புதன், மே 06, 2020

ஜெயகாந்தன், கே.ஏ. அப்பாசின் அரசியல் சார்புநிலைகள்

ஜெயகாந்தன்கே..அப்பாசின் அரசியல் சார்புநிலைகள்
முன்னுரை
          தமிழ் இலக்கியத்தில் ஜெயகாந்தன், உருது, இந்தி இலக்கியத்தில் கே. அப்பாஸ் ஆகிய இருவரும் கம்யூனிசம் சார்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள் என்னும் அடிப்படையில் ருஷ்ய நாட்டு சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதினைப் பெற்றவர்கள் ஆவர். இவ்விருவரும் வெவ்வேறு மொழிகளைச் சார்ந்த இலக்கியத் தளத்தில் இயங்கியிருந்தாலும் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வழி ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அப்பாஸ் பானிபட்டில் பிறந்திருந்தாலும் தன் வாழ்நாளில் பெரும்பான்மையை அவர் மும்பையிலே செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1979இல் ஜெயகாந்தனின் இலக்கியப் பணிக்காக சோவியத் நாடு நேரு விருது வழங்கிச் சிறப்பித்தது. அதனை முன்னிட்டு சோவியத் நாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் ஜெயகாந்தன். மேலும் அவர் பத்ம பூஷன்’, (2009) ‘ஞானபீடம்’ (2002) போன்ற உயரிய விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. 1985இல் அப்பாஸ் அவர்களுக்கு சோவியத் ருஷ்யா விருது வழங்கிச் சிறப்பித்தது. அதற்கு முன்பாகவே சோவியத் யூனியனுக்குத் திரைத்துறை சார்ந்து பலமுறை பயணித்தவர் ஆவார். அவரது அவாரா எனும் திரைப்படம் சோவியத் சினிமா வரலாற்றில் சிறந்த படமாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திரைப்படக் குழுவினரோடு அப்பாஸ் சோவியத் யூனியனுக்குச் சென்று வந்துள்ளார். மேலும் அவர்பத்ம ஸ்ரீ’ (1969) போன்ற உயரிய விருதினையும் பெற்றுள்ளார்.  
பத்திரிக்கையாளர்களாக, திரைத்துறை சார்ந்தவர்களாக, புதினம், மற்றும் சிறுகதை போன்றவற்றின் படைப்பாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஜெயகாந்தனும் அப்பாஸும் தங்களுடைய அரசியல் சார்ந்த சார்பு நிலையில் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர் என்பது குறித்து இக்கட்டுரை விளக்க முற்படுகிறது. இதனை விளக்க பின்வருமாறு ஐந்து உட்தலைப்புக்களின் கீழ் இக்கட்டுரை பகுக்கப்பட்டு இவ்விருவரின் அரசியல் சார்புநிலைகள் குறித்து ஒப்பிட்டு விளக்கப்படுகிறது.
1. குடும்பப் பின்னணியில் அரசியல் நிலை
2. கம்யூனிஸ்ட் சார்புநிலை
3. காங்கிரஸ் சார்புநிலை
4. புதினப் படைப்பாக்க நிலை
1.   குடும்பப் பின்னணியில் அரசியல் நிலை
குடும்பப் பின்னணியில் அரசியல் நிலை எனும் தலைப்பில் இரு படைப்பாளர்களின்  குடும்ப உறவினர்கள் சார்ந்து இவர்கள் கற்றறிந்த அரசியல் நிலையினை அறிவது அவசியமாகிறது. இதனை விளக்க இவ்விருவரின் சிறுபிள்ளைப் பருவத்தில் உள்ள கால கட்டத்தில் இருவருக்குமான அரசியல் தாக்கம் குறித்து அறிந்து கொள்வது இன்றியமையாததாகும்.
1.1 ஜெயகாந்தனின் குடும்பப் பின்னணியில் அரசியல் நிலை
ஜெயகாந்தனின் தாத்தா ஒரு தீவிர கம்யூனிஸ்ட் தொண்டராவார். அவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரே ஜெயகாந்தனுக்கு கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் பலருடனும் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஆவார். மேலும் நாத்திகத்தையும் சமூக மூடப்பழக்க வழக்கங்களின் சீர்கேடுகளையும் பற்றி எடுத்துரைத்தவரும் ஆவார். தொடக்கத்தில் இவரின் மூலமாகவே ஜெயகாந்தன் தன்னை ஒரு நாத்திகவாதி என்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன் என்றும் உணர்ந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஜெயகாந்தனுடைய தாய்மாமன்வந்தே மாதரம் மங்களம் பிள்ளை அவர்களின் வீட்டில் ஜெயகாந்தன் இருந்து வந்த சூழலில் காங்கிரஸ் நண்பர்கள் பலருடனும் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். தாத்தாவின் வழி சிறுவயதிலேயே பாரதியைப் பற்றித் தெரிந்து கொண்ட ஜெயகாந்தன் அன்றிலிருந்து பாரதியாரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். மங்களம் பிள்ளையின் வாயிலாக காங்கிரஸ் கூட்டத்தில் காந்தியைச் சந்தித்த ஜெயகாந்தன், காந்தியின் சீடன் எனவும் குறிப்பிடுகின்றார். இவ்விருவரின் மூலம் ஜெயகாந்தன் தனது சிறுவயதுப் பருவத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சி சார்ந்த அனுபவத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
1.2 அப்பாஸின் குடும்பப் பின்னணியில் அரசியல்

