நூல்: பேசும் பொற்சித்திரம்
ஆசிரியர்: அம்ஷன் குமார்.
பதிப்பகம்:காலச்சுவடு பதிப்பகம்.
ஆண்டு:
2007.
பக்கம்: 216.
விலை:
125.
நூலின் மொத்த கட்டுரைகள் – 25. இறுதியில்
பின்னிணைப்புகளாக 1) புகைபடங்கள் 2) திரைப்படக் கலைச்சொல் பொருளடைவு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. 25 கட்டுரைகளும் நூல்மதிப்புரையில் புரிதலுக்காக
வேண்டி நான்கு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை 1) தனிநபர் கட்டுரைகள் 2) திரைப்படக்
கட்டுரைகள் 3) விளக்கக் கட்டுரைகள் 4) விவாதக் கட்டுரைகள். மேலும் இந்நூலில் இடம் பெற்றுள்ள
கட்டுரைகளை மொழிகளின் அடிப்படையில் நான்கு வகைப்படுத்தலாம். தமிழ், மலையாளம், வங்காளம்,
ஆங்கிலம். இம்மொழிப் பின்புலங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படச் சூழலை இந்நூல் விவாதிக்கின்றது.
இதனடிப்படையில் மேற்கண்ட நான்கு வகைமைகள் நோக்கில் இம்மதிப்புரை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வகமைக்குள் இந்நூலின் அனைத்துக் கட்டுரைகளும் அடங்கும்.
இந்நூலின்
தோற்றம் குறித்து ஆசிரியர் முன்னுரையில் பின்வருமாறு:
சினிமா பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில்
நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பல கட்டுஐகள் ஏற்கனவே பிரசுரமானவை. சில
கட்டுரைகள் இப்பொழுதுதான் முதன் முதலாக வெளிவருகின்றன. எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப்
படித்துப் பார்த்த பொழுது தேவையென்று கருதியதன்பால் கட்டுரைகளில் சில வரிகளை சேர்த்திருக்கிறேன்.
தேவையற்ற என்று தோன்றிய வரிகளை நீக்கியுள்ளேன். தலைப்புக்களைக் கூட ஓரிரு இடங்களில்
மாற்றியுள்ளேன். ஆனால் எத்தகைய மனோபாவங்களில் அக்கட்டுரைகள் எழுதினேனோ அவற்றைப் பிரதிபலிக்கிற
சாராம்ஸமான வாசகங்களை நான் மாற்றவில்லை. ஒரு கட்டுரையில் இடம் பெற்ற பாரதியின் கவிதை
வரி மீது அபிமானம் மேலும் அதிகரிக்கவே அது நூலின் தலைப்புமாயிற்று.
1) தனிநபர் கட்டுரைகள்
இப்பகுதி மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றது.
1) திரைப்பட இயக்குனர்கள் பற்றியது 2) திரைப்பட நடிகர்கள் பற்றியது 3) படைப்பாளர் பற்றியது.
திரைப்பட இயக்குனர்கள்
இப்பகுதி தமிழ், மலையாளம், வங்காளம், ஆங்கிலம்
ஆகிய மொழிகளின் அடிப்படையில் திரைப்பட இயக்குனர்களை
வகைப்படுத்துகின்றது. அந்த வகையில் அபூர்வ இரட்டையர்கள் என்னும் தலைப்பில் ஒரு இயக்குனர்,
ஒரு இசைமைப்பாளர் ஆகிய இருவர்களைப் பற்றி விவரிக்கின்றது. ‘நிமாய் கோஷ்’. இவர் தமிழ்த்
திரைப்பட இயக்குனர் என்றாலும் அவர் வங்காளத்தில் பிறந்தவர். மற்றும் ஒரு இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசன், இவர் தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும்
மலையாளப் படங்களின் இசையமைப்பாளர் ஆவார்.
அபூர்வ இரட்டையர்கள்
நிமாய்கோஷ் வங்காளத்தில் 1915 இல் பிறந்து
சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்தவர். 19 வயதிலேயே கேமராமேனாக பணியாற்றியவர்.
1950 இல் ‘பாதை தெரியுது பார்’ எனும் படத்தின் இயக்குனராக விளங்கினார். இதுவே அவர்
இயக்கிய முதல் படம். இப்படத்திற்கு ஜனாதிபதி விருதும் கிடைத்தது. இப்படத்திற்கு ஜெயகாந்தன்
‘தென்னங்கீற்று ஊஞ்சலிலிலே’ எனும் பாடலை எழுதியுள்ளார். எம்.பி. சீனிவாசன் இப்பாடலுக்கு
இசையமைத்துள்ளார். 1976 இல் நிமாய் கோஷிற்கு ‘ஹம்சா கீதே’ எனும் கன்னடப் படத்திற்கான
சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைத்தது. மேலும் அவர் இறுதியாக 1981 இல் ‘சூறாவளி’ எனும்
திரைப்படத்தை இயக்கினார். இதன் பின்னர்
1988 இல் நிமாய்கோஷ் காலமானார்.
எம்.பி.சீனிவாசன் மலையாளப் படங்களுக்கு
மிகுதியாக இசையமைத்துள்ளார். இவர் கேரளாவில் 1970 ‘மெட்ராஸ் யூத் கொயர்’ எனும் அமைப்பினைத்
தோற்றுவித்தார். 1986 இல் இவரின் சேர்ந்திசைக்காக சங்கீத நாடக அகாதமி விருது வழங்கியது.
என இவ்விருவரின் திரைப்படப் பங்களிப்பினை விளக்கியுள்ளார் ஆசிரியர்.
இதனை அடுத்து மலையாளத்தில் சிறந்து விளங்கிய
இயக்குனர்கள் 1) அடூர் கோபால கிருஷ்ணன் 2) ஜி. அரவிந்தன் ஆகிய இருவரை நூலாசிரியர் அறிமுகம்
செய்கிறார்.
அடூருக்கு பால்கே விருது: மாற்று சினிமாவிற்கு மீண்டும்
அங்கீகாரம்.
அடூர் கோபாலகிருஷ்ணனின் முதல் பட சுயம்வரம்
(1972) இவரே கேரளாவில் முதல் திரைப்பட சங்கமான கலாசித்ராவை நிறுவினார். அடூரின் சிறந்த
படமாகக் கருதப்படுவது ‘எலிப்பாத்தாயாம்’ (1981), ‘கொடியேட்டம்’ (1997), ‘முகாமுகம்’
(1984), ‘ஆனந்தம்’ (1987), ‘விதேயன்’ (1994), ‘நிழல் குத்து’ (2002), ‘கதாபுருஷன்’
(1995), ‘மதிலுக்கல்’ (1989) போன்ற படங்களை இயக்கியவர் என இவரைப் பற்றி விவரிக்கும் ஆசிரியர் அடூருக்கு பால்கே விருது கொடுக்கப்பட்டவருடத்தைக்
குறிப்பிடவில்லை.
