தமிழ் நாவல்களில்
குடும்பச் சிதைவுகள்
ஆசிரியர்: அ. குணசேகரன்
வெளியீடு: NCBH
முதல் பதிப்பு:
2006விலை: 75 பக்கம் : 200
நூல் அறிமுகம்
தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள்
எனும் இந்நூல் முனைவர் அ. குணசேகரனின் முனைவர் பட்ட ஆய்வேடாகும். புதுவைப் பல்கலைக்
கழகத்தில் க. இளமதி ஜானகிராமனின் வழிகாட்டுதலின் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நூல் உருவாக்கத்தின் பொருட்டு ஆய்வேட்டின் முன்னுரை எனும் இயல்பகுப்பு நூலில் நூன்முகம்
என்பதாக மாற்றம் பெற்றுள்ளது. நூல் முழுக்க நாவல் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதன்
காரணமாக வாசிப்புப் புரிதலுக்காக இம்மதிப்புரையில் புதினம் என்ற சொல் தவிர்க்கப்பட்டு
நாவல் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
பொருளடக்கம்
1. தமிழ் நாவல் வரலாற்று வளர்ச்சியில் குடும்பம்
2. குடும்ப அமைப்பு: மாற்றங்களும் சிதைவுகளும்
3. தமிழ் நாவல்களில் பொருளாதாரச் சிக்கல்களும் குடும்பச்
சிதைவுகளும்
4. தமிழ் நாவல்களில் உளச்சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும்
5. தமிழ் நாவல்களில் பெண்ணுரிமையும் குடும்பச் சிதைவுகளும்
6. முடிவுரை
ஆய்வேட்டிலிருந்து
கருதுகோளும் ஆய்வு எல்லையும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதனை நூன்முகத்திலும்
ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வேட்டிற்கான கருதுகோள் பின்வருமாறு
“சமூகவியல் அறிஞர்கள்
சுட்டும் குடும்பச் சிதைவுகள், அவற்றுக்கான காரணிகள் ஆகியன நாவல்களில் இயல்பாக இடம்
பெற்றுள்ளன. இப்பதிவுகள் சமூகவியலாளர்களின் ஆய்வுகளுக்கு இணையாக விளங்குகின்றன. சிற்சில
இடங்களில் அவர்களின் ஆய்வுக்கு எட்டாதவற்றையும் நாவலாசிரியர்கள் தம் நாவல்களில் பதிவு
செய்துள்ளனர். எனவே சமூக மாற்றங்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வான குடும்பச் சிதைவைக்
காட்டுவதில் சமூகவியல் ஆய்வுகள் போன்று தமிழ் நாவல்கள் விளங்குகின்றன என்பது இவ்வாய்வின்
கருதுகோளாகும்.”
ஆய்வு எல்லை:
“தமிழ் நாவல்கள் ஒரு நூற்றாண்டைக் கடந்து
மேலும் இருபதாண்டுக் கால வரலாற்றை உடையது. இத்தகைய வரலாற்றை உடைய பரப்பில் ஆய்வின்
தேவை கருதி எழுபதுக்குப் பிந்தைய இருபத்தைந்தாண்டு கால எல்லைக்குட்பட்ட நாவல்களைக்
கொண்டதாக இவ்வாய்வின் எல்லை அமைகின்றது. அவற்றுள்ளும் குடும்பச் சிதைவைச் சித்தரிக்கின்ற
நாவல்கள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றன.” என்கிறார் ஆசிரியர். அவை பின்வருமாறு
ராஜம் கிருஷ்ணனின்
(6) வீடு (1977)
புதிய
சிறகுகள் (1985),
சுழலில்
