இயல் - 1ஒப்பிலக்கியம் - வரைவிலக்கணமும் பொருள் விளக்கமும்
இவ்வியல் ஒப்பிலக்கியம் குறித்து எளிய
முறையில் அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒப்பிலக்கியம் என்றால் என்ன?, ஒப்பிலக்கியம்
- சொற்றொடர் தோற்றப் பின்புலம், ஒப்பிலக்கிய வரையறை, ஒப்பிலக்கியத்தின் பயன் மற்றும்
உலக இலக்கியம் என்னும் ஐந்து பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.
I. ஒப்பிலக்கியம்
இவ்வியலின் தொடக்கமாக ஒப்பிலக்கியம் குறித்து
இரா. காஞ்சனா அவர்கள், “உலகளாவிய நோக்கில்,
இலக்கியப் படைப்புக்களின் பொதுமையும், ஒருமையும் காணமுயல்வது ஒப்பிலக்கியம். கால எல்லையையும்
கடந்து, உலக இலக்கியம் அனைத்தும் ஒன்றே என்ற முழுமை நோக்கத்தைக் கற்பிப்பது ஒப்பிலக்கியம்.
மேலும் ஒப்பிலக்கியம் என்பது மொழியின் அடிப்படையிலோ அல்லது நாட்டின் அடிப்படையிலோ உருவானது
இல்லை. இது ஒரு அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை என்னும் விளக்கத்தினை முன்வைக்கின்றார்.
II. ஒப்பிலக்கியம்
- சொற்றொடர் தோற்றப் பின்புலம்
மேலும் ஒப்பிலக்கியம் சொற்றொடர் தோற்றப்
பின்புலத்தை விளக்கும் ஆசிரியர், ‘Comparative literature’ என்பதன் தமிழாக்கமே ஒப்பிலக்கியம்
எனவும் ஆங்கிலத்தில் இத்தொடரை முதன் முதலில்
மாத்யூ அர்னால்டு என்பவர் 1848 இல் பயன்படுத்தினார் எனவும் குறிப்பிடுகின்றார். இது
தோன்றியது முதலே ஆங்கில அறிஞர்கள் மத்தியில் ஒரு முழுமையான மனநிறைவு இல்லாமல் இருந்து
வந்துள்ளதைக் கூறும் ஆசிரியர், அதனைப் பின்வருமாறு விளக்குகின்றார். ஏனெனில்
‘Comparative literature’ என்ற ஆங்கிலத் தொடரில் உள்ள Comparative என்ற முன்னொட்டு literature என்ற சொல்லுடன்
இணைவது ஆங்கில இலக்கண முறைப்படி சரியல்ல என்றும் ஆங்கிலத்தில் literature என்னும் சொல்
காலத்திற்கு ஏற்ப பல்வேறு மாறுதல்களை அடைந்து வந்துள்ளது என்றும் விளக்கம் தருகின்றார்.
லேன் கூப்பர் (Lane Cooper) ஒப்பிலக்கியம் என்பதை
வேற்றுமைத் தொடர் என்கிறார். இதில் பொருளும் இல்லை. இலக்கணத் தொடர்பும் இல்லை.
இதைப்போன்றே ஒப்பியல் உருளைக்கிழங்கு என்றோ ஒப்பியல் உமிகள் என்றோ கூட அழைக்கலாம் என
கேலி செய்கின்றார். மேலும் எஸ்.எஸ்.பிராவர் (S.S.Prawer) ஒப்பிலக்கியம் என்னும் சொல்லிற்குப் பதிலாக ‘ஒப்பிலக்கியக்
கல்வி’ (Comparative Literary Study) என்ற தொடரைப் பயன்படுத்துகின்றார். ‘Comparative Literature’ என்னும் தொடரை ஒப்பியல்
இலக்கியம் என்ற தனது நூலில் முதன் முதலில் பயன்படுத்தியவர் பாசுநெட் (Posnett) ஆவார்.
எம்.எப். கயார்டு (M.F.Guyard) பன்னாட்டு இலக்கியங்களுக்கு இடையேயான உறவுகளின் வரலாறே
ஒப்பிலக்கியம். பால்வான் தீகம் வேறுபட்டுக்
கிளைத்துச் செல்லும் இலக்கியங்களுக்கிடையே, ஒன்றிற்கொன்று கொண்டுள்ள உறவுகளைக் கண்டு
கூறுவதே ஒப்பிலக்கியத்தின் குறிக்கோளாகும்.
தமிழில் ‘ஒப்பியல் மொழி நூல்’ எனும் ஞா.தேவநேயப்பாவாணரின்
சொல்லாட்சியே ஒப்பிலக்கியத்தை தமிழிலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியது என்கிறார் ஆசிரியர்.
அதைத் தொடர்ந்து ஒப்பிலக்கியக் கோட்பாடுகளைத் தமிழில் முதன் முதல் அறிமுகப்படுத்திய
பெருமை க.கைலாசபதியையே சேரும். அவரது ‘ஒப்பியல் இலக்கியம்’ என்னும் நூல் இத்துறையில்
முதன் முதல் வெளிவந்த தமிழ் நூலாகும் என்கிறார். தமிழண்ணலின் ‘ஒப்பிலக்கிய அறிமுகம்’
என்னும் நூலின் தோற்றத்திற்குப் பிறகு இச்சொல் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரவலாகப்
பயன்படுத்தப்பட்டது.
III. ஒப்பிலக்கிய
வரையறை
அன்னா சைத்தா ரெவிக்னாஸ் (Anna Saitta
Revignas) வெவ்வேறு இலக்கியங்கள் எதிர்ப்பட்டுத்
தம்முள் கொண்ட இடைத்தொடர்புகள் ஒன்றின் மீது ஒன்று செலுத்திய, பெற்ற இலக்கியச் செல்வாக்குகளைப்
பற்றிய பிரச்சனைகளை ஆராயும் இன்றைய அறிவியல் துறைகளுள் ஒன்றுதான் ஒப்பிலக்கியம் என்கிறார்.
ஹென்றி எச்.எச்.ரிமாக் (H.H.Remak) அமெரிக்க ஒப்பிலக்கிய ஆசிரியரான இவர் ஒப்பிலக்கியம்
என்பது நாட்டு எல்லை, மொழி எல்லைகளைத் தாண்டிய இலக்கிய ஆய்வாகும் என்கிறார். இலக்கியத்துடன் ஓவியம், சிற்பம், கட்டடக்கலை, இசை,
தத்துவம், வரலாறு போன்ற கலைத்துறைகளையும் சமூகவியல், அரசியல், பொருளாதாரம், உளவியல்
போன்ற பல்வேறு சமூக அறிவியல் துறைகளையும் பிற அறிவியல் துறைகளையும் சமயத்தையும் ஒப்பிட்டு
ஆய்வதாக ஒப்பிலக்கியம் அமையும் என்கிறார்.