அப்பாஸின் தாத்தாவும் தந்தையும் தீவிர காங்கிரஸ் தொண்டர்கள். கிலாபத் இயக்கத்தில் பணியாற்றிய அவரது தாத்தாவினுடைய வீட்டிற்குக் காந்தி வந்திருந்த பொழுது அப்பாஸ் சிறுவயதிலேயே காந்தியின் பேச்சுக்களைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றவர். காந்தியின் இயக்கங்களில் பங்காற்றி வந்த பாட்டி ஒருவர் கூறிய கதைகள் பலவற்றையும் கேட்டு வந்ததாலே பின்னாட்களில் கதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக அப்பாஸ் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அவரது தந்தையின் நண்பர்கள் பலரும் காங்கிரஸ் கட்சி சார்ந்தவர்களாக இருந்தனர். இச்சூழலில் வளர்ந்த அப்பாஸ் தன்னை ஒரு காங்கிரஸ் கட்சியின் தொண்டனாகவே உணர்ந்தார். தனது தந்தையுடன் காங்கிரஸ் மாநாடுகளுக்குச் சென்று வந்த அனுபவங்கள் தொடக்கத்தில் அவரை ஒரு காங்கிரஸ் கட்சி சார்பாளராக மாற்றியுள்ளதை அறியமுடிகிறது. மேலும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த அனுபவங்கள்/புரிதல்கள் குடும்பப் பின்னணியில் அவருக்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 2.கம்யூனிஸ்ட் சார்பு நிலை
2.1 ஜெயகாந்தனின் கம்யூனிஸ்ட் சார்பு நிலை
சிறுவயது முதலே பள்ளிப் படிப்பின் மீது நாட்டம் இல்லாத ஜெயகாந்தன் ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி வந்த அவரது தாய்மாமன் எஸ்.ராதாகிருஷ்ணன் உதவியால்  தனது 13வது வயதில் (1947) ‘ஜனசக்தி அலுவலகத்தில் உதவியாளனாகச் சேர்ந்தார். அங்கு அச்சுக் கோர்க்கும் பணியும், மாலை நேரங்களில் கட்சிப் பத்திரிக்கைகள் விற்கும் பணியும் வழங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜெயகாந்தன் அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இரண்டாண்டுகளில்  கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை நீக்கப் பட்டதையடுத்து ஜெயகாந்தன் கட்சியின் முழுநேரப் பணியாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.  
          தடை நீக்கப்பட்ட இரண்டாண்டு காலப் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் எனப் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததையடுத்து பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் தீர்மானம் செய்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கிடையே இம்முடிவை ஏற்பவர்கள் ஏற்காதவர்கள் என இரு பெரும்பிளவு ஏற்பட்டது. இதில் ஜெயகாந்தன் கூட்டணிக்கான முடிவை எதிர்க்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஒரு கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகத் தங்களுடைய கொள்கைகளுக்கு உடன்படாத பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைப் பற்றி ஜெயகாந்தன் விமர்சனம் செய்தார். இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் எதிரியாகிவிட்ட காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்கு இதுவே சிறந்த வழி என்பது தீர்மானமாக்கப்பட்ட நிலையில் கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிடுவது என்பது உறுதி செய்யப்பட்டது. கட்சியை விமர்சனம் செய்த பலரும் சமரசம் செய்து கொண்டனர். சமரசமாகாதவர், கட்சியின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தராதவர் என்ற நிலையில் ஜெயகாந்தனும் அவரைப் போன்று விமர்சனம் செய்த சிலரும் கட்சிப் பொறுப்புக்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் ஜெயகாந்தனைப் பகுதி நேர ஊழியனாக தென்சென்னைப் பகுதியின் குழுச் செயலாளராக மாற்றினர்.
          அணு ஆயுத இரகசியங்களை சோவியத் யூனியனுக்குத் தகவல் தெரிவித்து விட்டதாகக் குற்றம் சாட்டி அமெரிக்க அரசாங்கம்ரோசன்பர்க்தம்பதியினருக்கு மரணதண்டனை விதித்ததையடுத்து, அமெரிக்க அரசாங்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஊர்வலம் ஒன்று நடத்தியது. அதில் அமெரிக்கத் தூதரகம்வரை ஊர்வலமாகச் சென்று கோஷங்கள் எழுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்வூர்வலத்தை வழி நடத்திச் சென்ற ஜெயகாந்தனும் அவரது நண்பர்களும் சரியான இடம் தெரியாமல் தவறுதலாக அமெரிக்க நூலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன் விளைவாக நூலகத்தின் முன்பகுதி தாக்கப்பட்டது. இச்சம்பவத்தையடுத்து ஜெயகாந்தனுக்கு எதிரான விமர்சனங்கள் கட்சியாளர்களிடமிருந்து மிகுதியாகத் தோன்ற, ஜெயகாந்தன் கட்சி உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கப்பட்டார்.
2.2 அப்பாசின் கம்யூனிஸ்ட் சார்புநிலை
            அப்பாஸ் தனது பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்கள் கிடைக்கின்ற பொழுது பெரியப்பா மகன் சயிதையின் (Saiyidain) கவனிப்பில் அலிகர் பல்கலைக் கழகத்தில் தங்கும் வாய்ப்பினைப் பெற்றார். அங்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நண்பர்கள் நிகழ்த்தும் விவாதங்கள் பலவற்றையும் கேட்டிருப்பதாகத் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அது சார்ந்த அனுபவங்களே அப்பாஸின் மனதில் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த சிந்தனைகள் வளர்வதற்குக் காரணமாக அமைந்தன என்பதைக் குறிப்பிடுகின்றார்.          