ஜி. அரவிந்தன்
முதல் படம் 1974 இல் ‘உத்தராயணம்’ எனும்
மலையாளப் படத்தினை இயக்கினார். இந்தி நடிகை ஸ்மிதா படீல் அரவிந்தனுடன் இணைந்து பணியாற்றுகின்ற
பொழுது உருவாக்கிய படம் ‘சிதம்பரம்’. இதனைத் தொடர்ந்து ஜே.கிருஷனமூர்த்தி, போக்கு வெயில், குமாட்டி, போன்ற
திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வெளிநாட்டுத் திரைபடங்களின் இயக்குனர்கள்
இங்மர் பெர்க்மன்
ஸ்வீடனில் உப்சாலாவில் 1918 இல் பிறந்தவர். ஸ்வீடன்
திரைப்படங்களை உலகத் திரைப்பட வரிசைக்கு எடுத்துச் சென்றவர். இவர் எழுதிய முதல் திரக்கதை
‘பிரெஞ்சி’ (Frenzy) என்ற பெயரில் 1944 இல் வெளிவந்தது. 1946 இல் ‘கிரிஸிஸ்’ என்ற திரைப்படத்தை
முதலில் இயக்கினார். 1955 இல் வெளியான Smiles of a Summer Night என்ற திரைப்படமே இவருக்குப்
புகழைப் பெற்றுத் தந்தது. 1956 இல் Seventh Seal என்ற திரைப்படம் வெளியானது. 1963 இல்
All These Women எனும் படத்தை இயக்கினார். இவர் படங்களில் ஆவிகள் கதைமாந்தார்களாகத்
தோன்றுபவர்.
அகிரா குரோசாவா
1910 இல் பிறந்தவர். ஜப்பான் நாட்டைச்
சேர்ந்தவர். 1943 இல் ‘சன்ஹிரோ சுகாடா’ எனும்
திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார். 1951 இல் வெளியான ‘ரஷோமன்’ திரைப்படம் சிறந்த
திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது. 1970 இல் ‘டொடஸ்காடன்’ எனும் அவரது முதல் வண்ணப்படம்
வெளிவந்தது. இவரது ‘ரான்’ எனும் படம் ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ எனும் நாடகத்தினை
அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இவரது திரைபடங்கள் மனிதனின் அடிப்படை குணங்களைச்
சித்தரிப்பதிலும் மனித நேயத்தைப் பாராட்டுவதிலும் மனிதனின் மீது இக்கட்டான தருணங்களிலும்
கூட நம்பிக்கை கொள்வதிலும் அவரது படங்கள் ஒரு போதும் பின் தங்கியன அல்ல என்கிறார் ஆசிரியர்.
நடிகர்கள்
இந்நூலில் ஆசிரியர் இரண்டு நடிகர்களைப்
பற்றி விவரிக்கின்றார். 1) தமிழ்த் திரையுலகின் நடிகர் திலகம் ‘சிவாஜி கணேசன்’ 2) ஹாலிவுட்
திரைப்பட நடிகர் மார்லன் பிராண்டோ.
மிகை நாடிய கலைஞன்
தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகம் எனப்
போற்றப் பெற்றவர் சிவாஜி கணேசன். 1953 இல் வெளியான ‘பராசக்தி’ இவர் நடித்த முதல் படம்.
அவர் வில்லனாக நடித்த ஒரு படம் ‘அந்த நாள்’ மேலும் திருவருட் செல்வர் திரைப்படத்தில்
அப்பாராக நடித்திருக்கின்றார். இவருக்குப் பட்டங்கள் பல வழங்கப்பட்டன. ‘சிவாஜி என்பதே
பெரியார் சூட்டிய பட்டப் பெயர்தான். ‘நடிகர் திலகம்’ என்கிற பட்டம் ‘பேசும் படம்’ வாசகர்
ஒருவரால் வழங்கப்பட்டது. ‘கலைக் குரிசில்’ என்ற பட்டத்தை இலங்கைத் தமிழர்கள் வழங்கினர்.
மேலும் பத்மஸ்ரீ, பத்மா பூஷண், தாதா சாகேப் பால்கே, சேவாலியே போன்ற விருதுகள் பல பெற்றவர்.
இவரது நடிப்பைப் பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர், ‘சிவாஜி மகிழ்ச்சியில் துள்ளிக்
குதிப்பார், சோகத்தில் கதறி அழுவார், வலியில் துடிதுடிப்பார், பாசத்தில் பரவசம் காட்டுவார்,
பயத்தில் நடுங்குவார். வீரத்தில் கர்ஜனை புரிவார் என்கிறார். மேலும் சிவாஜி கணேசன்
வட இந்தியராகப் பிறந்திருந்தால் ‘தாதா சாகேப் பால்கே’ விருது இவ்வளவு தாமதமாகக் கிடைத்திருக்காது
என்றும் அதுவே அமெரிக்காவில் பிறந்திருந்தால் அவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கும்
என்றும் குறிப்பிடுகின்றார்.
மார்லன் பிராண்டோ
“ஒரு நடிகன் வெற்றி பெற முடியாது போனால்
அவன் குஷ்டரோகிக்கும் கீழாக மதிக்கப்படுவான்” என்று கூறும் மார்லன் பிராண்டோ தனது
50 வருட சினிமா வாழ்க்கையில் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல வேடங்கள் பூண்டு
நடித்திருக்கிறார். ஒவ்வொரு பாத்திரத்திற்காகவும் அவர் தன்னை வெகு சிரத்தையுடன் தயார்
செய்து கொள்வார். அவரது முதல் படம் The men 1950 வெளிவந்தது. பிராண்டோ திமிர்பிடித்த
சிறுபிள்ளைத் தனமான நடிகராகவும் இருந்தார். இவர் தனது ‘காட்பாதர்’ என்ற திரைப்படத்திற்குக்
கிடைத்த இரண்டாவது ஆஸ்கார் விருதினை ஏற்க மருத்தார். பிராண்டோ ஹாலிவுட்டை அதனுள்ளிருந்து
கொண்டே எதிர்த்தவர் ஆவார்.
படைப்பாளர்
இலக்கியப் படைப்பாளியாக விளங்கும் பாரதியாரின்
பாடல்கள் சினிமாவில் இடம் பெற்றதையும் பாரதி திரைப்படம் வெளிவந்ததையும் இக்கட்டுரை
விளக்குகின்றது.
சினிமாவில் பாரதி
பாரதி 1921 இல் இறக்கும் வரை தமிழில் மௌனப்படங்களே
வெளிவந்திருந்தன. இந்நிலையில் பாரதி சினிமா குறித்து கருத்துக்கள் ஏதும் வெளிப்படுத்தாமலிருப்பது
ஆச்சரியமூட்டுகிறது என்கிறார் ஆசிரியர். பாரதியின் பாடல் முதன் முதலாக 1935 இல் ‘மேனகா’
எனும் படத்தில் இடம்பெற்றது. பின்னர் 1982 இல் வெளியான ‘ஏழாவது மனிதன்’ எனும் படத்தில்
முழுவதும் பாரதியின் பாடல்களே உள்ளன. மேலும் பாரதியின் பாடல்கள் திரைப்படங்களில் பல
இடங்களில் வெளிப்பட்டு வந்துள்ளன. ஒருவேளை
பாரதி மேலும் பத்து பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து, திரைப்படம் பேசி பாடிய காலத்தில்
பாடல்களும் வசனங்களும் எழுதியிருந்தால் தமிழ்ச் சினிமாவின் தரம் உயர்ந்திருக்குமோ!
என்னவோ! என தமிழ் சினிமாவின் நிலையினை வெளிப்படுத்துகின்றார்
ஆசிரியர். பலகாலம் கழித்து 2001 இல் பாரதி எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.