மிதக்கும் தீபங்கள் (1987),
ஆண்களோடு பெண்களும் (1988),
ஓசைகள்
அடங்கிய பிறகு (1989),
மண்ணக்கத்துப்
பூந்துளிகள் (1988),
ஜெயகாந்தனின் (3) சில நேரங்களில் சில மனிதர்கள்
(1970),
ஒரு
மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (1973),
சுந்தர
காண்டம் (1982),
சிவசங்கரியின் (2)
ஒரு மனிதனின் கதை (1981)
பாலங்கள்
(1983),
பிரபஞ்சனின் (2) மகாநதி (1990)
கனவு
மெய்ப்பட வேண்டும் (1991),
இந்திரா பார்த்தசாரதியின்
(1) ஹெலிகாட்டார்கள் கீழே இறங்குகின்றன (1971),
எம்.வி. வெங்கட்ராமின்
(1) வேள்வித்தீ (1975),
ஐசக் அருமைராசனின்
(1) கீறல்கள் (1975),
வண்ண நிலவனின் (1)
கடல் புரத்தில் (1977),
கண்ணதாசனின் (1) விளக்கு மட்டுமா சிவப்பு (1977),
பாலகுமாரனின் (1) மெர்குரிப் பூக்கள் (1981),
இந்துமதியின் (1) பைசா நகரத்துக் கோபுரங்கள்
(1982),
பூமணியின் (1) நைவேத்தியம் (1985),
அஸ்வகோஷின் (1) சிறகுகள் முளைத்து (1988),
தோப்பில் முகமது மீரானின்
(1) ஒரு கடலோர கிராமத்தின் கதை (1989),
வாசந்தியின் (1) யாதுமாகி (1992),
கணேசலிங்கனின் (1 ஒரு பெண்ணின் கதை (1992).
தமிழ் நாவல் வரலாற்று வளர்ச்சியில் குடும்பம்
தமிழில் தோன்றிய முதல் நாவலில் தொடங்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்ட
காலம் வரையில் வெளிவந்து குடும்ப அமைப்பை மையமாகக் கொண்டு விளங்குகிற நாவல்களை வரலாற்று
ரீதியில் சுருக்கமாக விளக்கியுள்ளார். பொதுவாக குடும்ப சித்தரிப்புகள் அடங்கிய நாவல்களை
சமூக நாவல்கள் எனும் பகுதியில் குறிப்பிடுவர் என்று கூறும் ஆசிரியர் குடும்ப நாவல்
என்பது குறித்து விளக்க கி. வா. ஜெகநாதனின் கூற்றான “குடும்பத்தின் எல்லைக்குள்ளே அடங்கிய
நிகழ்ச்சிகளை முக்கியமாக வைத்தெழுதும் நாவல்களையே குடும்ப நாவல்கள் எனலாம்.” என்பதை
மேற்கொள் காட்டுகின்றார். பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி
சரித்திரம் காட்டுகின்ற குடும்ப அமைப்புகள் குறித்து விளக்கியுள்ளார். அதாவது “பிரதாப
முதலியார் சரித்திரம் குடும்பம் தவிர்த்த வேறு பல நிகழ்வுகளை அதிகமாகக் கொண்டிருந்தாலும்
சிறப்பாக அக்காலத்தில் ஒரு மூட்டுக் குடும்பத்தில் எழுந்த சிக்கல்கள் குறித்தும் பேசியுள்ளது.
மாமியார் – மருமகள் சந்தைகளும் நாத்தனார் கொடுமையும் அவற்றால் குடும்ப வாழ்க்கைச் சீர்குலைவது
பற்றியும் இந்நாவலில் அறிய முடிகிறது.” என்கிறார். அதனையடுத்து விடுதலைக்குப் பிந்திய
நாவல்கள் எனும் தலைப்பின் கீழ் கு.ப.ரா, தொ.மு.சி. ரகுநாதன், ஆர். சண்முக சுந்தரம்,
ஹெப்ஸிபா ஜேசுதாசன், டி. செல்வராஜ், கு. சின்னப்பப் பாரதி, மு.வ வின் நாவல்களை சுட்டிக்காட்டுகின்றார்.