            மார்க்சியக் கொள்கைப்படி முதலாளித்துவத்தின் மீது வெறுப்பு கொண்டவர். சமூக வளர்ச்சிக்கு முதலாளித்துவம் ஒருபோதும் உதவாது என்பதையும் பொருளாதாரத்தின் அடிப்படையில் மக்களை சமநிலைப்படுத்த வேண்டும் என்பதையும் விரும்பியவர். “முதலாளியத்தின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. அது மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இதை ஜவஹர்லால் நேருவும் அவருடைய கட்டுரைகளில் கூறியுள்ளார். முதலாளித்துவம் போலியான சமூகத்தையே உருவாக்குகிறது. நவீன ஆடை, வங்கிகள், ஏற்றுமதி, இறக்குமதி, பங்குச்சந்தைகள், தானியச் சந்தைகள் போன்றவை சமூக வளர்ச்சிக்கு உதவுவதில்லை.”  என்ற கருத்தினை முன்வைக்கிறார்.
            மும்பையில் உள்ள க்ரோனிகல் பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராகப் பொறுப்பேற்ற பின்பு நாளடைவில் அப்பாஸ் சினிமா விமர்சனம் செய்யும் பொறுப்பைப் பெற்றார். அதன் வழி திரைத்துறை சென்ற அப்பாஸ் சுயமாக திரைப்படங்கள் எடுக்கும் வாய்ப்பினைப் பெற்றார். அக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நண்பர்களின் நட்பு வட்டாரம் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் அவர் இந்திய மக்கள் கலாமன்றத்தின் மூலமும் (IPTA) கம்யூனிஸ்ட் நண்பர்கள் அப்பாஸிற்கு அதிகமாயினர். இதன் விளைவாகவே அப்பாஸின் படைப்புக்கள் பலவும் கம்யூனிஸம் சார்ந்து அமையப் பெற்றிருந்தன. இருப்பினும் தன்னை அவர் ஒருபோதும் கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்வதில்லை.
3.காங்கிரஸ் சார்புநிலை
3.1 ஜெயகாந்தனின் காங்கிரஸ் சார்புநிலை
சிறுவயதிலேயே தாய்மாமன்வந்தே மாதரம் மங்களம் பிள்ளையின் மூலம் காங்கிரஸ் கட்சியின் மீதான பரீட்சயம் கொண்ட ஜெயகாந்தன், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய பிறகு காமராஜரின் தொண்டராக மாறத் துவங்கினார். ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை குறிப்புக்களைப் படித்த பிறகும் நேருவின் உரையாடலைக் கேட்ட பிறகும் காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் ஜெயகாந்தன். இதேக்காலக் கட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாவின் செல்வாக்கில் வளரத் துவங்கியது. அதனை எதிர்த்தும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தும் ஜெயகாந்தன் பல கட்சி மாநாடுகளில் பேசி வந்துள்ளார்.தலைவர் காமராஜரின் அரசியல் லட்சியங்களே நமது லட்சியம் ஆகும். அவருடைய எதிரிகள் ஜெயக்கொடியின் எதிரிகள். அவர் சுற்றம் நம் சுற்றம்; அவர் பகை நம் பகை. அவரது ஆணை நமது பணி.”[2] என்கிறார்.
அண்ணாவைப் பற்றிக் குறிக்கின்ற பொழுது அவரைத் தனது எதிரி என்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.  அண்ணா இறந்தவுடன் அவரை மெரினா கடற்கரையில் புதைப்பது குறித்த தீர்மானத்தைக் கேள்விப்பட்ட ஜெயகாந்தன் பின்வருமாறு தன் விமர்சனத்தை முன்வைக்கிறார். “அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான்.”[3] என்கிறார். மேலும் அண்ணாதுரையின் இலக்கியப் பணி குறித்து விளக்கும் ஜெயகாந்தன்அண்ணாதுரை எழுதிய குப்பைப் புத்தகங்களையெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு.”[4] அதே போன்று பெரியாரின் சாதிமறுப்பு, கடவுள் மறுப்பு குறித்த பேச்சுக்களையும் எதிர்த்துப் பேசிவந்துள்ளார். இந்துத்துவம், பிராமனத்துவம், புராணங்களின் உண்மைத் தன்மை மற்றும் வர்ணாசிரம நியாயங்கள் குறித்துப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் அவற்றை எதிர்த்துப் பேசுகிறார்கள் என்பதாக ஜெயகாந்தனின் பேச்சுக்கள் அமைந்திருந்ததனை அவரே தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
3.2 அப்பாஸின் காங்கிரஸ் சார்புநிலை
அப்பாசை ஒரு கம்யூனிஸ்ட் எழுத்தாளர் என்று கூறிய பொழுதும் அப்பாஸ் ‘நான் ஒருபோதும் கம்யூனிஸ்ட் இல்லை’  இந்திய மக்கள் கலாமன்றத்தில் அப்பாஸ் உறுப்பினராக இருந்ததைப் பற்றிக் கூறுகின்ற பொழுது ‘அக்குழுவில் கம்யூனிஸ்ட் காரர்களே அதிகம். என்னைப் போன்ற கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள் ஒரு சிலர்தான்.’  என்கிறார். அப்பாஸ் அவர் எழுதிய சுயசரிதையில் கம்யூனிசமும் நானும் (Communism and I) எனும் தலைப்பில் அவருடைய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ‘எல்லோரும் என்னை ஒரு கம்யூனிஸ்ட் என்றே நினைக்கிறார்கள். என் கதைகளைப் படிப்பவர்கள் யாரும், கம்யூனிஸ்டாக இருக்கும் ஒருவரைத் தவிர வேறு யாரால் இது போன்ற கதைகளை எழுத முடியும் என்கின்றனர். கலிஃபோர்னியா (California) பல்கலைக் கழகத்திலிருந்து வந்த அறிஞர் குழுவினர் இந்தியாவில் கம்யூனிசம் (Communism in India) என்ற தலைப்பில் நூல் எழுதி வெளியிட்டனர். அதில் அவர்கள் என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில் அப்பாஸ் அவர்கள் பத்திரிக்கையாளர், கதையாசிரியர், திரைப்பட விமர்சகர் மேலும் இவர் கம்யூனிச இயக்கத்தோடு தொடர்புடையவர். ஆனால் இவர் தன்னை ஒரு கம்யூனிசவாதி இல்லை என்று கூறிக் கொள்பவர். ஆனால் இவருடைய படைப்புகள் அனைத்தும் கம்யூனிசம் சார்ந்தே இருக்கின்றன என்று எழுதியிருந்தனர்.’  