ஓவன் ஆல்ரிட்ஜ் தம்முள் பிறப்புறவு அற்ற, வேறு எவ்விதத் தொடர்பும் அற்ற இருவேறு இலக்கியங்களுக்கு
இடையே நடையிலோ, அமைப்பிலோ, பாடுபொருளிலோ காணப்படுகின்ற ஒற்றுமைக் கூறுகளைக் காண்பதுவே
ஒப்பிலக்கியம் என்கிறார். இவ்வாறு ஒப்பிலக்கியம் குறித்த வெளிநாட்டறிஞரிகளின் கருத்துக்களை
ஆசிரியர் இப்பகுதியில் தொகுத்துத் தந்துள்ளார்.
IV. ஒப்பிலக்கியத்தின் பயன்
ஒப்பிலக்கியத்தை உலக நோக்கில், அறிவியல்
வழிநின்று, துல்லியமாக மதிப்பீடு செய்து, அவற்றின் மூலம் பெறப்படும் மெய்மைகளின் அடிப்படையில்
இலக்கியக் கொள்கைகளை உலகளாவிய நோக்கில் உருவாக்கவும் உலக இலக்கிய வகைகள், வடிவங்கள்,
பாடுபொருள் ஆகியவற்றை வெளிக்கொணரவும் முயலும்போது அது ஒப்பிலக்கிய ஆய்வாகிறது. இவ்வாறான
மதிப்பீடுகளை வராலாற்று நோக்கிலும் காணலாம். அழகியல் அடிப்படையிலும் காணலாம் உலக இலக்கியங்களுக்கு
இடையேயான இடைத் தொடர்புகள், ஒன்றை ஒன்று எதிர்படுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தல்,
ஏற்பு, செல்வாக்கு, தாக்கம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுதல், இலக்கியங்களுக்கு இடையே
காணப்படும் பிறப்புறவுகள் ஆகியவற்றைக் காண்பது ஒப்பிலக்கியம். புதிய புதிய இலக்கிய
வகைகள் தோன்றக்காரணம் என்ன? அவை ஏன் தோன்றுகின்றன? அவை புதியதாய்த் தோன்றிய சூழல் என்ன?
எந்த எந்த இலக்கிய வகைகளின் கூட்டுச் சேர்க்கையால் புதிய இலக்கிய வகை தோன்றியுள்ளது?
அல்லது ஒரு பழைய இலக்கிய வகையின் கிளை வளர்ச்சியாக, புதிய பரிமாணமாகத் தோன்றியதா? அது
எந்த இலக்கிய வகை? இப்பரிமாணத்தில் புதிதாக இணைந்த பண்புக் கூறுகள் எவை? அவை எங்கிருந்து
பெறப்பட்டன? அல்லது மாற்றுரு பெற்றன என்பன போன்ற வினாக்களுக்கு விடை காண்பது ஒப்பிலக்கியக்
கல்வியாகும். ஒரு இலக்கியத்தின் சிறப்பினை அறிய வேண்டுமெனில் அவ்விலக்கியத்தினை மற்றொரு
இலக்கியத்துடன் ஒப்பிட்டுக் காணுவதன் மூலம் அறிய முடிகின்றது. மேலும் இலக்கியத்தை ஆழமாகக்
கற்றுத் தெளிவடைய ஒப்பியல் இலக்கியம் மிகவும் உறுதுணையாகின்றது. என இலக்கியங்களை ஒப்பாய்வு
செய்வதன் பயன்பாட்டினை விளக்கியுள்ளார்.
V. உலக இலக்கியம்
உலக இலக்கியம் என்ற தொடர் உலகில் தோன்றிய
சிறந்த இலக்கியங்கள், செவ்வியல் நூல்கள், உலகில் எழுதப்பட்டவற்றுள் மிகச் சிறந்தவை
என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உலகில் சிறந்து விளங்குகின்ற இலக்கியங்கள்
குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஒப்பிலக்கியத்திற்கு மிகவும் நெருங்கிய தொடர்பு
உடையதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இயல் - 2
இந்தியாவும் ஒப்பிலக்கியமும்
இந்தியாவும் ஒப்பிலக்கியம் என்னும் இரண்டாவது
இயல் இந்திய அளவில் ஒப்பிலக்கியத்தை விளக்க முற்படுகின்றது. அதனடிப்படையில் இவ்வியலை
ஆசிரியர் ஐந்து நிலைகளில் விளக்க முற்படுகின்றார். 1. இந்திய ஒப்பிலக்கியம், 2. ஒப்பியல்
இந்திய இலக்கியம், 3. இந்திய இலக்கியம், 4. இந்திய இலக்கியத்தின் பயன் மற்றும் 5. இரு
இந்திய மொழிகளை ஒப்பிடுகின்ற விதம் குறித்து விளக்குவதாக இவ்வியலை அமைத்திருக்கின்றார்.
அவைகளைப் பின்வறுமாறு காணலாம்.
இந்திய நோக்கில் ஒப்பிலக்கியம் ஒப்பிலக்கியக் கல்வியில் நாம் பிரெஞ்சு, அமெரிக்க,
ஜெர்மானிய கோட்பாடுகளைப் பின்பற்றுகிறோம்; எனினும் ஒப்பிலக்கியம் இங்கு எவ்வாறு செயல்பட
முடியும் என்பதைக் குறிப்பாகச் சுட்டவும், பிற நாட்டு நோக்குகளில் இருந்து விடுபட்டு,
இந்திய நோக்கில் ஒப்பிலக்கியம் தனக்கே உரிய தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும்
இந்திய ஒப்பியலறிஞர்கள் கருதினர். அதனடிப்படையில் அவர்கள் முன்வைத்த இரு தொடர்களே
1. இந்திய ஒப்பிலக்கியம் (Indian Comparative Literature), 2. ஒப்பியல் இந்திய இலக்கியம்
(Comparative Indian Literature) ஆகும்.
I. இந்திய
ஒப்பிலக்கியம்
‘இந்திய ஒப்பிலக்கியமும் கல்வியியல் சிக்கல்களும்’
எனும் கட்டுரையில் தேவிந்தர் மோகன் இந்திய ஒப்பிலக்கியம் பற்றிக் கூறும் போது, அது
தனக்கே உரிய வடிவமைப்பும் இலக்கணமும் கொண்டிருக்க வேண்டும் என்கிறார். வாழ்வியல் நடப்புகளை
சமிக்ஞைகளாகவோ, குறியடையாளமாகவோ, மாற்றும் வழிமுறைகளைத் தனக்கேற்ப, தனித் தன்மைகளைப்
பெற வேண்டும் என்கிறார். அன்றாட வாழ்வியல் கூறுகளை இந்திய நோக்கில் காண ஒரு வழிமுறைகளை
உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் இக்கூறுகளை அடித்தளமாகக் கொண்டே இந்திய ஒப்பிலக்கியம்
அமையும் என்கிறார். மேலும் செல்லப்பன் அவர்கள் இந்திய ஒப்பிலக்கியம் என்ற தொடரில்
‘இந்திய’ என்ற முன்னொட்டு இந்திய இலக்கியங்களைப் பிற உலக இலக்கியங்களில் இருந்து வேறுபடுத்தி
அறிய உதவுகின்றது எனவும் ஒப்பிலக்கிய உலகிற்கு இந்தியாவின் பங்கு என்ன என்பதை விளக்குகிறது
எனவும் விளக்குகின்றார்.