2) திரைப்படக் கட்டுரைகள்
இப்பகுதி நூலில் விமர்சிக்கப்பட்டுள்ள
திரைப்படங்களை மொழிவாரியாக முன்னர்க் கூறியது போல தமிழ், மலையாளம், வங்காளம், ஆங்கிலம்
எனும் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றது.
தமிழ்த் திரைப்படம்
இந்நூலில் இரண்டு தமிழ்த் திரைபடங்கள்
பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன. 1) ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ 2) நூலாசிரியரான
அம்ஷன் குமார் இயக்கிய ‘மூன்றாம் தியேட்டர்’
உன்னைப் போல் ஒருவன்
“ஒரு படம் வெளியாகும் பொழுது படத்தாயாரிப்பாலரோ,
இயக்குனரோ ரசிக தெய்வங்களைக் கும்பிட்டு படத்தைப் பார்த்து தங்களை வாழவையுங்கள் என்று
வேண்டுகோளுடன் பத்திரிக்கைகயில் தங்கள் புகைப்படங்களைப் பிரசுரிப்பார்கள். ஆனால் ஜெயகாந்தன்
வீர முழக்கத்துடன் ஒரு கலைஞனாய் தன்னை உணர்த்திய பாங்கு அதுவரை தமிழ் திரை உலகம் கண்டிராத
ஒன்றாகும்.
உன்னைப் போல் ஒருவன்
படத்தைப் பார்க்க வந்த பத்திரிக்கையாளர்களை நோக்கி அவர் கூறியதாவது, ‘இன்றைய தமிழ்
சினிமா ரசனையையும் அதன் சிருஷ்டி முறைகளையும் இந்தப்படம் பூரணமாக மறுத்து ஒதுக்கி இருக்கிறது
என்று தெரிந்தும் பார்க்க வந்திருக்கும் நண்பர்களே உங்களை நான் வணங்குகிறேன், பாராட்டுகிறேன்.
காலத்தின் தேவையை உணர்ந்து ஒரு கடமையை ஆற்ற வந்தவர்கள் நாங்கள் இந்தப்படம் அதற்கான
ஓர் ஆரம்பமே’ என்றார்.
தமிழ் சினிமாவை விமர்சித்து வந்த ஜெயகாந்தன்
சில நண்பர்களின் தூண்டுதல்களினால் திரையுலகிற்குள் நிழைந்தார். உன்னைப் போல் ஒருவன்
நாவலை திரைக்கதை எழுதி தயாரிப்பாளர் வீனஸ் கிருஷனா மூர்க்த்தியை சந்தித்த பொழுது அவர்
படம் முழுவதும் சமைப்பதும் சாப்பிடுவதும் படுத்துத் தூங்குவதுமாகத்தான் இருக்கிறது
என்று மறுத்து விட்டார். அதன் பின்னர் சில நண்பர்களுடன் ஆசிய ஜோதி பிலிம்ஸ் பட நிறுவனத்தைத்
துவக்கி உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் எடுக்கப்பட்டது.
படம் எடுப்பதில் சற்றும் அனுபவம் இல்லாத
ஜெயகாந்தன், படம் எடுத்த தன்மையினை ஆசிரியர் பின்வருமாறு விளக்குகிறார். “உன்னைப் போல்
ஒருவன் படத்தில் கதாநாயகியாக நடித்த காந்திமதி தலைவாரும் காட்சி அது. காட்சிப்படி பலகாலம்
எண்ணெய் பசையற்ற பரட்டையான அவரது தலை முடியில் சீப்பு வாரப்பட்டு சிக்கி இரண்டாக ஒடிய
வேண்டும். கேமரா ஓடுகிறது. காந்திமதி தலைவாரத் துவங்குகிறார். அது மக்கிப்போன மரச்சீப்புதான்
என்றாலும் எதிர்பார்த்தபடி உடையவில்லை. மறுபடியும் மறுபடியும் தலைவாரிக் கொண்டே இருக்கிறார்.
கேமரா ஓடிக்கொண்டே இருக்கிறது ஜெயகாந்தனோ ‘இம் ... இன்னும் அழுத்தமாக வாருங்கள் இன்னொரு
முறை’.... ‘ஓடட்டும்..... சீப்பு உடையும் வரை ஓடட்டும்’ பிலிம் சுருள் அனைத்தும் ஓடி
முடியும் போதுதான் சீப்பு உடைந்தது. அதுவே ஒரு அனுபவமுள்ள இயக்குனராக இருந்திருந்தால்
அதை கட் செய்து இரண்டு ஷாட்டுகளாகக் குறைந்த பிலிமில் எடுத்திருப்பார். படம் 21 நாட்களில்
எடுத்து முடிக்கப்பட்டது. மொத்த செலவு ஒரு இலட்சம் ரூபாய் 1964 டிசம்பர் 31 இல் வெளியானது.
அகில இந்திய அளவில் உன்னைப் போல் ஒருவன் படம் மூன்றாம் பரிசினை மத்திய அரசிடமிருந்து
பெற்றது. ஆங்கிலப் பத்திரிக்கைகள் பாராட்டின. அப்போதைய முதலமைச்சர் காமராசர் உள்பட
பலரும் பாராட்டினர்.
படம் சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரில் திரையிடப்பட்டது.
தியேட்டர்க்காரர்களும் விநியோகஸ்தகர்களும் மக்களைப் பார்க்க விடக்கூடாது என்பதற்காக
61/2 மணிக்கே டிக்கெட் தராமல் தியேட்டர் வாயிலை மூடினர். எனவே ஜெயகாந்தனும் அவரது நண்பர்களும்
கையில் தடியோடு தியேட்டர் வாயிலைத் திறந்து வந்துக் கொண்டு காவல்காத்தனர். கோர்ட் நோட்டீஸ்
வங்கியும் படத்தை ஒப்பந்த காலத்திற்கு மேல் ஒரு காட்சி கூட ஓட்ட விடாமல் படம் தியேட்டரிலிருந்து
எடுக்கப்பட்டது. படம் வழக்கமான வணிக முறையில் தோற்றுப் போனதே ஒழுய அழைப்பின் பேரில்
பல இடங்களில் காட்டப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டதான் பேரில் ஓரளவு வருமானம் கிடைத்தது.
படத்தைப் பற்றிய விமர்சங்கங்கள் பல வந்தன. 1) படம் முழுவதும் கும்மிருட்டு, சேரிக்குடியிருப்பில்
சூர்ய ஒலி கூடவா விழவில்லை. இதற்கு ஜெயகாந்தனே தனது குற்றத்தினை ஏற்றுக் கொண்டார்.
2) படம், முழுக்க முழுக்க ஸ்டூடியோவிலேயே எடுக்கப்பட்டிருந்தது. சேரி செட் தத்ரூபமாக
இல்லை.
தமிழ் இலக்கியத்திற்கு யதார்த்த வாதத்தை
கொண்டு வந்தவர்களில் தலையானவர் ஜெயகாந்தன். இந்நிலையில் உன்னைப் போல் ஒருவன் ஒரு இலக்கியப்
படைப்பாளியின் படம். அந்த இலக்கியப் படைப்பாளிக்கு திரைப்படம் எடுப்பதில் தடுமாற்றங்கள்
இருந்ததேயொழிய சினிமாவின் மொழி பற்றிய தெளிதல் நன்றாகவே இருந்திருக்கின்றது. இலக்கியத்திற்கும்
சினிமாவிற்கும் உள்ள அடிப்படை நுணுக்கங்களைப் பற்றிய அறிதலும் காணப்படுகிறது என உன்னைப்
போல் ஒருவன் திரைப்படம் உருவான நிலையினை விளக்குகின்றார் நூலாசிரியர்.