என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாஸ் தன்னை ஒரு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவன் என்றே கூறிக் கொள்வார். இந்திரா காந்தியைப் பற்றிய நூல்கள் பலவும் எழுதியுள்ளார். அப்பாஸ் கல்லூரியில் படிக்கின்ற நாட்களிலேயே கம்யூனிசம் சார்ந்த சக மாணவர்களை நண்பர்களாகப் பெற்றார். அவர்களுடன் சேர்ந்து பழகுகின்ற நாட்களில், செய்த விவாதங்களின் வாயிலாகவே கம்யூனிசத்தை உள்வாங்கிக் கொண்டவர். எந்தக் கட்சி சார்ந்தும் உறுப்பினராக அப்பாஸ் இருக்கவில்லை. தனது 17 வயதிலேயே நேருவிற்குக் கடிதம் எழுதி அதற்குப் பதில் கடிதம் கிடைத்ததின் வழியும் நேருவுடனான நட்பினை வளர்த்துக் கொண்டார். அப்பாஸின் திரைப்படங்கள் பலமுறை நேருவின் வீட்டில் அவரது குடும்பத்தினருக்கு எனத் தனிப்பட்ட முறையில் திரையிடப்பட்டுள்ளன.

பத்திரிக்கைத் துறையில் சேர்ந்த பிறகு காங்கிரஸ் மாநாடு நடைபெறும் இடங்களுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்து கட்டுரைகளை எழுதும் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். எழுத்தாளர் எனும் முறையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த பொழுதும் இந்திய மக்கள் கலாமன்றத்திலும் உறுப்பினராக இருந்த பொழுதும் அப்பாஸிற்குக் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நண்பர்கள் மிகுதியா இருந்தனர். அவரைச் சுற்றி காங்கிரஸ் நண்பர்களுடனும் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களுடனும் பழகுகின்ற வாய்ப்பு இருந்த பொழுதும் தன்னை அப்பாஸ் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொண்டதில்லை.
2    புதினப் படைப்பாக்க நிலை
4.1 ஜெயகாந்தனின் புதினப் படைப்பாக்க நிலை
ஜெயகாந்தன் எழுதிய முதல் புதினமான வாழ்க்கை அழைக்கிறது (1957) எனும் புதினம் முதல் ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன (1989) வரையான புதினங்கள் ஆகும். இதில் பெரும்பான்மையானவை இதழ்களுக்குத் தொடர்கதைகளாக எழுதப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டவை ஆகும். ஜெயகாந்தன் ஒரு மரபு சார்ந்த படைப்பாளர் என்பதை அவரது புதினப் படைப்புக்களின் வழி அறியமுடிகின்றது. ஜெயகாந்தன் எழுதிய படைப்புக்களில் மிகவும் நேர் எதிர் விமர்சனங்களை அதிகமாகப் பெற்று வாசகர்களிடையே பிரபலமடைந்த படைப்பு அக்னிப்பிரவேசம் எனும் சிறுகதையாகும். இப்படைப்பிற்காக எழுந்த விமர்சனங்களை அடுத்து அச்சிறுகதை சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் புதினமாக உருபெற்றது. அதிலும் கங்காவின் கதை முடிவுபெறாததை உணர்ந்த ஜெயகாந்தன் கங்கா எங்கே போகிறாள்? எனும் புதினத்தில் கங்கா, பாவத்தைப் போக்கும் என நம்பப்படுகின்ற கங்கை நதியில் கலந்துவிட்டாள் என்பதாக மீண்டும் மரபு மீறாத சமூகக் கட்டமைப்புக்கு தன்னை ஒப்புக் கொடுத்துவிட்ட ஒரு படைப்பாளனாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
ஜெயகாந்தன் பெரும்பாலும் தனிமனித அவலங்களைக் கண்டு வருந்தும் மனிதாபிமானத்தோடு புதினங்களைப் படைக்கிறார் என அவரது புதினங்களைப் படித்த பலரும் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது. ஜெயகாந்தனே அதனைத் தனது சுயசரிதையில் குறிப்பிட்டும் இருக்கிறார். “எனது எழுத்துக்களும் எண்ணங்களும் கடுமையான கண்டனங்களுக்கும், மறுதலிப்புக்களுக்கும் இரையாகியும் கூட அவற்றுக்கு ஓர் அதீத வசீகரம் இருப்பதை நான் அப்போது உணர்ந்தேன். எனது எழுத்துக்களில் மனிதாபிமானம் நிறைந்திருப்பதாகக் கம்யூனிஸ்டுகள் என்னைப் பாராட்டினார்கள்.”[8] என்கிறார். இடைக்காலத்தில் ஜெயகாந்தன் எழுதிய பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, ஊருக்கு நூறு பேர், ஆயுத பூஜை போன்ற புதினங்கள் கம்யூனிசம் சார்ந்த அரசியல் குறித்த காட்சிகளைக் கொண்டிருப்பினும் அங்கும் தனிமனித மனிதாபிமான செயல்பாடுகளே முதன்மை பெறுகின்றன. பாவம் இவள் ஒரு பாப்பாத்தி எனும் புதினம் முதலாளி தொழிலாளிக்கான தொழிற்சாலைப் போராட்டத்தை முன்வைத்த போதும் போராட்டத்தில் மகனை இழந்த தாயின் புலம்பலைக் கண்டு இரக்கப்படும் விதமாகப் பாவம் இவள் ஒரு பாப்பாத்தி எனும் தலைப்பினைக் கொண்டு அமைந்துள்ளது.