மேலும் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, ஆர். சூடாமணி, அசோகமித்திரன்
நாவல்களில் குடும்பச் சிகைவுகள் காணப்படுகின்றன என்பதாகவும் குறிப்பிடுகின்றார். இவையனைத்தும் ஒரு அறிமுக உரையினைப் போன்று 14 பக்கங்களுக்குள்ளாக
விளக்கியுள்ளார்.
குடும்ப அமைப்பு மாற்றங்களும் சிதைவுகளும்
குடும்பம் ஒரு நிறுவனம் அல்லது நிலையம்
அல்லது ஒரு குழு என்று குறிப்பிடுவதோடு குடும்பம் குறித்து மார்க்சியர்கள் கூறும் விளக்கங்கள்
எனும் தலைப்பில் கருத்துக்களை முன்வைக்கின்றார். “குடும்பம் என்பது மக்கள் சமுதாயக்
கூட்டமைப்பின் மற்றொரு வடிவம் அதில் இயற்கையானதும் சமுதாயத்தன்மை கொண்டதுமான செயலபாடுகள்
மிக நுணுக்கமாக பின்னிப் பிணைந்திருக்கின்றன. எனினும் சமுதாயச் செயல்பாடுகளே நிலைபெறுகின்றன.
ஆண் பெண்களுக்கு இடையேயான உறவுகளின் மீதும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதார உறவுகளின்
மீதும் உற்பத்தி முறையின் மீதும் சார்ந்திருக்கின்றன.” என்கிறார். பின்னர் குடும்பத்தின்
தோற்றம் குறித்து விளக்குகின்றார். மனிதன் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுகின்ற தேவை கருதி
குழுக்களாக வாழ்ந்தனர். குழுக்கள் பல குடும்ப அமைப்புக்களைப் பெற்றிருந்தன. மேலும்
வாரிசுரிமையின் அடிப்படையில் சொத்துக்கள் பாதுகாக்கப் பட வேண்டி குடும்ப அமைப்பு பின்பற்றப்
பட்டு வந்தது என்கிறார். குடும்பம் என்ற அமைப்பு இரத்த உறவுகளைப் பாதுகாக்கும் சக்தியாக
விளங்குகிறது. புற நிலையில் ஒழுங்கமைவுடன் காணப்பட்டாலும் சுதந்திரம், உரிமை எனும்
அடிப்படையில் கால மாற்றத்திற்கு ஏற்ப விரிசல்கள் பல தோன்றலாயின. இதனால் கூட்டுக் குடும்பம்
என்ற அமைப்பு தனிக் குடும்பமாக மாற்றம் பெறத் துவங்கியது என்கிறார் ஆசிரியர்.
இவ்வாறாகத் தனிக் குடும்பம்
தோன்றி அது செயல்படுகின்ற நிலையினை கீழ்க்காணுமாறு ஆசிரியர் வகைப்படுத்துகின்றார்.
1. புதிய வாழிடம் தேடி: வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை
ஆதாரங்களைத் தேடி பெற்றோரைப் பிரிந்து புதியவழிடம் தேடி வாழ்தல்.
2. கூட்டு செயல்பாடு: பல்வேறு காரணங்களால் பெற்றோரைப்
பிரிந்து வாழும் பிள்ளைகள் பெற்றோரின் முதுமை, உடல்நலமின்மை காரணமாக தொலைவில் இருந்துகொண்டே
அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் செயலை கூட்டு செயல்பாடு என்கிறார்.
3. தனி மனிதத்துவம்: ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம்
என்ற நிலையில் தனிக் குடும்பங்களில் தனிமனிதத்துவம் முக்கியத்துவம் பெறுகின்றது. அதனால் கூட்டுக் குடும்பம் தனிக் குடும்பங்களாகப்
பிரிகின்றது.
4. பெண்ணுக்கான சமத்துவம்: கல்வி கற்றல், வேலை செய்தல் என பெண்களின் நிலை மாறுகின்ற
பொழுது பெண்களுக்கான சமத்துவ உணர்வும் மேலோங்குகிறது.