ஒரு டாக்குமெண்ட்ரியின் கதை
இந்நூலின் ஆசிரியர் இக்கட்டுரையில் ‘பாதல் சர்க்கார்’
பற்றிய ஒரு டாக்குமெண்ட்ரி படம் எடுத்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். படமெடுப்பதற்கு
பணத்திற்காக சிரமப் படத்தையும் சர்க்காரைச் சந்தித்து அவர் நடித்த நாடகங்களைப் படம்
எடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக ‘மூன்றாம் தியேட்டர்’ எனும் பெயரில்
1995 இல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது என்கிறார்.
மலையாளத் திரைப்படம்
அம்மா அறியான்
ஜான் ஆபிரகாம் மூன்று மலையாளப் படங்களுடன்
ஒரு தமிழ் படத்தினையும் எடுத்திருக்கிறார். இவரின் முதல் படம் ‘வித்தியாதிகளே இதிலே
இதிலே’ அவர் எடுத்த தமிழ்த் திரைப்படம் ‘அக்கிரகாரத்தில் கழுதை' இது குறியீடு நிறைந்த
படம். 1978 இல் சிறந்த தமிழ்ப் படமாக தேசிய விருது பெற்றது. ஜான் ஆப்ரகாமின் இறுதிப்படம்
‘அம்மா அறியான்’ வர்க்க பேதமற்ற சமூகம் உருவாக வேண்டும் என்பதாக படம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
1987 இல் இந்திய தேசிய திரைப்பட விழாவில் ஜூரிகளின் சிறப்பு விருதினைப் பெற்றது. அந்த
வருடமே ஜான் ஆபிரகாம் இறந்தார்.
வங்காளத் திரைப்படம்
நெடுந்தூரம் ஒலிக்கும் தெருப்பாடல்
ஒரு மேதமையின் ஆளுமை எனும் தலைப்பில்
1994 இல் புதிய நம்பிக்கையின் வெளியீடாக வந்தது. முதலில் சத்தியசித் ராயினை முன்வைத்து
தலைப்பிடப்பட்டு எழுதப்பட்ட இக்கட்டுரை முன்னுரையில் ஆசிரியர் கூறியது போல நெடுந்தூரம்
ஒலிக்கும் தெருப்பாடல் என மாற்றப்பட்டுள்ளது. இதில் பதேர் பாஞ்சாலி எனும் வங்க மொழிச்
சொல்லின் பொருள் தெருப்பாடல் என்பதாகும். ராயின் முதல் படமாக பதேர் பாஞ்சாலி
(1955) விளங்குகிறது.
நல்ல ஓவியம் இலக்கியம் சங்கீதம் ஆகியவை
இங்கு சாத்தியபடும் பொழுது நல்ல சினிமா மட்டும் எவ்வாறு நழுவிப் போகிறது என்பதை ஆராயத்
தொடங்கினார். வசதி குறைந்த இந்திய சூழலில் நல்ல படம் எடுக்க முடியாது எனும் கூற்றை
மறுக்கிறார். இவ்வாறு சத்திய சித்திராயின் சினிமாப் பார்வையினை பற்றிய கட்டுரையாக ஆசிரியர்
அமைத்துள்ளார்.
ஹாலிவுட் திரைப்படம்
லா ஸ்டிராடா
பிரடரிக்கோ பெல்லிணியின் (Frederico
Fellini) சிறந்த படம் லா ஸ்டிராடா, இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். 1920 இல் பிறந்தார்.
லா ஸ்டிராடா 1954 இல் வெளிவந்தது. முதன் முதலில் வெனிஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
அங்கு வெள்ளி சிங்கம் விருதினைப் பெற்றது. சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கார்
உட்பட மொத்தம் நூற்றிநாற்பத்தியெட்டு பரிசுகளைப் பெற்றது. படத்தின் செலவை விட இருபது
மடங்கு இலாபம் பெற்றது. இத்தகு சிறப்புகளைப் பெற்ற சிறந்த கலைப்படமாக இது விளங்குகின்றது.
3) விளக்கக் கட்டுரைகள்
இந்நூலில் ஆசிரியர் திரையுலகம் குறித்த
பதிவுகளை கட்டுரைகளின் வாயிலாக விளக்கியுள்ளார். அவ்வகைக் கட்டுரைகள் வரிசைப்படுத்தப்பட்டு
இப்பகுதியில் கூறப்படுகின்றன.
மாறுதலான சினிமாவும் மாறிவரும் சினிமாப் பார்வையும்
இக்கட்டுரையில் சினிமாத்துறை குறித்த சிந்தனை
மேலைநாட்டாரை விட நம்மிடையே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதை ஆசிரியர் விளக்குவதாக
அமைத்திருக்கின்றார். “இந்தியாவில் சினிமா தயாரிப்பு, சினிமா விமர்சனம் இவற்றைத் தாண்டி
திரையியல் (Film Theory) என்ற முக்கியமான பிரிவு உருவாகவில்லை. மேலும் film sense,
film as art, போன்ற திரையியல் புத்தகங்கள் ஏன் நம்மிடம் தோன்றவில்லை என வினவுகின்றார்.
அமெரிக்கக் கவிஞர் வசேல் லிண்டேஸ் 1916 இல் சினிமா சாதனத்தின் மேன்மை பற்றி ஒரு கருத்தாய்வினை
முன்வைத்தார். அதே வருடம் ஹியூகோ முன்ஸ்டர்பார்க்கின் திரையியல் ஆய்வும் வெளியானது. இவர்கள் திரைப்படத்தை உடனே ஒரு கலையாக ஏற்றுக் கொண்டுவிட்டனர்.
ஆனால் இந்தியாவிற்கு சினிமா இறக்குமதியான பொழுது இத்தகைய சர்ச்சைகள் நடத்தப்படவில்லை.
இப்பொழுது சினிமா – வீடியோ ஆகிய சாதன உரிமையாளர்களிடையே நடைபெறும் வழக்கு வெறும் வியாபாரத்தை
அடிப்படையாகக் கொண்டுள்ளது. திரையியலை நாமதாக்கிக் கொள்ள நாம் எக்காலத்திலும் முயற்சி
செய்யவில்லை. அவ்வாறு திரையியல் துறையைப் புறக்கணித்த போதிலும் திரைப்படத்தையே நாம்
முற்றிலும் புறக்கணித்து விடவில்லை. ஒரு சில நல்ல திரைபடங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டு
வருகின்றன. இவற்றைச் சிறுபான்மையினர்தான் பார்க்கின்றனர். இந்தியாவில் கலைப்பட முயற்சிகளுக்கு
முன்னோடியான ‘பாதர் பாஞ்சாலி’ திரைப்படம் பெரும் பான்மையான ஆதரவைப் பெற்று நல்ல வசூலையும்
கொடுத்தது. நல்ல கதை. நல்ல நடிப்பு, பொருத்தமான இசை என்று சினிமாவின் பல்வேறு அம்சங்களும்
‘ராய்’ இயக்குகின்ற படங்களில் ஒருங்கேக் காணலாம். “ஜனரஞ்சகமாகவும் கலைத்திரனுடனும்
கூடிய திரைப்படம்தான் இடைவகை சினிமா (Middle cinema) அந்த வகையில் பதேர் பாஞ்சாலி பொருத்தமுடையது
என்கிறார்.