ஊருக்கு நூறு பேர் புதினத்தில் கம்யூனிஸ்ட் போராளிகள் குறித்து விளக்க முற்பட்டாலும் ஆனந்தனுக்கும் ருக்குமணிக்கும் திருமணம் நடைபெறவில்லை என்பது குறித்த அனுதாபங்கள் நிறைந்திருக்கும். ஆயுத பூஜை புதினத்தில் வள்ளலாரின் பெயரில் நடத்தப்படுகின்ற மடத்தில் உள்ள பையன்கள் (ஜோதி, சுடர்வண்ணன், அருளாளன்) கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து இயங்குகின்றனர். இயக்கம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர். எப்பொழுதும் போல் வள்ளலார் மடம் சிறப்பாக இயங்குகிறது என்பதனை புதினம் விளக்குகிறது. அதனைத் தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கோகிலா என்ன செய்துவிட்டாள்? சினிமாவிற்குப் போன சித்தாளு, இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் எனத் தனிமனிதரின் வாழ்வியல் சிக்கல்களைப் பாடுபொருளாகக் கொண்டு புதினங்களைப் படைத்துள்ளார்.
தனிமனித வாழ்வின் அவலத்தைப் பற்றி விளக்கி வந்த ஜெயகாந்தன் தனது வாழ்க்கையோடு சேர்ந்த ஆன்மீகத் தேடலை முன்னிறுத்துகின்ற புதினங்களை எழுதி வெளியிட முற்பட்டார். கழுத்தில் விழுந்த மாலை, விழுதுகள், ஜய ஜய சங்கரா, ஈஸ்வர அல்லா தேரே நாம் போன்ற புதினங்களைப் படைத்துக் காட்டினார். கழுத்தில் விழுந்த மாலை புதினத்தில் ஜெயராமன் மடத்தில் சாமியாராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். ஜெயலெட்சுமியின் மீது காதல் இருந்தும் மடத்தின் கட்டுப்பாட்டில் துறவியாகிறான். அதுபோல ஈஸ்வர அல்லா தேரே நாம் புதினத்தில் அவர் கூறுவதாவது காதலர்களாக இருக்கின்ற ஒரு முஸ்லீம் பையனும் பிராமணப் பெண்ணும் சமூகத்தில் சேர்ந்து வாழ இயலாது என்பதை அறிந்து, சமூகக் கட்டுப்பாட்டிற்குப் பயந்து ஆதிநாதனின் மடத்தில் சேர்ந்து விடுகிறாள்
ஜெயகாந்தனின் புதினங்கள் பெரும்பாலும் தனிமனித ஒழுக்கக்கேடு எனச் சமூகத்தால் வரையறுக்கப் பட்டிருக்கின்ற செயல்களைப் பற்றிப் பேசினாலும் புதினத்தின் முடிவு மீண்டும் மரபு மீறாத சமூக ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாப்பதன் தேவையை வலியுறுத்தவே செய்கின்றன. இலக்கணம் மீறிய கவிதை புதினத்தில் குடும்ப வறுமையின் காரணமாகசரளா விபச்சாரியாக மாறினாள் என்கிறார். மற்ற பெண்களைப் போல் குடும்பப் பெண்ணாக வாழ விரும்புகிறாள். அதற்கான நேரம் வருவதற்குள் கைது செய்யப்படுகிறாள். அது போல் சமூகம் என்பது நாலு பேர் எனும் புதினத்தில் முத்துவேலருக்கும் அவரது பள்ளியில் வேலை செய்யும் சுகுனாவுக்குமிடையே காதல் மலருகிறது. சமூகத்தில் என்ன சொல்வார்களோ என்பதற்குப் பயந்து சுகுனா முத்துவேலரைத் திருமணம் செய்ய மறுத்து விடுகிறாள். கரு புதினத்தில் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி வாழும் குடும்பத்தைச் சேர்ந்தசரசா குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் பெண் இயந்திரமாக வாழ வேண்டிய நிலை வந்து விடும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை எனத் தீர்மானிக்கிறாள். திருமணமானவுடன் தீர்மானத்தை விட்டு உடனே குழந்தைப் பெற்றுக் கொள்கிறாள். ஒரு குடும்பத்தில் நடக்கிறது புதினத்தில் அகிலா திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு தன் கணவன் ஏற்கனவே திருமணமானவன் என்பது தெரியவருகிறது. இருப்பினும் அதுவே தன் விதி என அவனோடு சேர்ந்து வாழத் தலைப்படுகிறாள். இது போல அவரது புதினங்கள் மரபை மீறாமை குறித்து போதிக்கின்றன.