II. ஒப்பியல்
இந்திய இலக்கியம்
ஒப்பியல் இந்திய இலக்கியம் என்ற தொடரில் ‘ஒப்பியல்’ என்ற முன்னொட்டு ஆய்வு நெறிமுறைகளையும்
‘இந்திய’ என்ற அடைமொழி நோக்கு குறித்த மனோபாவத்தையும் ‘இலக்கியம்’ என்ற சொல் ஆய்வுக்களத்தையும்
சுட்டுகின்றன. ஒப்பிலக்கியக் கோட்பாடுகளின் நெறிமுறைகளின்படி இந்திய இலக்கியத்தை ஆய்வுப்
பொருளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஒப்பியல் இலக்கியக் கல்வியே ‘ஒப்பியல் இந்திய இலக்கியம்’
என விளக்கம் தருகின்றார் நூலாசிரியர். ‘இந்திய ஒப்பிலக்கியம் என்னும் போது ஆய்வு நெறிமுறையில்
இந்தியக் கண்ணோட்டம், இந்தியத் தன்மை ஆகிய இரண்டும் முதன்மை பெறுகின்றன. ஆனால் ஒப்பியல்
இந்திய இலக்கியத்தில் இந்தியத் தன்மை கொண்ட இலக்கியங்கள் ஆய்வுக்களங்களைத் தருகின்றன.
என இவ்விரு போக்குகளையும் ஒப்பிட்டு விளக்கும் ஆசிரியர் இந்திய இலக்கியம் என்னும் ஒரு
அமைப்பு குறித்து பின்வருமாறு விளக்குகின்றார்.
III. இந்திய
இலக்கியம்
‘இந்திய இலக்கியம்’ என்ற கோட்பாட்டை 19 ஆம் நூற்றாண்டிலேயே பங்கிம் சந்திர
சட்டோபாத்யாய, மைக்கேல் மது சூதன தத் (1855) ரவீந்திரர், அரவிந்த கோஷ் போன்ற பல அறிஞர்கள்
முன் வைத்துள்ளனர். இவர்கள் இந்திய மொழிகளில் எழுந்த பல்வேறு இலக்கியங்களுக்கிடையே
இருக்கக் கூடிய ஒற்றுமைகளைக் கண்டுணர ஓர் அடிப்படையாக ‘இந்திய இலக்கியம்’ என்ற கருத்தை
முன்வைத்தனர். எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய இலக்கியம் என்பது இந்தியாவில்
தோன்றிய இலக்கியங்கள் அனைத்தையும் இணைத்து
கூறுவது என்னும் கருத்தினை முன்மொழிகின்றார்.
‘இந்திய இலக்கிய வரலாறு’ எனும் நூலில்
(1852) வெபர் ‘இந்திய இலக்கியம் என்ற பெயர் விளக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார். சர் ஔஷத் முகர்ஜி என்பவரே (1919) முதல் முதலில்
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ‘தற்கால இந்திய இலக்கியத் துறையை’ தொடங்கி வைத்தவர் ஆவார்.
இதனைத் தொடர்ந்து 1954 இல் நிறுவப்பட்ட சாகித்திய அக்காடமி நிறுவணம் டில்லியில் தொடங்கப்பட்டது.
இது “பல மொழிகளில் எழுதப்பட்டிருப்பினும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றே” என்று டாக்டர்.
இராதாகிருஷ்ணன் கூறியதைத் தாராக மந்திரமாகக் கொண்டு இயங்கி வருவதை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
1957 முதல் ‘இந்திய இலக்கியம்’ என்ற இருமாதமொரு
இதழை வெளியிடத் தொடங்கியது.
இந்திய இலக்கியம் பற்றி சண்முகம்பிள்ளை ‘இந்திய எல்லைகளுக்குள் இந்தியா முழுவதும் பரவியதாக
அதே சமயம் வட்டார வேறுபாடுகளைக் கடந்ததாக இருக்கக் கூடிய இந்திய மண்ணிற்கே உரிய பண்பாட்டையும்
தத்துவத்தையும் அடிப்படையாகக் கொள்ளலாம்; இது இந்திய எல்லைகளுக்கு அப்பால் காணக்கூடியதாக
இருத்தல் கூடாது; அப்படியே கண்டுபிடிக்கப்பட்டால் அது இந்தியாவில் இருந்து பரவியதாகவே
இருத்தல் வேண்டும். அதே போல இந்திய மண்ணிலிருந்தே பெறப்பட்ட தத்துவமாக இருக்க வேண்டும்.
அப்படியின்றி அயல்நாட்டிலிருந்து வந்ததாக இருத்தல் கூடாது. அப்படியே வந்திருந்தாலும்
அது இந்தியமயமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்.
IV. இந்திய
இலக்கியத்தின் பயன்
இந்திய இலக்கியங்களில் காணப்படும் பொதுத்
தன்மைகளை ஒத்த தன்மைகளை எடுத்துத்துக்காட்டி பிற மொழிகளிலும் இவ்வாறான ஒற்றுமைகள் உள்ளன
என ஒவ்வொரு இந்திய மொழி மாணவனுக்கும் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஒற்றுமையுணர்வை நெருக்கமான
மன உணர்வை இந்திய இலக்கியம் என்ற கருத்தமைவு உருவாக்கும். இக்கல்வி இந்திய இலக்கியம்
என்றால் என்ன என்று விளக்கம் தருவதாக மட்டும் அமையாது, இந்திய இலக்கிய வரலாறு எழுதவும்
பயன்படும். ஒவ்வொரு மொழியிலும் கால வரிசைப்படி எழுந்த இலக்கியங்களின் பெயர்ப் பட்டியலாக
மட்டுமே அந்த இலக்கிய வரலாறு அமையாது. இந்திய இலக்கியங்களுக்கு இடையேயான உறவுகள், உறவுகளுக்கான
காலச் சூழல், உறவுகளை ஏற்படுத்திய காரணிகள், அவற்றிடையே காணப்படும் பொதுவான அனுபவ வெளிப்பாடுகள்,
கருத்தமைவுகளின் வளர்ச்சியும் வேறுபாடுகளும் மாற்றங்களும் போன்ற பல்வேறு கூறுகளையும்
கொண்டதான மிகப் பெரிய இலக்கிய வரலாறாக அது அமையும். இலக்கிய ஒருமைப் பாட்டின் வழி நாம்
இந்தியர் என்ற மன ஒருமைப்பாடு வளர்த்து புதிய தலை முறையிலாவது மொழிவழி, சாதிவழி நில
எல்லைகளின் வழியிலான பிரிவு மனப்பான்மை நீக்கப்படும். இந்திய மக்களின் ஒற்றுமைக்கு
இது ஒரு காணமாகும் என்கிறார்.