குறும்படங்கள், டாக்குமெண்டரிகள் ஆகியவற்றின் வாயிலாக
தமிழில் மாற்று சினிமா.
குறும்படங்கள் குறைந்தது பத்து வினாடிகள்
முதல் அதிக பட்சமாக எழுவது நிமிடங்கள் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. டாக்குமெண்ட்ரி
என்றால் தகவல்படம், செய்திப்படம், விவரணப்படம், ஆவணப்படம் என்று கூறப்படுகின்றது. டாக்குமெண்ட்ரி
என்ற சொல் ஜான் கிரீசனால் ‘மோனா’ எனும் ராபர்ட் பிளாகார்டியின் படத்தைப் பற்றி
1929 இல் எழுதிய கட்டுரையில் பயன்படுத்தப்பட்டது. டாக்குமெண்ட்ரி என்ற சாதனத்தை முதலில்
புரிந்து கொண்ட தமிழர் ஏ.கே செட்டியார் ஆவார். 1940 இல் மகாத்மா காந்தி எனும் திரைப்படத்தை
எடுத்தார். இவரைத் தொடர்ந்து பிரபல எடிட்டராக விளங்கிய பி.லெனின் 1991 இல் ‘நாக் அவுட்’
எனும் 17 நிமிடக் குறும்படத்தை எடுத்தார். இப்படம் தேசிய விருதினைப் பெற்றது. 1955
இல் குற்றவாளி எனும் படம் இவரால் எடுக்கப்பட்டது. டாக்குமெண்ட்ரி படங்களும் குறும்படங்களும்
முழு நீலப் படங்களைப் போன்று திரையரங்குகளில் திரையிடப்படுவதில்லை. இருப்பினும் அவ்வப்போது
போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இது மட்டும் மாற்றுத் திரைப்படங்களை
வளர்த்தெடுப்பதில்லை. இத்திரைப்படங்கள் பொதுமக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில்
குறும்படங்களுக்கான சிறிய அரங்குகள் கட்டித் தரப்பட வேண்டும். மேலும் அப்படங்கள் விற்பனைக்கு
கொண்டு செல்லப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
தொலைக்காட்சி விளம்பரப் படங்கள்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரப்
படங்கள் பிற நிகழ்ச்சிகளின் நேரங்களை அதிகப்படுத்த பெரிதும் உதவுகின்றன. பொருட்களின்
விற்பனையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு எடுக்கப்படுவதால் இப்படங்கள் கவர்ச்சியினை
முதன்மைப் படுத்துகின்றன. இத்தகைய விளம்பரப் படங்களில் நடிக்கின்ற நடிகர்கள் மக்கள்
மத்தியில் விலாசமற்றுப் போகின்றார்கள். இந்திய அளவில் விளம்பரப்படங்கள் வெளிநாட்டு
விளம்பரப் படங்களைப் பின்பற்றி எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவை குழந்தைகளைப் பெரிதும்
கவரும் வண்ணம் எடுக்கப்படுகின்றன. விளம்பரப் படங்கள் கலையா? அல்லது வெறும் காட்சிகள்
மட்டும்தானா? என வருகின்ற பொழுது அது வியாபாரத்திற்கான புதிய ஒரு நிகழ்வு என்றே ஒப்புக்
கொள்கின்றார் ஆசிரியர்.
தமிழ்ச் சினிமா நேற்று இன்று நாளை
இந்திய அளவில் சினிமா வரலாற்றைப் பார்க்கின்ற
பொழுது இந்தி சினிமாவிற்கு ஒரு சில வருடங்களுக்குப் பின் தங்கியது தமிழ் சினிமாவின்
துவக்கம். 1916 இல் ஆர். நடராஜ முதலியார் ‘கீசக வதம்’ எனும் மௌனப்படத்தினை எடுத்தார்.
இதுவே தென்னிந்தியாவின் முதல் படம். 1912 இல் தாதா சாகேப் பால்கே ‘ராஜா ஹரிசந்திரா
படத்தை இயக்கினார். 1930 களில் பேசும் படம்
வரும் வரை தமிழ் சினிமா இரண்டாம் தரமானவைகளாகவே இருந்து வந்தது. பின்னர் தமிழ் சினிமா
பெரும் வியாபாரமாக ஏற்றம் பெற்றது. அந்நிய ஆட்சியை விமர்சித்து தொடக்கத்தில் திராவிட
இயக்கம் சினிமாவிற்குச் சாதன ரீதியாக ஆற்றிய முக்கியப் பங்கு செந்தமிழ் வசனங்கள் ஆகும்.
சி.என். அண்ணாத்துரை, மு.கருணாநிதி ஆகியோரின் வசனங்கள் பிரசாரங்கள் ஆகின.
பாடல் காட்சிக்கு உலக
சினிமாவில் இடம் கிடையாது என்ற போதிலும் இந்திய சினிமாவிற்கே உரியவைகளாகப் பாடல் காட்சிகள்
விளங்கின. பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
தமிழில் முதல் வண்ணப்படம் 1955 இல் வெளியான அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஆகும்.
பொதுவாக சினிமாவை வியாபாரப்படம் – கலைப்படம் என இருவகைப்படுத்துவர். வெகுசன சினிமா
மக்களால் உருவாக்கப்படவில்லை. அது வியாபாரிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சினிமாவை
உருவாக்குவதில் இரசிகர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என விளக்கும் ஆசிரியர் மேலும்
‘பி.எஸ். இராமையா, பாரதிதாசன் போன்ற பல எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலர் சினிமாவிற்குள்
காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் ஆளுமையை அதில் உணர்த்தவில்லை.
சினிமா ஆசையால் புதுமைப்பித்தன் அலைக்கழிக்கப்பட்டார். விஞ்ஞானக் கதைகள் எழுதும் சுஜாதா
மசாலா படங்களுக்கு வசனம் எழுதுவதில் முன்னோடியாக இருக்கிறார். ஒத்துப் போவதில் எவ்விதத்
தயக்கமும் கொள்வதில்லை. சினிமாவையே தொழிலாகக் கொண்டுள்ள சினிமாக் கதாசிரியர்கள் சில
சமயங்களில் செய்கிற புதுமைகளைக் கூட அவர்கள் செய்யத் துணிவதில்லை. ஜெயகாந்தன் ஒரேயொரு
பாராட்டத்தக்க விதிவிலக்கு. எனக் கூறும் ஆசிரியர் நல்ல சினிமா உருவாக சில வேண்டுகோள்களை
முன்வைக்கின்றார்.
‘தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரை சினிமா
என்றாலே அது வியாபாரச் சினிமாதான். நல்ல சினிமாவைப் பற்றி வெகுசன சினிமாக் கலைஞர்கள்
நிறைய பேசுகிறார்கள். ஆனால் சினிமாத் தயாரிப்பு என்று வந்துவிட்டால் கோடம்பாக்கத்து
பார்முலாவைத் தாண்டமாட்டேன் என்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். பெரும் தயாரிப்பாளர்கள்
குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது இம்மாதிரியான திரைப்படங்களை எடுக்க வேண்டும்
என்கிறார்.