அரசியல் தொடர்பான சிந்தனைகள் வேறு, இலக்கியம் தொடர்பான சிந்தனைகள் வேறு. இவ்விரண்டிற்குமான தொடர்பு அவரது எழுத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டார். “அரசியல் மேடைகளில் நின்று முழங்குகின்ற நான் வேறு, தனிமையில் அமைதியாய் இருந்து எழுதுகின்ற நான் வேறு என்கிற பாவனையோடு நான் வாழ்ந்தேன்.”[9] என்றும்இலக்கியப் பணி என்று நான் கருதுகின்ற கதைகளிலும், நாவல்களிலும் எனது அரசியல் நோக்கங்களுக்கு நான் கிஞ்சிற்றும் இடம் தருவது இல்லை என்று முடிவு செய்தேன்.”[10] என்பதை ஜெயகாந்தன் குறிப்பிடுகின்றார். இதனையே அம்சன்குமார் “ஜெயகாந்தன் ஒரு கம்யூனிஸ்டு என்று அறிவிக்கப்பட்டிருந்த காலத்திலும் அவரது படைப்புகள் கட்சி முன்வைத்த இடதுசாரி அரசியலைப் பேசியதில்லை. வரையறைக்குட்படாத இடதுசாரி அவர். எனவே அவர் அதற்கெல்லாம் அப்பால் சென்று மனிதர்களின் பொதுப் பண்புகள் பற்றியே  ஆய்ந்து சித்தரித்தார்.”  என்பதாகக் குறிப்பிடுகிறார்.
ஜெயகாந்தன் பெண்களை முதன்மைக் கதாப்பாத்திரமாகக் கொண்டு புதினங்கள் பல எழுதியவர் ஆவார். சமூகத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக உள்ள சிக்கல்கள் குறித்து தனது புதினங்களில் விவாதித்துள்ளார். இருப்பினும் திருமணமும் குடும்ப அமைப்பும் அவசியமான ஒன்று என்பதைத் தனது படைப்புக்களில் வலியுறுத்தி வந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொண்டிருந்த பொழுதும் கூட, அவர் சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் போக்குவது குறித்த படைப்புக்களை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வர்ணாசிரமம் குறித்து ஜெயகாந்தன் குறிப்பிடுகையில் நான் வர்ணாசிரமத்துக்கு எதிரி அல்ல. வர்ணாசிரமம் என்பதே வர்க்கச் சுரண்டலற்ற சமூகம்தான்நால்வகை வருணத்தில் சுரண்டலுக்கு எங்கேயும் இடமில்லை. நமது வர்ணாசிரம சமூக அமைப்பை மகாத்மா காந்தி மிகவும் மதித்துப் பாராட்டுகிறார். காந்தியின் லட்சியச் சமுதாயமே அதுதான்.” என்கிறார்.
சமூகத்தைச் சீரழிக்கும் சாதிய ஏற்றத் தாழ்வு முறையினைக் கொண்டுள்ள வர்ணாசிரம முறையானது சமூக வளர்ச்சிக்கு எதிரானது என்பதாகப் பார்க்கும் தற்காலச் சூழலில் முற்போக்கு எழுத்தாளராகக் கருதப்படும் ஜெயகாந்தனின் இத்தகைய பார்வை சமூகத்தில் சாதியை, நிலை நிறுத்துவதற்கான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ஜெயகாந்தன் தனது சாதியைப் பற்றிக் குறிப்பிடுகின்ற பொழுதுநான் பிறவியில் பிராமணன் அல்லன். நான் வேளாளர் மரபில் பிறந்தவன். அதாவது சூத்திரன். இந்த வார்த்தையில் எனக்கு அவமானமோ ஆத்திரமோ இல்லை.”[12]என்னைப் பொறுத்தவரை ஜாதி ஒழிப்புக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். ஜாதிகளுக்கிடையே பேதங்களும், பகைமையும் நிலவுவதையே மாற்ற வேண்டும்.”[13] என்கிறார்.  
சாதிய ஏற்றத்தாழ்வைச் சட்டமாக ஏற்படுத்திக் கொடுத்த மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்தும், எரித்தும் வந்துள்ள நிலையில் ஜெயகாந்தனின் கருத்தியல் நிலைப்பாடு மனுவை ஆதரிப்பதாக, கொண்டாடுவதாக அமைகின்றது. “மனுதர்மம் ஒரு சட்டம். காலத்தின் தேவையால் நிர்ப்பந்தத்தால் உருவானச் சட்டம் அது. அதனை இக்கால அறிவும் அனுபவமும் கொண்டு பார்த்தால் தகாது.”[14] என்கிறார். ஒருவர் பெயருக்குப் பின்னால் அவரது சாதிப் பெயரைச் சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது எனும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த பெரியாரின் கொள்கைக்கு எதிராக ஜெயகாந்தன் தன்னுடைய வாதத்தை முன்வைக்கிறார். “எனக்குப் பட்டம் வேண்டும் என்கிற பிராயம் வருகிறபொழுது என் தகப்பனாருக்குரிய பட்டமாகியபிள்ளைஎன்கிற சாதிப் பட்டத்தைச் சேர்த்துக் கொள்வேன்.”[15] என்கிறார்.  
உலகிலேயே ஒரு மொழியின் பெயரை தங்களது பெயராகக் கொண்டுள்ள அல்லது பெயரோடு சேர்த்து வைத்துக் கொள்ளும் மரபினை அதிகம் பின்பற்றுபவர்கள் தமிழர்கள் ஆவர். தமிழ் மொழியின் மீதான பற்று மேலோங்கியிருக்கின்ற நிலையில் ஜெயகாந்தனின் மொழிக் கொள்கை குறித்த பார்வை முற்றிலும் வேறானதாக விளங்குகிறது. “இந்தி எதிர்ப்பும், மூடத்தனமான தமிழ்ப் பற்றும் இங்கு எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு விட்டனஎனக்கு இன்று வரை இந்தி எதிர்ப்புக்கான எந்த நியாயமும் புலப்படவில்லை. அவற்றுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை.”[16] என்கிறார்.
