந்துள்ளன. சினிமாவுக்குப் போன சித்தாளு புதினத்தில் எம்.ஜி.ஆரின் மீதுள்ள மோகத்தில் கணவனுக்குத் தெரியாமல் சிங்காரத்துடன் சினிமா பார்க்க சென்று சோரம் போன அம்சலை, குற்ற உணர்ச்சியால் வீடு திரும்பாமல் தனிமைப்படுகிறாள். அவளின் தவறை மன்னித்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அம்ஸலையின் கணவன் செல்ல முத்துவின் மனநிலையை ஜெயகாந்தன் வெளிப்படுத்துகிறார்.
          ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் புதினத்தில் கல்யாணியும் ரங்காவும் காதலித்துத் திருமணம் செய்துகொள்கின்றனர். ஆண்கள் மட்டுமே சம்பாதித்து, பெண்களை வீட்டு வேலைக்கு மட்டும் பயன்படுத்திய சமூகத்தில் வாழ்ந்த ரங்காவிற்குக் கல்யாணி தன்னை விட அதிகம் சம்பாதிக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நடிப்புக் கலையில் மிகுந்த ஆர்வமுடைய கல்யாணியை, நடிப்பை விட்டு விடும்படி வற்புறுத்துகிறான். எத்துணை திறமைகள் பெண்களிடம் இருப்பினும் திருமணம் என்னும் பெயரில் அத்துனையையும் மூட்டை கட்டச் செய்துவிடுகிறது இச்சமூகம் என்பதை ஜெயகாந்தன் “நமது பெண்களின் கலை உணர்ச்சி, அழகு உணர்ச்சி, ஏன் மனிதாபிமான உணர்ச்சி கூட கல்யாண தினத்தன்று மணவறையில் எரிகின்ற அக்கினிக் குண்டத்தில் எரிக்கப்பட்டு விடுகின்றன.”[9] என்கிறார்.  மேலும்  “கல்யாணம் என்கிற பந்தம் இந்த தேசத்தில் ஏன் இப்படி அவிழ்க்க முடியாத முடிச்சாய், பிரிக்க முடியாத சிக்கலாய் விழுந்து, இறுகி விபரீதமாய் உறுத்தி, மனித உணர்ச்சிகளையே தண்டிக்கும் விலங்காய் மாறிப்போகிறது.”[10] என்கிறார். அப்பாஸ் தனது மூன்று சக்கரங்கள் எனும் புதினத்தில் பாலி, பிக்கு ஆகிய இருவரின் திருமணம் குறித்து விளக்குகின்ற பொழுது “பண்டிதன் மந்திரங்கள் ஓதவில்லை. நாம் அக்கினியைச் சுற்றி எழுமுறை வலம் வரவில்லை. அதனால் என்னவாம்? வாழ்க்கைத் தீயில் நாம் இருவரும் ஒன்றாகக் குதித்து விட்டோமே!.”[11] என திருமணச் சடங்கு முறையினை விமர்சிக்கிறார். பெரும்பாலான ஆண்கள் எவ்வளவு படித்தவர்களாயினும் நல்ல வேளையில் இருப்பவர்களாயினும் வேலைக்குச் செல்லும் பெண்களை மனைவியாக ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை என்பதை அந்த அக்காவைத் தேடி புதினத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். மணி தனக்கு மனைவியாக வர இருக்கிற ஜேவை (பெயர் முழுமையாக சுட்டப்படவில்லை) அவளது வேலையை விட்டுவிடும்படி கூறுகிறான். இதை வெறுத்த ஜே யாருக்காகவும் வேலையை விட்டுவிட முடியாது எனவும் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது எனவும் கூறிவிடுகிறாள். சமூகத்தில் பெண்களுக்கான விழுமியங்களின் இறுக்கத்திலிருந்து விடுபட்டு, பெண்கள் சுதந்திரமடைய வேண்டும் என்பதைப் பற்றி ஜெயகாந்தன் குறிப்பிடுகையில் பெண்ணாகப் பிறந்துட்டோமேனு தாழ்வுணர்ச்சிகொள்ளக் கூடாது. நானிக் கொண்டு ஒதுங்கக் கூடாது. அனாவசியமாக வெட்கப்படக் கூடாது. நாலு பேர் முன்னாடி குழந்தை மாதிரி நடக்கப்படாது. ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்திலே ஒரு புதிய நம்பிக்கை வரணும் ஆணுக்குப் பெண்தான் எல்லா நம்பிக்கையையும் தருகிறவள்.”[12] என பெண்ணிற்குச் சமூகம் கட்டமைத்துள்ள விழுமையத்தை விமர்சனம் செய்யும் விதமாக புதிய விழுமியத்தினை நிலை நாட்டுகின்றார்.