தமிழ்த் திரைப்படங்களில் காதல்
காதல் என்கிற சொல்லை மிக அதிகமாகப் பயன்படுத்திப்
படத்தலைப்புகள் வைத்த சினிமா தமிழ்ச் சினிமாவாகத்தான் இருக்கும். இருப்பினும் ஆரம்ப
காலகட்டத்தில் திரைப்படங்களில் காதல் முக்கியத்துவம் பெறவில்லை. பூரணக்கதைகளே அதிகம்
இடம் பெற்று விளங்கின. இந்தியா விடுதலைக்கு முன்பு வரை திரைபடங்கள் சமூகக் கருத்துக்களுக்கே
முதன்மை அளித்து வந்தன. ஐம்பதுகளிலிருந்துதான் காதலுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்
தொடர்க்சியாக வெளிவரத் தொடங்கின. 1917 இல் சரத் சந்திரா சட்டர்ஜி ‘தேவதாஸ்’ எனும் நாவலை
எழுதினார். மௌனப்படக் காலத்திலேயே அது திரைப்படமாக வெளிவந்தது. ஆனால் பேசும் படமாக
1937 இல் வங்காளத்தில் பெரும் வெற்றி பெற்றது. தமிழிலும் தெலுங்கிலும் தேவதாஸ் ஒரே
நேரத்தில் ‘வேதாந்தம் ராகவையா’ இயக்கத்தில்
1953 இல் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. பலமுறைப் படமாக்கப்பட்ட ஒரு இந்திய
நாவல் என்றால் அது தேவதாஸ்தான். தமிழ் சினிமாவிலும் தேவதாஸ் காதல் படங்களுக்கு முன்னோடியாக
விளங்குகிறது. முக்கோணக் காதல் தமிழ்ப் படத்தில்
பிரத்யேக குணங்களுடன் வந்தடைந்த படம் ‘கல்யாணப் பரிசு’ இதில் இரண்டு பெண்கள் ஒரு ஆண்,
அதே போல இரண்டு ஆண் ஒரு பெண், கொண்ட முக்கோணக் காதல் படங்களும் வந்துள்ளன. இதற்கு முன்னோடியாக
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இருக்கின்றது. மேலும் எம்.ஜி.ஆரின் படங்களில் காதலியின் தகப்பனே
வில்லனாக வருவார். பெரும்பாலான தமிழ்படங்களில் காதலுக்கு விரோதிகளாகக் குடும்பச் சண்டைகள்,
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இடம்பெறும். ஆனால் காதலுக்கு உண்மையான விரோதிகளாக ஜாதியும்
மதமும்தான் விளங்குகின்றன. நடுத்தர வயது கொண்ட மனிதனின் காதல் ‘முதல் மரியாதை’ தற்பொழுது
வெளிவரும் திரைப்படங்களில் ஒரே இடத்தில் காதலர்கள் காதலித்தது போக இப்பொழுது உலகம்
முழுவதும் சென்று ஆடிப்பாடுகிறார்கள். ஆடிவிட்டு உடனே அடுத்தக் காட்சியில் தங்கள் வேலை
வேட்டியைப் பார்க்கத் துவங்குகிறார்கள். இளைஞர்கள் தமிழ்ப் படத்தின் ஆதாரப் பார்வையாளர்கள்
என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு தொடர்ந்து காதல் படங்களே வந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்ப் படங்களில் பிற மொழிகளின் பயன்பாடுகள்
தமிழ் சினிமாவில் பங்குபெற்றுள்ள பிற மொழியினர்
1) இந்திக்காரர்கள் 2) மலையாளிகள் 3) தெலுங்கர்கள் 4) ஆங்கிலேயர்கள் மற்றும் ஆங்கிலம்
பேசும் தமிழர்கள். இவர்கள் தவிர சிங்களம், கன்னடம், ஜப்பான் மொழி பேசுவோரும் உண்டு.
ஆனால் அவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். ‘இரத்த திலகம்’
படத்தில் வரும் சீன இராணுவ வீரன் தமிழ் பேசுவான். மேலும் அறுவதுகளில் இந்தி எதிப்புப்
போராட்டம் நடந்தது. பல இளைஞர்கள் அதில் போலீஸ் துப்பாக்கிகளுக்குப் பலியாயினார்கள்.
திராவிடக் கட்சிக்கு அதன் தொடர்ச்சியாக ஆட்சி பீடம் கிடைத்தது. ஆனால் இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தை மையமாக வைத்து தமிழில் ஒரு திரைப்படம் கூட வெளிவரவில்லை என்கிறார் ஆசிரியர்.
இந்தி பேசும் முஸ்லீம்கள் பயங்கரவாதிகளாக ரோஜா, பம்பாய், உயிரே, போன்ற திரைப்படங்களில்
வருகின்றனர். தமிழ்ச் சினிமாவில் ஆங்கிலம் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் ஒரு மொழி.
தமிழ் சினிமா ஆங்கில வயப்பட்ட தொழிற்சாலை. ஆங்கிலக் கலைச் சொற்கள் சகஜமாக புலங்குகிற
இடம் அது.
சினிமா சங்கங்கள்
சினிமாவில் பலவற்றிற்கும் முன்னோடி நாடான
பிரான்சில்தான் முதல் சினிமா சங்கம் தொடங்கப்பட்டது. 1922 இல் ‘சினி கிளப் து பிரான்ஸ்’
என்ற அமைப்பு பிரான்சிலும் 1925 இல் ‘த ஃபிலிம் சொசைட்டி’ என்ற அமைப்பு இலண்டனிலும்
தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல் சினிமா சங்கம் 1942 இல் பம்பாயில் தொடங்கப்பட்டது.
அதன் பிறகு 1947 இல் ‘கல்கத்தா ஃபிலிம் சொசைட்டி’ உருவானது. இதனைத் தோற்றுவித்தவர்களுள்
முக்கியமானவராக விளங்கியவர் சத்திய சித்ரே ஆவார். சென்னையில் 1957 இல் ‘மெட்ராஸ் ஃபிலிம்
சொசைட்டி’ தோன்றியது. திருச்சியில் 1967 இல் ‘சினிபோரம்’ தொடங்கப்பட்டு 1987 இல் நின்றும்
போனது. இது போல தமிழகத்தில் பல இடங்களில் சினிமா சங்கங்கள் தோன்றின.
சினிமா ரசனையை புகட்டுவதை, சினிமா சங்கங்கள்
முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன என்கிறார். 1961 ஆம் ஆண்டில் மெட்ராஸ் ஃபிலிம்
சொசைட்டி, அடையார் ஃபிலிம் நிறுவனத்துடன் இணைந்தும் பின்னர் 1967 இல் தனியாகவும் சினிமா
இரசனை வகுப்புகள் நடத்தின. தமிழகத்தில் சி.செல்வம் ‘குன்னாங் குன்னாங் குர்’ என்கிற
அமைப்பினை 2000 த்தில் தொடங்கி இன்றுவரை அதன் வாயிலாக முப்பதுக்கும் மேற்பட்ட தமிழகக்
கிராமங்களுக்குப் பல உலகச் சாதனைத் திரைப்படங்களைக் கட்டணம் வசூலிக்காமல் திரையிட்டு
வருகிறார். மேலும் சென்னை ஃபிலிம் சொசைட்டி சென்னை புக்ஸ் வாயிலாக பல நல்ல சினிமா புத்தகங்களை
வெளியிட்டது. திருநெல்வேலி காஞ்சனை சினிமா இயக்கம் திரைப்பட விழாக்களை நடத்தி வருகின்றது.