2.2 அப்பாஸின் புதினப் படைப்பாக்க நிலை
அப்பாஸ் தன்னை ஒரு நாத்திகவாதி என்று கூறிக் கொண்டாலும் மற்றவர்கள் கடவுளை வழிபடுவது குறித்து எவ்வித முரண்பாடும் காட்டாதவர். இருப்பினும் கடவுள் வழிபாட்டினால் அல்லது மதத்தின் பெயரால் நடைபெற்றுவரும் மூடம் பழக்க வழக்கங்களை இயன்றளவு விமர்சித்தும் வந்துள்ளார். இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர் ஆயினும் பர்தா முறையினை முற்றிலுமாக எதிர்த்து வந்தார். அவருடைய மனைவி முஜ்ஜியும் அதை வெறுப்பவர் என்பதை அறிந்தே அவரைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்ததைச் சுயசரிதையில் குறிப்பிடுகின்றார். இசுலாத்தில் திருமணத்தின்போது மணப் பெண்ணிடம் சம்மதம் கேட்பதில்லை. இதனை எதிர்த்த அப்பாஸ் தனிப்பட்ட முறையில் அவரை மணக்கவிருக்கும் முஜ்ஜியின் சம்மதத்தினைப் பெற்ற பின்னரே திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்தார். இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்து சமூக ரீதியாக உள்ள சாதி, மதம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளையும் வெறுத்தவர் ஆவார்.
    இந்து மதத்தில் உள்ள சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் அதன் கொடுமைகளையும் வெறுத்தவர். அதைப் பற்றி அவர் தனது சுயசரிதையில் குறிப்பிடுகின்ற பொழுது ‘சாதியத்தினால் நடத்தப்படும் கொடுமைகளை நான் அறிவேன். படிப்பறிவில்லாத மக்களிடம் கைநாட்டு வாங்கிக்கொண்டு கடனாகக் கொடுக்கப்படும் 100 ரூபாய் பணத்தில் வட்டி என்கிற பெயரில் 10 ரூபாயை முன்பணமாக எடுத்துக் கொண்டு 90 ரூபாயைக் கொடுத்துவிட்டு, அந்த 100 ரூபாயைத் தவனை முறையில் கட்டும்படிக் கூறிவிடுகின்றனர் நிலவுடமையாளர்கள். ஆனால் கடன் பெற்றவர் இறக்கும் வரை கட்டினாலும் கடனைக் கட்டி முடிக்க இயலுவதில்லை. எனவே கடன் பெற்றவரின் மகனைக் கடன் கட்டுவதற்காக, பண்ணை வேலை செய்யும்படி  வற்புறுத்துகின்றனர்.’  என்பதையும் குறிப்பிடுகின்றார்.
 இந்தி மொழி எதிர்ப்பு குறித்த காட்சியினை தனது ஏழு இந்தியர்கள் (Saat Hindustani) புதினத்தில் பதிவாக்கியிருக்கிறார். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு மேலோங்கியிருந்த காலகட்டத்தில் தான் எழுதிய புதினத்தில் இந்தி மொழிப் பிரசாரம் செய்யும் ஒரு தமிழரைக் கதைமாந்தராக (மகாதேவன்) ஆக்கியிருக்கிறார். இதுவரை இந்தி மொழிப் பிரச்சாரகராக இருந்து விட்ட அவர் தமிழர்களின் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு, தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாக, தான் எழுதிய இந்திப் புத்தகங்களை தீயிலிட்டு எரிப்பதோடு, இன்றுமுதல் வீட்டில் உள்ளவர்கள் யாரும் இந்தி மொழியைப் பேசுதல் கூடாது என்றும் ஆணையிடுகிறார். அதோடு இந்தி மொழி எதிர்ப்பில் தமிழ்நாடு ஒரு தனிநாடாகவே விளங்கியது என்பதையும் குறிப்பிடுகின்றார்.
அப்பாஸ் கம்யூனிஸம் சார்ந்த புதினங்களைப் படைத்திருந்தாலும் அதன்வழி அவர் அகிம்சையை வலியுறுத்தவே முயற்சி செய்துள்ளார். நக்ஸலைட்டுகள் (Naxalites) எனும் புதினத்தில் நக்ஸலைட்டுகளின் போராட்டங்களைப் பற்றி விவரிக்கின்ற அப்பாஸ் புதினத்தின் முடிவில் புதினம் எழுதப்பட்டதன் நோக்கத்தை முன்வைக்கிறார். “தோழர்களே! நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களில் பலர் நிறையக் கொலைகள் செய்து இருக்கிறீர்கள். உங்களில் பலர் கொல்லப்பட்டும் இருக்கிறீர்கள். ஆனால் இது புரட்சியின் பக்கம் நம்மை அழைத்துச் சென்று இருக்கிறதா என்பதை நினைத்துப் பாருங்கள். கொலைகள் மூலம் புரட்சியை தோற்றுவிக்க முடியாது. மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களை விழிப்படையச் செய்வதுதான் புரட்சிக்கான வழியாகும்.”  என்பதைக் குறிப்பிடுகின்றார்.