நிறைவுரை
          ஜெயகாந்தனின் புதினங்களில் பெண்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சூழலில் சமூகம் விதித்துள்ள விழுமியங்களின் இறுக்கத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களாகச் சித்தரிக்கப் பட்டுள்ளனர். விழுமியக் கட்டுக்களுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்கின்றனர் என்பதாகவும் அதனை மீறி புதிய சிந்தனைகளைக் கொண்டு செயல்படுபவர்கள் தற்காலச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையை மாற்றிக் கொள்கின்றனர் என்றும் விளக்கியுள்ளார். புதிய வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப பெண்களும், புதிய விழுமியங்களை ஏற்று சமூகத்தினரும், மாற்றம் பெறவேண்டியது அவசியமாகிறது என்பதை ஜெயகாந்தன் வெளிப்படுத்தியுள்ளார். அப்பாஸ் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை விழுமியக் கட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்களாகச் சித்தரிப்பினும் மற்றவர்களைப் போல் அவர்களும் இயல்பான வாழ்க்கையில் பயணிப்பவர்களாக எடுத்துரைக்கின்றார். பெண்கள் பொருளாதார ரீதியாகவும் பாலின வேறுபாடு சார்ந்தும் ஒதுக்கப்படுகின்ற போதிலும் அதிலிருந்து மீறி அவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்பதாக அப்பாஸின் புதினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.




[1] ஜெயமோகன், கலைச் சொற்கள் பற்றி (கட்டுரை) http://www.jeyamohan.in/8691#.V7QIO_l97IU[2] எழிலரசி.பி., தமிழ் நாவல்களில் பெண் சித்தரிப்பு, ப – 34. 
[3] சேதுமணியன், தமிழ் நாவல்களில் மதிப்புகள், ப - 20.
[4] எழிலரசி.பி., தமிழ் நாவல்களில் பெண் சித்தரிப்பு, ப – 36.
[5] ஜெயகாந்தன், ஜெயகாந்தன் குருநாவல்கள் பகுதி - 1, (சமூகம் என்பது நாலு பேர்) ப – 535. 
[6] ஜெயகாந்தன், ஜெயகாந்தன் குறுநாவல்கள் பகுதி – 1, (கருணையினால் அல்ல) ப – 392.
[7] பழனிச்சாமி. செ.சு., ஜெயகாந்தன் படைப்புக்களில் ஒழுக்கவியல் ப – 37.
[8] ஜெயகாந்தன், ஜெயகாந்தன் குறுநாவல்கள் பகுதி – 1, (விழுதுகள்) ப – 345.
[9] ஜெயகாந்தன், ஜெயகாந்தன் குறுநாவல்கள் பகுதி – 1, (சமூகம் என்பது நாலு பேர்) ப - 509.[10] ஜெயகாந்தன், ஜெயகாந்தன் குறுநாவல்கள் பகுதி - 1, (கோகிலா என்ன செய்து விட்டாள்?) ப - 423.
[11] அப்பாஸ்,கே.ஏ., மூன்று சக்கரங்கள், ப - 19.  
                [12] ஜெயகாந்தன், ஜெயகாந்தன் குறுநாவல்கள் பகுதி - 3, (நம்ப மாட்டேளே) ப - 1628.