என சினிமா சங்கங்களின் பணிகளை வரலாற்று நோக்கில் பட்டியலிடுகின்றார் ஆசிரியர்.
4) விவாதக் கட்டுரைகள்
இந்நூலில் ஆசிரியர் ஏதேனும் ஒரு பொருளின்
அடிப்படையில் விவாதக் கருத்துக்களை முன்வைத்திருக்கும் கட்டுரைகளை வரிசைப்படுத்தி இப்பகுதியில்
விளக்கப்படுகின்றது.
இலக்கிய இரசனையும் திரைப்பட இரசனையும்
இக்கட்டுரையில் திரைப்படம் முதன் முதலில்
இந்தியர் மனநிலையில் ஏற்படுத்திய தாக்கத்தினை விவரிக்கின்றார். ‘1895 ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் 26 ஆம் தேதி பாரிசில் லுமியர் சகோதரர்கள் முதன் முறையாக பொதுமக்களுக்குப் படங்களைத்
திரையிட்டனர். அன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே அப்படங்கள் பம்பாயிலும் காட்டப்பட்டன.
அதாவது சினிமாவிற்கான விஞ்ஞான அழகியல் பாரம்பரியம் சரித்திரம் ஆகியவை ஏதுமின்றி இந்த
சாதனம் மட்டும் திடீரென நமக்கு நுகர்வுப் பொருளாக அறிமுகமாகியது. பாரிசில் காட்டப்பட்ட
ஒற்றைக் காட்சிப் படங்களில் புகைவண்டி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்க்கிற படமும்
ஒன்று. ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் 1896 இல் புகை வண்டியைப் பார்த்தது கூடக் கிடையாது.
ஐரோப்பியர்கள் புகைவண்டியில் பயணம் செய்த பிறகு அதனை படமாகப் பார்த்தார்கள். ஆனால்
நம்மவர்கள் பலருக்குப் புகைவண்டி படத்தில்தான் முதலில் அறிமுகம் ஆகியிருக்கக் கூடும்.
புகைவண்டி மட்டுமல்ல மின்சாரமும் கூட பலருக்கும் திரையரங்கில்தான் முதன் முதலாக அறிமுகம்
ஆனது. பரிச்சியம் ஏற்பட்டது. இந்நிலையில் திரைப்படம் எவ்வாறு நமக்குப் புரிகிற சாதனமாக
இருந்திருக்க முடியும்?
இருபதாம் நூற்றாண்டில் இந்திய இலக்கியத்தில்
நிகழ்ந்த பெரும் பாதிப்பு யதார்த்தவாதம். இலக்கியத்தின் வாயிலாக பரிச்சியமான இந்த யதார்த்தவாதம்,
பின்னர் நமது சினிமாவைப் பாதித்தது. நமது சினிமா இரசனையும் இலக்கிய வழி வந்ததாக உள்ளது.
சினிமாவை காதையாகவும் கதாப்பத்திரங்களாகவும் பார்க்கிற போக்கு அதிகமாக உள்ளது. சினிமாவை
இலக்கியமாகப் பாவிக்கிற போக்கு உலகெங்கிலும் தென்படுகின்றது. இரண்டிலும் கதைகள் இருக்கின்றன
என்பதும் சினிமாவை பிரபலமாக்கியது கதைப்படங்கள் என்பதும் இதற்கான காரணங்கள் ஆகும்.
இலக்கியத்தை அப்படியே சினிமா வாசிக்க முடியாது,
அவ்வாறு செய்தால் அது பரிதாபமாக இருக்கும். சாதனங்களின் வாயிலாக நிகழ்கிற ரசனை சாதனங்களைக்
கடந்து செல்கிறது. சாதனங்களின் நுணுக்கங்களைப் பரிச்சயம் கொள்வதே அவை காட்டும் வாழ்வியலை
அறிந்து கொள்ளத்தான். இங்கு இலக்கிய இரசனையும் சினிமா இரசனையும் ஒன்றாக இணைகின்றன.
திரைப்பட விழாக்கள் விருதுகள் ஏன்? யாருக்கு?
திரைப்பட விழாக்கள் ஒரு நாட்டில் நடைபெறும்
திரைப்பட முயற்சிகளைப் பிற நாட்டினர் அறிந்து கொள்ளவும் வணிக சினிமாவிற்கான மாற்று
சினிமாவை ஊக்கப்படுத்தவும் இவ்விழாக்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. உலகின் முதல் சர்வதேசத்
திரைப்பட விழா வெனிசில் 1932 லும் மிகவும் பிரசித்தி பெற்ற கான்படவிழா 1939 லும் துவங்கி
இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய அரசின் முதல் சர்வதேச இந்தியத் திரைப்படவிழா
1952 இல் மும்பையில் துவங்கியது.
இந்தியா உலகிலேயே அதிகமாகத் திரைப்படங்களைத்
தயாரிக்கும் நாடு. தரத்திலும் ஏன் வியாபாரத்திலும் கூட இந்தியப்படங்கள் பின் தங்கிய
நிலையிலேயே உள்ளன. அந்த வகையில் சத்திய சிதிரேயின் படங்கள் உலகத்தரம் வாய்ந்தவைகளாக
விளங்குகின்றன. திரைப்பட விருதுகள் யாருக்குத்
தரப்பட வேண்டும்? என்பதில் ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார். ‘ஒரு குறிப்பிட்ட துறையில்
பெரிதாக வருமானம் ஏதும் எட்டாவிடினும் தொடர்ந்து அத்துறையின் பாலுள்ள ஈடுபட்டினால்
சேவை மனப்பான்மை கொண்டு செயலாற்றி சாதனை புரிபவர்களுக்கே விருதுகள் தரப்பட வேண்டும்.’
ஏற்கனவே புகழும் செல்வமும் பெற்றவர்கள் அவ்விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் ஆயினும்
அவர்கள் நன்கு அறியப்படாத சாதனையாளர்களுக்காக வழிவிட்டு விளகுவதே போற்றப்பட வேண்டிய
செயலாகும். இதனடிப்படையில் உன்னைப் போல் ஒருவன், அக்கிரகாரத்தில் கழுதை, ஊருக்கு நூறு
பேர். போன்ற படங்கள் தேசிய விருதுகளையும் அங்கீகாரத்தையும் இவ்வாறுதான் பெற்றன. இல்லையேல்
குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்கள் சுவடுகள் தெரியாமல் தொலைந்தே போயிருக்கும் என்கிறார்.
எது ஆபாசம்?
ஆபாசம் என்பது ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும்
வெவ்வேறாகத் தோற்றம் கொள்கிறது. தமிழ் சினிமா மீது அதிகப்படியாகச் சாட்டப்படும் குற்றச்சாட்டுகள்
அது. ஆபாசமானதாக இருக்கிறது. ஆபாசம் என்று இவர்கள் எதைக் கிருதுகிறார்கள்? பெரும்பாலும்
இவர்கள் ஆபாசம் என்று கருதுவது பெண்ணின் உடல் பற்றியதாகவும் ஆண்,பெண் உறவு பற்றியதாகவும்
உள்ளது என விவரிக்கும் ஆசிரியர், பெண்ணின் அங்கங்களைக் கொச்கையாக வர்ணிக்கும் வசனகளும்
பாடல்களும்தான் ஆபாசம் என்கிறார். மேலும் சினிமா என்கிற ஊடகத்தைத் தாறுமாறாக உபயோகிப்பதுதான்
இங்கு தலையாய ஆபாசம் என்கிறார்.