V. இரு இந்திய
மொழிகளுக்கிடையே ஒப்பீடு
இரு இந்திய மொழிகளுக்கிடையேயான உறவுகளை தொடர்புகளைப் பிரித்துக் காண்பதற்கு பிரெஞ்சு கோட்பாட்டை பின்பற்றி சில விதிகளை ஆசிரியர் முன்வைக்கின்றார். இவை ஓரளவேனும் இந்திய மொழிகளுக்குள் ஒப்பாய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு பயன்படக்கூடும்.
இரு இந்திய மொழிகளுக்கிடையேயான உறவுகளை தொடர்புகளைப் பிரித்துக் காண்பதற்கு பிரெஞ்சு கோட்பாட்டை பின்பற்றி சில விதிகளை ஆசிரியர் முன்வைக்கின்றார். இவை ஓரளவேனும் இந்திய மொழிகளுக்குள் ஒப்பாய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு பயன்படக்கூடும்.
- மூலங்கள் எவை?
- தாக்கம் விளைவித்தவை எவை? எவை? தாக்கம் பெற்றவை எவை? எவை?
- மூலங்கள் எவ்வாறு வாழ்வு பெற்றுள்ளன?
- மூலங்கள் எந்த அளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன? போற்றி
வளர்க்கப்பட்டுத் தொடர்வாழ்வு பெற்றுள்ளன?
- இடைத் தொடர்புகள் எவை? எவை? எவையெல்லாம் இடைத் தொடர்புகளாக விளங்கியுள்ளன?
- இலக்கியச்சூழல் மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டன?
- இலக்கிய இயக்கங்கள் எவ்வாறு அம்மொழியைப் பாதித்துள்ளன?
- மொழிபெயர்ப்பின் மூலம் ஓர் இந்திய மொழியில் இருந்து
பிறிதொரு இந்திய மொழிக்குக் கிடைத்தவை எவை? அவை எவ்வாறு பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன?
- இந்திய இலக்கியங்களுக்கிடையே ஒரு குறிப்பிட்ட இலக்கிய
வகையின் தோற்றம் வளர்ச்சியை வரலாற்றுப் பின்னணியுடன் இந்தியா முழுவதிலும் வளர்ச்சி
பெற்ற தன்மையை எடுத்துக்காட்ட முனையலாம்.
- இந்தியா முழுவதிலும் இருக்கக்கூடிய அடிக்கருத்து
கொண்ட பக்திப்பாடல், அல்லது இரங்கல் பாடல், பெண்மையின் நிலை எனப் பல கூறுகளை ஆராயலாம்.
- மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்திய மொழிகளுக்கிடையே
ஒப்பாய்வு அமைய வாய்ப்புகள் இருக்கின்றன என ஆசிரியர் இந்திய இலக்கிய பொதுத் தன்மைகளைச்
சுட்டிக் காட்டியுள்ளார்.
இயல் - 3
தமிழும் ஒப்பிலக்கியமும்
தமிழும் ஒப்பிலக்கியமும் என்னும் இம்மூன்றாவது
இயல், தமிழில் ஒப்பிலக்கியம் தோற்றம் பெற்ற நிலையினை காலப் பின்னணியோடு விளக்குகின்றது.
மேலும் தமிழிலக்கியத்தை மொழி அடிப்படையில் பிற இலக்கியங்களுடன் ஒப்பிடும் விதம் குறித்து
விளக்குகின்றது. அதனை அடுத்து தமிழில் ஒப்பிலக்கியம் தொடர்பாக தோன்றிய நூல்கள், கட்டுரைகள்,
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் நிறுவனங்கள் தோறும் நடத்தப்பட்ட கருத்தரங்குகள் என
அனைத்துப் படைப்புகளையும் தொகுத்துத்தளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
I. தமிழில்
ஒப்பிலக்கியத் தோற்றம்
தமிழில் ஒப்பீட்டு அணுகுமுறை பத்தொன்பதாம்
நூற்றாண்டின் இறுதியில் இருந்தே தொடங்கியது எனலாம். தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வி கற்ற
தமிழ் அறிஞர்கள் பலர் ஒப்பீட்டு நோக்கில் எழுத ஆரம்பித்தனர். ஆனால் அதற்கும் முன்னரே
ஜி.யூ. போப் தமிழில் இருந்து திருக்குறள், திருவாசகம், புறப்பாடல்கள், புறப்பொருள்
வெண்பாமாலை ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த்துடன், கிரேக்க தமிழ் செவ்வியல் பாக்களை
ஒப்பிட்டு அவற்றிடையே வடிவம், உள்ளடக்கம், சமுதாய நிலை ஆகியவற்றில் ஒற்றுமைகள் காணப்படுவதைச்
சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சங்கப் பாடல்களை உலகின் பிற வீரயுகப்பாடல்களுடன் ஒப்பிட்டு
எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், என்.கே.சித்தாந்தா, எஸ்.வையாபுரிப் பிள்ளை, ஜே.ஆர்.மார்,
தனிநாயக அடிகள், வ.சு.ப.மாணிக்கம், க.கைலாசபதி போன்றோர் ஆய்வுரைகள் வழங்கியுள்ளனர்.
II. தமிழிலக்கிய
ஒப்பீட்டாய்வை மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்
இக்கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்கள் ஏற்கனவே இந்தியாவும் ஒப்பிலக்கியமும் என்னும் இரண்டாவது இயலில் இந்திய ஒப்பிலக்கிய அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளதை நினைவு கூறுக.
- தமிழ் - ஆங்கில ஒப்பீடு
- தமிழ் - பிற தென்னிந்திய மொழிகள் ஒப்பீடு
- தமிழ் - வடமொழிகள் ஒப்பீடு
- தனி நூல்கள் ஒப்பீடு
- தனி ஆசிரியர் ஒப்பீடு
- ஒரு குறிப்பிட்ட சமுதாய, அரசியல் இயக்கங்களின் தாக்கம் பற்றிய ஒப்பீடு
- ஒரு இலக்கிய இயக்கத்தின் தாக்கம் பற்றிய ஒப்பீடு
- இரு மொழி இலக்கியங்களிலும் காணக்கூடிய இணைநிலைகள் பற்றிய ஆய்வுகள்
இக்கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்கள் ஏற்கனவே இந்தியாவும் ஒப்பிலக்கியமும் என்னும் இரண்டாவது இயலில் இந்திய ஒப்பிலக்கிய அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளதை நினைவு கூறுக.