இருளும் ஒளியும் எனும் புதினத்தில் முதலாளிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிக் காரர்களால் நடத்தப்படும் போராட்டம் சிலரின் சுயநலத்தால் வெற்றி பெறாமல் போய்விடுகிறது. கோவாவின் விடுதலைக்காகப் போராடும் போராளிகளை ஏழு இந்தியர்கள் புதினத்தில் படைத்துக் காட்டும் அப்பாஸ், யாரும் வன்முறையில் இரங்காமல் அறப் போராட்டத்தையே மேற்கொள்ளும்படி சித்தரித்துள்ளார். அப்பாஸின் புதினங்கள் பொருளாதார சமத்துவத்தை முன்னிறுத்துவதாக அமையப் பெற்றுள்ளன. நான்கு நண்பர்கள் (Four Friends), பாபி (Bobby), மூன்று சக்கரங்கள் (Teen Pahiye), ஒரு புதிய காலை புலர்ந்தது (Fashilah) போன்ற புதினங்கள் முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்குமான போராட்டத்தை எடுத்துக்காட்டி பொருளாதார சமநிலையை வலியுறுத்துகின்றன.
          அப்பாஸின் குறிப்பிட்ட படைப்புக்கள் திரைப்படங்களாக வெளிவந்திருப்பதால் அவையாவும் திரைப்படத்திற்கே உரிய சில உத்திமுறைகளையும் பெற்று விளங்குகின்றன. குறிப்பாக மூன்று சக்கரங்கள் புதினத்தின் இறுதியில்பிக்குஎன்பவர் தன் மகனைக் கொன்றவர்களாகிய தனது முதலாளியையும் அவரது அடியாட்களையும் அடித்துக் கொன்றுவிடுவார். அப்பாஸின் இன்குலாப் எனும் புதினம் மிகவும் பிரபலமான புதினம் சுயசரிதை சார்ந்த புதினம் ஆகும். அதில் அப்பாஸ் அவர்கள் தனது சுயசரிதையில் விவரிக்க இயலாத பக்கங்கள் குறித்து விவரித்துள்ளார். அப்புதினத்தில் தனக்கும் கம்யூனிஸ்ட் கட்சி போராளிகளுக்குமான தொடர்பை விரிவாக விளக்குகின்றார்
முடிவுரை
        ஜெயகாந்தன் அப்பாஸின் அரசியல் சார்பு நிலையினைப் பற்றி அறிய முற்படுகின்ற பொழுது அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சி சார்ந்தவர்கள் என்பதினை அறிய முடிகின்றது. ஜெயகாந்தன் முதலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாளராக இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியினை விட்டு நீக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த காமராஜரின் தீவிரத் தொண்டராக மாறினார். அப்பாஸ் அவர்கள் ஆரம்பத்திலிருந்து ஜவஹர்லால் நேருவின் தொண்டராகச் செயல்பட்டு வந்தார். ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த போது தன்னை நாத்திகன் என்று கூறிக் கொண்டதும் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகிய பிறகு ஆன்மீகத்தின் வழி கடவுள் வழிபாட்டை ஆதரிக்கும் ஒருவராகத் தன்னை மாற்றிக் கொள்கிறார். அப்பாஸ் இறுதிவரை நாத்திகவாதியாக இருந்து வந்துள்ளார்.
          ஜெயகாந்தன் புதினங்கள் பெரும்பாலும் இந்துமத அடிப்படையிலான மரபார்ந்த சமூகக் கட்டுப்பாடுகளை வலியுறுத்துவனவாக அமையப் பெற்றுள்ளன. புதினத்தில் பாலியல் ரீதியான சமூகக் கட்டுப்பாடுகள் விவாதிக்கப்பட்டிருந்தாலும் புதினத்தின் முடிவு சமூகக் கட்டுப்பாட்டினை வலியுறுத்தும் விதமாகவே அமையப் பெறும். அப்பாஸின் புதினங்கள் பெரும்பாலும் பொருளாதார அடிப்படையில் மக்களைச் சமநிலைப் படுத்தும் கருப்பொருள்களையே கொண்டிருக்கும். மார்க்ஸியக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் வன்முறை சார்ந்த போராட்டத்தினை அப்பாஸ் ஒருபோது அவரது புதினத்தின் வழி எடுத்துரைப்பதில்லை. மேலும் மதம் சார்ந்த, சாதி சார்ந்த, பாலினம் சார்ந்த கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டிருப்பதில்லை. முடிவில் இவ்விரு படைப்பாளர்களையும் அவர்கள் வாழ்வியல் சூழலோடு அவர்களது படைப்புக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது ஜெயகாந்தன் தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொண்டபோதும் இந்துமத சமூக அமைப்பின் தன்மையினை வலியுறுத்துபவராகவே உள்ளார். அப்பாஸ் தன்னை ஒரு காங்கிரஸ்காரர் என்று கூறியிருந்தாலும் கம்யூனிஸப் படைப்பாளராகத் தனது படைப்புக்களின் வழி அடையாளப் படுத்திக் கொண்டவர் ஆவார்.




[1] Abbas K.A., I am not an Island, P – 120.
[2] ஜெயகாந்தன், ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், – 352.
[3] ஜெயகாந்தன், ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், - 369.
[4] மேலது, – 369.
[5] Abbas K.A., I am not an Island, P – 229.
[6] Abbas K.A., I am not an Island, P – 235.
[7] Abbas K.A., I am not an Island, P – 329, 330.
[8] மேலது, – 149.
[9] மேலது, -  
[10] மேலது, - 151
[11] அம்ஷன் குமார், சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன், உயிர்மை, ஏப்ரல் 2010.
[12] ஜெயகாந்தன், ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், -  231.
[13] மேலது, - 230
[14] மேலது, – 244, 245
[15] மேலது, – 409.
[16] மேலது, – 283, 284.
[17] Abbas K.A., I am not Island, P – 121.
[18] அப்பாஸ், கே., நக்ஸலைட்டுகள், ப –149.