பெண்களுக்கு சினிமா எத்தகையப் பொழுது போக்கு?
சினிமா பார்க்கும் பொழுது பெண்கள் ஆத்மார்த்தமாக
சில சமயங்களில் ஈடுபாடுகொண்டு விடுகிறார்கள். பக்திப் படங்கள் அத்தகைய அனுபவங்களை அவர்களுக்குத்
தருகின்றன. தங்களைப் போன்றே சங்கடமும் துயரமும் அனுபவிக்கும் பெண் பத்திரங்கள் தெய்வங்களை
அடையாளம் காண்கிறார்கள். பெண்களுக்கு கொஞ்சமாவது கனவு காண சந்தர்ப்பம் தருவது காதல் காட்சிகள். இருபாலர்க்கும்
காதல் உரியது என்பதால் ஆடல் பாடல் காட்சிகளை ஆண்களைப் போன்றே பெண்களும் விரும்புகின்றனர்.
கலையா? வணிகமா?
சினிமா ஆரம்ப காலங்களில் வெறும் பொழுது
போக்காக மட்டுமே இருந்தது. தொழிலாளர்கள் வேலை முடிந்து வெளியேறுவது, ரயில் வண்டி ஸ்டேஷனை
அடைவது போன்ற துண்டுப் படங்களே வெளிவந்தன. முழுநீளப் படங்கள் வந்த பிறகு சினிமா மெல்ல
மெல்ல வியாபார உலகினுள் காலடி எடுத்து வைத்தது. ஹாலிவுட் நட்சத்திரங்களை உருவாக்கிய
பிறகு சினிமா பெரும் வியாபாரங்களில் ஒன்றாக மாறியது. இன்னும் உலகம் முழுவதும் சினிமா
பொழுதுப்போக்கு சாதனமாகத்தான் கருதப்படுகிறது. இந்நிலையில் எழுவதுகளுக்குப் பிறகு வியாபார
சினிமா, கலை சினிமா எனும் இரு பிரிவுகள் வலுப்பெறத் தொடங்கின. இரண்டும் ஒன்றுக்கொன்று
நேர்மாறாகச் செயல்படத் தொடங்கின. வணிகப்படத்தில் ஆறுபாடல்கள் நடனங்கள் இருந்தால் கலைப்படங்களில்
ஒரு பாட்டுக் கூட இருக்காது. அதில் மூன்று சண்டைக் காட்சிகள், இதில் நடிகர்கள் உரத்துக்கூட
பேச மாட்டார்கள். அதில் நட்சத்திரங்கள், இதில் புதுமுகங்கள். அது இரண்டரை மணிநேரம்
ஓடும், இது ஒன்றரை மணி நேரம்தான் ஓடும். அதற்கு சில கோடி பார்வையாளர்கள், இதற்கு சில
ஆயிரம் பார்வையாளர்கள், சில சமயங்களில் அதுவும் கிடையாது.
மாற்றுப் படங்களை எடுப்பவர்கள் வெகுஜன
சினிமா பாணியில் படங்களை எடுத்துப் பார்க்கலாம். இந்த முயற்சிகளில் படங்களின் தரமும்
வீச்சும் விநியோகமும் விரிவடைய வாய்ப்புகள் உள்ளன. மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ பாரதிராஜாவின்
‘கருத்தம்மா’, ‘என்னுயிர் தோழன்’ பாலு மகேந்திராவின் ‘அழியாத மேகங்கள்’, சேரனின் ‘ஆட்டோகிராப்’
ஆகியவை கலைப்படம் – வணிகப்படம் என்ற பிரிவுகளின் இடைவெளிகளைக் குறைப்பவை. பாடல், நடனம்
ஆகியவை இடம் பெற்றால் படத்தின் கலைத்தன்மை குறைந்துவிடும் என்று நினைக்கத் தேவையில்லை.
அவற்றை கலாப்பூர்வமாக எவ்வாறு காண்பிப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கலைப்படங்களை உருவாக்கும் உத்திமுறைகளை விவரிக்கின்றார்
ஆசிரியர்.
இந்நூல் முழுவதும் ஒரு சேர நோக்குகையில்
நாம் ஒன்றை விளங்கிக் கொள்ளலாம். ஆசிரியர் அனைத்துக் கட்டுரைகளிலும் வணிகப் படங்கள்
– கலைப் படங்கள் இவற்றிற்கான வேறுபாட்டினை முன்னிறுத்தியிருக்கின்றார். இம்மதிப்புரையில்
விளக்கப்பட்டுள்ள இறுதிக் கட்டுரையான கலையா? வணிகமா? என்னும் கட்டுரையே இந்நூலின் அடிநாதமான
கருத்து என்று கூறலாம். நூல் முழுக்க கலைப் படங்களின் அவசியங்கள் பற்றிக் கூறும் ஆசிரியர்
இறுதிக் கட்டுரையில் கலைப் படங்களை எவ்வாறு எடுத்தால் மக்களின் ஆதரவினை வணிக ரீதியாகவும்
எட்டும் என்பதையும் விளக்கியுள்ளார். இவ்வகைப் படங்களை இடைவகைத் திரைப் படங்கள் என
ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். பல்வேறு இடங்களில் வெளியான கட்டுரைகளை தொகுத்தால்
எவ்வாறு ஒரு நூலாகும் என்னும் கேள்வி தோன்றினாலும் நூல் முழுக்க ஆசிரியர் விவாதித்துள்ள
அடிக்கருத்தினை பார்த்தால் அது கலைப் படங்களுக்கான அவசியத்தினை முன்வைப்பதாகவே அமைக்கின்றன.
இதனடிப்படையில் கலைப்படங்களின் தேவையினை முன்னிறுத்துவதற்காக எழுதப்பட்ட நூல் என்னும்
அமைப்பினைப் பெறுகின்றது. மேலும் ஆசிரியர் அறிந்த அளவில் கட்டுரை முழுவதும் தமிழ்,
மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்கள் சிலவே மீண்டும் மீண்டும் நூலில்
பயின்று வந்துள்ளன. அவையும் முக்கியமாக கலைப் படங்களாகவே விளங்குகின்றன. இயக்குனர்களும்
கலைப்பட இயக்குனர்களாகவே இருக்கின்றனர். இந்நூலை முழுவதுமாக வாசித்த பிறகு ஒவ்வொருவரும்
உணரும் விசியம் இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். கலைப்படங்கள் என்பது எது.
அது எத்தகைய தன்மைகள் கொண்டவைகளாக விளங்குகின்றன. திரைப்படத்துறையில் அதன் நிலை எவ்வாறு
உள்ளது. கலைப் படங்கள் ஏன் மக்களின் ஆதரவினைப் பெறுவதில்லை. அவ்வாறு மக்களின் ஆதரவினைப்
பெற வேண்டுமெனில் கலைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும். இவையே நூலின் அடிக்கருத்து எனலாம்.