III. தமிழில் ஒப்பிலக்கியக் கொள்கைகளை அடிப்படையாக்
கொண்ட நூல்கள், கட்டுரைகள், கருத்தரங்குகள்.
தமிழில் ஒப்பிலக்கியம் பற்றி வெளியிடப்பட்ட
முதல் நூல் க. கைலாசபதியின் “ஒப்பியல் இலக்கியம்” ஆகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள தமிழ்
இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றியக் கட்டுரையே ஒப்பிலக்கியம் குறித்து தமிழில்
முதன் முதல் எழுதப்பட்ட கட்டுரையாகும். அதனை அடுத்து 1973 இல் தமிழண்ணலின் ‘ஒப்பிலக்கிய அறிமுகம்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது.
1978 இல் ஜான் சாமுவேலின் ‘இலக்கிய ஒப்பாய்வுக்
களங்கள்’ என்னும் நூலும் 1985 இல் வை. சச்சிதானந்தன் எழுதிய ‘ஒப்பிலக்கியம் ஓர் அறிமுகம்’
என்ற நூலும் வெளிவரத் தொடங்கின. இவைகளைத் தொடர்ந்து தமிழிலக்கியத்தில் ஒப்பிலக்கியம்
தொடர்பான நூல்கள் பல்வேறு அறிஞர்களால் வெளியிடப்பட்டுள்ளன என்பதை ஆசிரியர் கால வரிசைப்படுத்திச்
செல்லுகின்றார். தமிழில் தோன்றிய ஒப்பிலக்கிய நூல்களை ஆசிரியர் வரிசைப்படுத்துவதோடு
அந்நூல் குறித்த அறிமுகத்தினையும் கூறிச் செல்வது மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. மேலும்
இப்பகுதி இதுவரை தமிழில் தோன்றிய ஒப்பிலக்கிய நூல்கள் குறித்த தகவல் களஞ்சியமாகப் விளங்குகின்றது.
ஆசிரியர் இந்நூலில் 98 முதல் 136 வரை உள்ள
பக்கங்களில் இதுவரை தமிழில் வெளியான ஒப்பிலக்கியம் சார்ந்த நூல்கள் குறித்த விவரங்களை விளங்குகின்றார். மேலும் இப்பகுதியை ஒப்பிலக்கியம்
நூல்கள் குறித்த திறனாய்வு நூலடைவு என்றே கூறலாம். இதுவரை தமிழில் நடைபெற்ற ஒப்பிலக்கியம்
சார்ந்த கருத்தரங்குகள், ஆய்வேடுகள் போன்றவை குறித்த தகவல்களையும் ஆசிரியர் இப்பகுதியில்
தொகுத்து வழங்கியுள்ளார். அதோடு இப்புத்தகத்திற்கு அணிந்துரை நல்கிய இரா.மோகன், ம.திருமலை
போன்றோர்களின் நூல்கள், கட்டுரைகள் வரிசைப்படுத்தப்பட்டு ஒவ்வொன்றினையும் சுருக்க அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர்.
அதனை அடுத்து க.கைலாசபதியின் ஒப்பிலக்கிய
அணுகுமுறைகள் என்னும் தலைப்பின் கீழ் அவரது நூல்களும் கட்டுரைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தன்னுடைய நூல்கள் மற்றும் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் 65 பக்கங்களுக்கு
மேல் ஒரு சுருக்க அறிமுகம் செய்து கொடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து செ.சாரதாம்பாள்
அவர்களின் நூல்களையும் கட்டுரைகளையும் தொகுத்து அவை குறித்து புத்தக அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரைக் காமராஜர் பலகலைக் கழகத்தில்
ஓப்பிலக்கியம் தொடர்பாக நடைபெற்ற ஆசிரியர் அறிந்த சில முனைவர் பட்ட ஆய்வேடுகள் குறித்தும்
இளமுனைவர் பட்ட ஆய்வேடுகள் குறித்தும் சுருக்க அறிமுகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு
வகையில் மேற்கண்ட தகவல்கள் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தை மையமிட்டு உருவானதாகவே
அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இயல் - 4 ஏற்புக் கோட்பாடு
நான்காவது இயலான ஏற்புக் கோட்பாடு முன்னர்
குறிப்பிட்ட இயல்களின் தொடர்ச்சியாக இல்லாமல் கோட்பாட்டை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
இவ்வியல் ஏற்புக் கோட்பாடின் தோற்றப் பின்புலம், விளக்கம், கோட்பாட்டின் தன்மை என விளக்குவதோடு
இக்கோட்பாடு தோன்றுவதற்கு இடைத் தொடர்பாளர்கள் என்னும் காரணிகள் குறித்தும் விளக்குகின்றார்.
ஜெர்மனியில் 1960 களில் சமுதாய இலக்கிய
அறிவாற்றல் சார்ந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்ட நிலையில் அவற்றின் பாதிப்பால்
வெளிவந்த ஒரு இலக்கியக் கொள்கையே ஏற்புக் கொள்கை.
ஜெர்மனிய மொழியில் Rezeption (Reception) என்றும் Wriking (Response or
effect) என்றும் இரு சொற்கள் உண்டு. இவ்விரு சொற்களுமே ஒரு கலைப்படைப்பு வேறொரு கலைப்படைப்பினால்
பெற்ற பாதிப்பைப் பற்றி பேசுவனவே. Rezeption என்ற சொல் வாசகர் சம்பந்தப்பட்டது.
Wriking என்பது வாசகம் பற்றிய கூறுகளை விளக்குவது. படைப்பாளியிடமிருந்தும் படைப்பிலிருந்தும்
கருத்து எவ்வாறு வாசகத்திற்கு மாறி வருகிறது என்பதைப் பற்றிக் கூறுவது ஏற்புக்கொள்கை.
இது மரபு வழியான தாக்கம், ஏற்பு பற்றிய ஆய்வு நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் அடக்கிய
ஒரு சொல் ஆகும்.
செல்வாக்கு என்பது படைத்து முடிக்கப்பட்ட
படைப்புகளிடையேயான உறவுகளைப் பற்றிப் பேசுவது, ஆனால் ஏற்பு என்பது மேலும் விரிவான வீச்சைக்
கொண்டது. இவ்விலக்கிய உறவுகளுக்கும் மேல் அவற்றின் பிற சூழல்களான அவற்றின் ஆசிரியர்களுக்கு
இடையேயான உறவு, அவற்றின் வாசகர்களுக்கு இடையேயான உறவு, அவற்றின் திறனாய்வாளர்கள், பதிப்பாளர்கள்
ஆகியவர்களுக்கு இடையே உள்ள தொடர்புகள் போன்ற புறச்சூழல்களையும் அடிப்படையாக்க் கொண்டது.
எனவே இலக்கிய ஏற்பு என்பது பற்றிய ஆய்வுகள், இலக்கியமும் சமுதாயமும், இலக்கியமும் உளவியலும்
பற்றிய திசையில் திரும்பி வருவதாகவும் அமைகின்றன.
ஒரு படைப்பு முழுவதுமாக வெற்றியடையக் காரணமாக
அமைவது அதை வாசகர் ஏற்பதில் தான் உள்ளது. அப்படைப்பு பற்றிய வெகுஜன ஏற்பு எவ்வாறு உள்ளது
என்பதை அது அதிகமாக விற்பனையாகும் நூல்களுள் (Best Sellers List) ஒன்றாக இருப்பதை வைத்தே
அறிந்துவிட முடியும். இவ்வகையான வெற்றிகள் நிலைத்தனவாயும் இருக்கலாம் அல்லது சில புற
நிகழ்வுகளும் காரணமாக இருக்கலாம். ஒரு ஆசிரியரை ஒரு மக்கள் குழுவினர் ஏற்பதற்கு அவரைப்பற்றியும்
அவரது நூல் பற்றியும் இதழ்களிலும் செய்தித்தாள்களிலும் வரக்கூடிய மதிப்புரைகளும் திறனாய்வுகளும்
காரணமாகலாம். ஏற்பின் அளவு பற்றி மதிப்பிட ஒரு வேற்று மொழி ஆசிரியரின் குறிப்பிட்ட
நூல் எத்தனைப் பதிப்புகள் இங்கு உள்ளூரில் வெளிவந்துள்ளன என்பதை வைத்துக் கணக்கிடலாம்.
அந்த ஆசிரியரின் நூல்களில் எத்தனை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதன் மூலமும் அறியலாம்.
ஏற்பும் தாக்கமும் கொள்கையளவில் ஒரே இலக்கை
நோக்கி இட்டுச்செல்வன; எனினும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகளையும் ஒப்பீட்டறிஞர்கள்
அறிந்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் வேறொரு நாட்டில் மிக அதிகமாக பரவலான
புகழைப் பெற்றிருக்கலாம்; அம்மக்கள் அவரைப்பற்றி அறிந்திருக்கலாம்; ஆனால் கட்டாயமாக
இவரது ஏற்பு தாக்கத்தை உண்டாக்கியிருக்க வேண்டும் என்பதில்லை.
ஏற்புக் கோட்பாடு குறித்தக் கருத்துக்களை ஆசிரியர்
பின்வருமாறு வரிசைப்படுத்துகின்றார்
- ஒரு குறிப்பிட்ட நூலின் ஆசிரியரின் ஏற்பு பிறிது ஒரு நாட்டிலோ, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலோ எவ்வாறு இருந்தது என்பதை ஆராய்வதும் ‘ஏற்பு’ பற்றிய ஆய்வினுள் அடங்கும்.2. ஒரு தனி ஆசிரியர் மற்றொரு மொழியில் உள்ள வேறொரு ஆசிரியரிடம் கொண்டுள்ள தொடர்பு பற்றி எடுத்துக் கூறுவது.3. ஜெர்மனிய உன்னதக் கோட்பாட்டில் ஈடுபாடு குறைந்தமை போன்றவற்றால் 1910 - 1915 இல் வாசகர்களிடையே இலக்கியச் சுவை மாறுபாடும் ஈடுபாட்டில் வேறுபாடும் ஏற்பட்டன. வாசகர்களின் இரசிகத்தன்மை, சுவையுணர்வில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ஒரு ஆசிரியர் ஏற்கப்படலாம் அல்லது ஒதுக்கப்படலாம் என்பதை இது எடுத்துரைக்கிறது.4. தனியொரு ஆசிரியர் பிறிதொரு மொழியில் படைக்கப்பட ஒரு குறிப்பிட்ட நூலினால் பெரிதும் கவரப்பட்டு அவரது கருத்து முழுவதையும் தொடர்ந்து ஆக்கிரமித்து கொண்டிருப்பதையும் அதன் காரணத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் ஆராய்வதை ஏற்பு பற்றிய ஆய்வாகவே கொள்ளலாம்.
இடைத்தொடர்பாளர்கள்
தற்போதைய காலத்தை கருத்துத் தொடர்புக்
காலம் எனலாம். தகவல் தொடர்புச் சாதனங்களின் பெருக்கமும் எளிதாக்கப்பட்ட பயண முறைகளும்
ஒரு நாட்டில் இருந்து பிறிதொரு நாட்டிற்கு இலக்கியத் தொடர்பு ஏற்படுவதற்குப் பெரும்
வாய்ப்புகளை நல்குகின்றன. இவ்வாறான இலக்கிய உறவுகளுக்கு அடிப்படையாக இருக்கும் இடைத்தொடர்பாளர்களின்
வகைகள், செயல்பாடுகள் பற்றியும் ஆராய்வதன் தேவை இன்று அதிகம் உணரப்பட்டுள்ளது. இடைத்
தொடர்பாளர்களாக கலைஞர்கள், பயணிகள், திரைப்படங்கள், இதழ்கள், செய்திகள், இயந்திரங்கள்,
குழுக்கள் போன்றவை கருதப்படுகின்றன. ஒரு மொழியில் தோன்றிய இலக்கியம் மற்றொரு மொழியில் ஏற்கப்படுவதற்கு இடைத் தொடர்புகள் மிகவும்
முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன என்பதை ஆசிரியர் விளக்குகின்றார்.
இயல் - 5
இலக்கியச் செல்வாக்கும் இலக்கியத் தாக்கமும்
இலக்கியச் செல்வாக்கும் இலக்கியத் தாக்கமும்
எனும் ஐந்தாவதாகக் கூறப்படும் இவ்வியல் ஏற்புக் கோட்பாட்டினை கருத்துக்களைத் தொடர்ந்து
ஒரு மொழி இலக்கியம் மற்றொரு மொழியில் செழுத்தும் ஆதிக்கம் குறித்தும் மொழிபெயர்ப்பின்
வழி இலக்குமொழி அடையும் தாக்கம் குறித்தும் விவாதிக்கின்றது. மேலும் இலக்கிய செல்வாக்கு
குறித்த அறிஞர்களின் விளக்கங்களும் இலக்கியச் செல்வாக்கின் வகைகளும் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.
இலக்கியப் படைப்புகளுக்கு இடையேயான உறவுகள்
பற்றிய ஆய்வில் முக்கிய இடத்தைப் பெறுவன செல்வாக்கும் தாக்கமும் ஆகும். மொழித்தடைகள்,
நாட்டு எல்லைகள், கலாச்சார, பண்பாட்டு வேற்றுமைகள் போன்ற எல்லைகளையெல்லாம் தாண்டி படைப்பாளிகளிடையே
காணப்படும் பரஸ்பர உறவுகள் ஏற்படக் காரணம் என்ன? யார்? எதிலிருந்து? எந்த அளவு? எதைப்
பெற்றுள்ளார்? யாருடைய மாதிரியில் இருந்து தனக்குத் தேவையான படைப்பு மாற்றிப் படைத்துள்ளார்?
என்று மூலமும் தாக்கமும் பற்றி ஆய்வு செய்வது ஒப்பிலக்கியத்தின் உயிர்ப்பகுதியாகும்.
ஏ.ஓ. ஆல்ரிட்ஜ்செல்வாக்கு பற்றிப் பேசும்
போது ‘ஒரு ஆசிரியர் பிறிதொரு ஆசிரியரின் முழுமையான தாக்கம் பெறாமல், அவரது படைப்பின்
ஒரு பகுதியால் பாதிக்கப்படலாம், தனக்கு முன்னோடியான அவரது படைப்பு முழுவதையும் அறியாமல்,
அவரை ஒரு கலைஞராகவே அறியாமலேயே இவர் பயன்படுத்தலாம்’ என்கிறார். ஒரு ஆசிரியரிடமிருந்து
பிறிதொரு ஆசிரியர் பெறும் செல்வாக்கு, ஒரு நூல் பிறிதொரு நூலின் மேல் செலுத்தும் செல்வாக்கு,
ஒரு இயக்கமோ கருத்தமைவோ ஒரு நாட்டிலிருந்து கிளம்பி பிறிதொரு நாட்டு இலக்கியப் படைப்புக்களின்
மேல் செலுத்தும் ஒட்டுமொத்தமான செல்வாக்கு, ஒரு தனி மனிதனின் கொள்கைகள், கருத்தமைவுகள்
பிற நாட்டு இலக்கியங்களை பாதிக்கும் அளவு ஏற்படுத்தும் செல்வாக்கு எனப் பல நோக்கு நிலைகளில்
இருந்து செல்வாக்கு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
செல்வாக்கின் வகைகள்
1. நேரடியான செல்வாக்கு 2. மறைமுகமான
செல்வாக்கு
இலக்கிய செல்வாக்கில் வெளிநாட்டு ஆசிரியரான
‘அ’ விடமிருந்து உள்நாட்டு ஆசிரியர் ‘ஆ’ பெற்றது நேரடியான செல்வாக்கு: உள்நாட்டு ஆசிரியரான
‘ஆ’ விடமிருந்து அவரது சக ஆசிரியர்களான அல்லது அவரைப் பின்பற்றிய பிற ஆசிரியர்களான ஆ1, ஆ2, ஆ3 ஆகியோர் பெற்றது மறைமுகமான செல்வாக்கு;
இவர்கள் வெளிநாட்டு ஆசிரியரின் செல்வாக்கை நேரடியாகப் பெறாமல் தன் நாட்டு ஆசிரியர்
வழியாகப் பெற்றுள்ளனர் என இவ்விரண்டிற்கும் ஆசிரியர் விளக்கம் தருகின்றார்.
3. உள்ளார்ந்த செல்வாக்கு; இதனைத் தன்மயமாக்குதல் என்பர். மூலத்தின் கருத்துக்களைப்
பார்த்துப் போன்மையாக்கமாகவோ, தழுவலாகவோ படைக்காது, தன்னகப்படுத்துக் கொண்டு பிறகு
தனக்கே உரிய முறையில் முழுவதும் தன்னுடைய சுயப்படைப்பாகத் தருவது தன்மயமாக்குதல் எனப்படும்.
4. வெளிப்படையான செல்வாக்கு; எளிதில் ஒற்றுமைக் கூறுகளை அடையாளம் காணும் அளவிற்குச்
செல்வாக்குக்கு ஆட்பட்ட நூலில் மூலநூலின் கருத்துக்கள், சொல்லாட்சிகள், உவமை, குறியீடு,
வடிவம் போன்றவை அமைந்திருக்குமாயின் அதை வெளிப்படையான செல்வாக்கு எனக் கூறலாம்.
5. உடன்பாட்டுச் செல்வாக்கு; செல்வாக்கை ஏற்படுத்தக் கூடிய ஒரு இலக்கியப் பனுவலோ
ஆசிரியரோ இலக்கு மொழியாசிரியரிடம் இயற்கையாகவே உள்ள படைப்பாக்கத் திறன் வெளிப்படுவதற்குக்
காரணமாக அமையும் பொழுது அதனை உடன் பாட்டுச் செல்வாக்கு என்கிறோம்.
6. எதிர்மறைச் செல்வாக்கு; எதிர்மறைச் செல்வாக்கு ஒரே நாட்டு ஆசிரியரிடமும்
ஏற்படலாம். ஒரு இலக்கியமரபில் தமக்குக் கலைத்தந்தையாக விளங்கிய தனக்கு முந்தைய படைப்பாளிகளை
எதிர்த்து அவர்களுக்குப் பின் வழித்தோன்றல்களாக வந்த இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பொங்கி
எழும்பொழுது எதிர் மறைச் செல்வாக்கு ஏற்படுகின்றது.
இத்துடன் இந்நூல் குறித்த
சுருக்கம் முற்று பெறுகின்றது
மதிப்புரை
ஒப்பிலக்கிய மரபும் திறனும் என்னும் இந்நூல்
ஒப்பிலக்கியம் பயிலும் மாணவர்களின் நலன் கருதி இரா. காஞ்சனா அவர்களால் எழுதப்பட்டு
மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தின் வெளியீடாக 2001 ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலினை வாசிக்கின்ற பொழுது நான் கண்டுணர்ந்த சில நிறை குறைகளை
பின்வருமாறு விளக்குவதாக இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஏனைய நூல்களைப் போன்ற எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே பக்கத்திற்கொன்றாக தென்பட்ட
வண்ணம் உள்ளன. அவைகளை சில நேரங்களில் கண்னி பிழைகள் என்று ஒதுக்கினாலும் ஆசிரியரின்
கவனக் குறைவும் அதற்கு முக்கியக் காரணம் என்றுதான் கூறத்தோன்றுகின்றது. மேலும் ஒப்பிலக்கியக்
கொள்கைகளை பொதுவான நிலையிலும் இந்திய நிலையிலும் மற்றும் தமிழ் இலக்கிய நிலையிலும்
விளக்குகின்ற பொழுது பயன்படுத்தப்படுகின்ற உதாரணங்கள் சில இடங்களில் மீண்டும் மீண்டும்
வருவதை உணரலாம். அவை அவ்விடத்தின் தேவை கருதியா? அல்லது ஆசிரியரின் கவனமின்மையா? என்பது
வாசிப்பின் சூழலிலேயே உணர்ந்து கொள்ள முடியும். மேலும் தரவுகளை மேற்கோளிட்டுக் காட்டுகின்ற
சில இடங்களில் முதன்மைத் தரவுகளைக் கூற வேண்டிய நிலையில் இரண்டாம் நிலைத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உதாரனமாக கைலாசபதியின் கூற்றை மேற்கோளிட வேண்டும் என நினைக்கும் ஆசிரியர் சச்சிதானந்தம் கையாண்டுள்ள கைலாசபதியின் கூற்றை
தானும் கையாளுவது போன்ற சில இடங்கள் தென்படுகின்றன. அவை ஆசிரியரின் குறுகிய உழைப்பைக் காட்டுகின்றது. மேற்கோள் குறியீடு, ஒற்றை மேற்கோள்கள்
மற்றும் கார்புள்ளி போன்றவை சில இடங்களில் தவறுதலாகப் பயன்படுத்தியிருப்பது கணினியின்
குறைபாடாக இருப்பினும் அதைக் கவனிக்கத் தவறியது ஆசிரியரின் குறைபாடு என்றே எண்ணத் தோன்றுகின்றது.
மேலும் ஒப்பிலக்கிய மரனும் திறனும் எனும் இந்நூலினை இயல்களின் அடிப்படையில் மதிப்பிடல்
வேண்டுமெனில் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ள
இந்நூலில் முதல் மூன்று இயல்கள் வரலாற்று அடிப்படையிலும் இறுதி இரண்டு இயல்கள் கோட்பாடு
அடிப்படையிலும் அமைந்திருப்பதை உணரமுடியும். இவ்வியல்களில் மூன்றாவது இயலான தமிழும்
ஒப்பிலக்கியமும் என்னும் இயலிற்கு ஆசிரியர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது மிகவும்
சிறப்பிற்குரியதாக அமைகின்றது. ஆனால் இந்நூலினை வாசிக்கின்ற பொழுது அதுவே குறைபாடாகவும் தோன்றுகின்றது. ஏனெனில் இரா.மோகன்,
ம. திருமலை, க. கைலாசபதி, இரா.காஞ்சனா, சாரதாம்பாள்
போன்ற ஆசிரியர்களின் நூல்களை சுருக்கம் செய்து பட்டியலிடுவதற்காக மட்டுமே 130 க்கும்
மேலான பக்கங்களை செலவிட்டிருப்பது வேறுவகையான அரசியலைப் புலப்படுத்துகின்றது. மேற்கண்ட
ஆசிரியர்களின் வரிசையில் இந்நூலின் ஆசிரியர் தன்னுடைய பெயரையும் இணைத்துக் கொண்டு தன்னுடைய
நூல்கள் குறித்து சுருக்க உரைகளை 30 பக்கங்களுக்குக் குறையாமல் தந்திருப்பது ஒரு வகையில்
தற்பெருமையாகவும் மேலும் ஒப்பிலக்கியம் சார்ந்து உழைத்தவர்கள் வரிசையில் கைலாசபதியைத் தொடர்ந்து தானும் இடம்பெறுவேன் என்பதைக் கூறுவதாகவும் தெரிகின்றது.
மேலும் இதனை பல்கலைக் கழகம் சார்ந்து நோக்குகையில் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம்
மட்டுமே ஒப்பிலக்கியத்திற்கு முன்னோடியாகவும் வீரியமிக்கதாகவும் இன்றுவரை இயங்கி வருகிறது
என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளதை உணரலாம். எனவே இந்நிலையினைத் தவிர்க்க ஆசிரியர் பொதுவாக
ஒப்பிலக்கியம் சார்ந்து வெளிவந்த நூல்களை காலவரிசையில் பட்டியலிட்டு அது குறித்த செய்திகளை
விளக்கியிருப்பின் மேற்கண்ட குறைபாடுகள் நீங்கியிருக்கும் என எண்ணத் தோன்றுகின்றது.
எவ்வாறு இருப்பினும்
நூலின் எளிமையான மொழி நடையானது முதுகலை மாணவர்களும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் தன்மை
கொண்டதாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பிற்குரியது. மேலும் இந்நூலினை வாசிக்கின்ற பொழுது
ஒரு ஆய்வேட்டினை வாசிக்கின்ற உணர்வினைப் பெறமுடிகின்றது. தேவையான இடங்களில் மேற்கோள்கள்
கொடுத்திருப்பது ஆசிரியரின் தேடலை மெய்ப்பிக்கின்றது. கொடுக்கப்பட விவரங்கள் அனைத்தும்
காலவரிசைப்படி கொடுத்திருப்பது சிறப்பிற்குரியது. பின்னிணைப்பே இல்லாது வருகின்ற பல்வேறு
நூல்களுக்கிடையில் இந்நூலினை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்த தரவுகளை இயல்கள் வாரியாகப்
பிரித்து அவை வரிசைப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டதோடு தெளிவான துணை நூல் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது
சிறப்பிற்குரியதாக இருக்கின்றது. ஒப்பிலக்கியம்
குறித்து ஒப்பிலக்கிய மாணவர்களை மையமிட்டு எழுதப்பட்ட இந்நூல் தமிழில் ஒப்பிலக்கியம்
தொடர்பாக தோன்றிய புத்தகங்களின் தகவல் களஞ்சியமாகவே விளங்குகின்றது. நிறைய புத்தகங்களைக்
கூறுவதோடு மட்டுமல்லாது அப்புத்தகங்கள் குறித்த சுருக்க அறிமுகத்தினை வழங்குவது என்பது
ஒப்பிலக்கியம் குறித்து தமிழில் வெளிவந்த நூல்களை திறனாய்வு நூலடைவு செய்துள்ளது போன்று
காணப்படுகின்றது. மேலும் ஆசிரியர் பல்வேறு இடங்களில் இந்திய இலக்கியங்களில் ஒப்பிலக்கியப்
பணிகள் நடைபெற வேண்டிய பகுதிகளை குறிப்பிட்டுச்
செல்லுவது ஒப்பிலக்கியம் குறித்து ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு புதிய சிந்தனையினை
எடுத்துரைப்பதாக இருக்கின்றது. மேலும் சில இடங்களில் ஒப்பிலக்கிய மாணவர்களை உற்சாகப்படுத்தும்
விதமாக ஒப்பிலக்கியம் சார்ந்து பணிபுரிய வேண்டிய அவசியத்தையும் அதன் எதிர்காலத் தேவையையும்
குறித்து விவாதித்திருப்பது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இறுதியாக
இந்நூலைப் பற்றிக் கூறவேண்டுமெனில் ஒப்பிலக்கிய ஆய்வாளனுக்கு ஒப்பிலக்கியத் தரவுகளை
தொகுத்துரைக்கின்ற ஒரு ஒப்பிலக்கியம் சார்ந்த தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பதை
இங்குக் கூறிக் கொள்கின்றேன். ஒப்பிலக்கிய ஆய்வாளர்கள் அனைவரும் குறைந்தது ஒருமுறையேனும்
இந்நூலினை வாசிப்பது பயன் தரும் எனக் கூறி, இந்நூல் குறித்த மதிப்புரையினை முடித்துக்
கொள்கின்றேன்.