5. வாழ்க்கைத் துணைத் தேர்வு: தனிக் குடும்ப அமைப்பில்
பிள்ளைகளின் விருப்ப அடிப்படையில் பெரும்பாலும் வாழ்க்கைத் துணைத் தேர்வு அமைகின்றது.
6. குடும்ப நெறிகள் நெகிழ்தல்: தற்காலத்தில் நிறுவனங்களுக்காக
உழைத்தல் எனும் நெருக்கடியான நிலையில் உறவுகளுக்கான
நெருக்கம் தளர்ந்து போகின்றது. என தனிக்குடும்ப செயல்பாடு முறையினை வகைப்படுத்துகின்றார்.
குடும்பச் சிதைவு:
குடும்பச் சிதைவிற்கான காரணிகளை அகக் காரணிகள்,
புறக் காரணிகள் என வகைப்படுத்துகின்றார். அகக் காரணிகள்: ஆசை, பொறாமை, தன்முனைப்பு,
மானம், சினம், ஏமாற்றப் பட்டோம் என்ற மன நிலை, தனிமனிதப் போக்கு, பாலுணர்வு என அகக் காரணிகளைப் பட்டியலிடுகின்றார்.
புறக் காரணிகள்:
கல்வி, நகரமயமாதல், தொழில் முறை மாற்றம்,
திருமண முறை மாற்றம், வாழ்க்கைத் துணைத் தேர்வு, சட்ட முறைகளில் மாற்றம் முதலானவைகளை
புறக்காரணிகளாகக் குறிப்பிடுகின்றார்.
கல்வி:
நிறுவனங்கள் சார்ந்து வளர்ந்து வரும் தொழில்
துறைக்கு ஏற்ப கல்வி அமைப்பு முறையும் மாறி விட்டதால் தன்னுடைய சுய வளர்ச்சியினை மட்டும்
கருத்தில் கொண்டு நிறுவனுங்களுக்கு ஏற்ப தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியுள்ள
நிலையில் குடும்ப அமைப்பிலும் மாற்றம் ஏற்படுகின்றது.
நகரமயமாதல்:
நகரமயமாதலின் வளர்ச்சியால் கிராமத்திலிருந்து
மக்கள், நகரத்தை நோக்கி தொழில் காரணமாக இடம் பெயருகின்றனர். நகரங்களில் ஏற்படுகின்ற
இட நெருக்கடியும் தேவைகளும் கூட்டுக் குடும்ப சிதைவிற்குக் காரணமாகின்றன.
தொழில்மயமாதல்:
தொழில்மயமாதலினால் பெருகி வருகின்ற தொழிலுக்கு
ஏற்ப மனிதனின் வாழ்க்கைச் சூழலும் மாற்றம் பெறுகின்றது. கிடைக்கின்ற தொழிலுக்கு ஏற்ப
தன்னுடைய வாழ்க்கை முறையினையும் வாழ்விடத்தையும் அமைத்துக் கொள்கின்ற நிலைக்கு மனிதன்
தள்ளப்படுவதால் கூட்டுக் குடும்ப அமைப்பு முறையானது சிதைவிற்கு உள்ளாகின்றது.
திருமண முறைகளில் ஏற்படுகின்ற மாற்றம்:
வாழ்க்கையில் குடும்ப பொறுப்பின் காரணமாக
திருமணம் தள்ளிப் போதல், இதனால் வயது மிகுதல், திருமணம் தடைபடுதல் இதன் காரணமாக ஏற்படுகின்ற
வெறுப்புணர்ச்சி குடும்பச் சிதைவிற்குக் காரணமாகின்றது. மேலும் வாழ்க்கைத் துணையைத்
தேர்ந்தெடுக்கின்ற பொழுது ஏற்படுகின்ற குழப்பங்கள் போன்றவையும் குடும்பச் சிதைவிற்குக்
காரணமாக இருக்கின்றன. கல்வி, வேலை என பல காரணங்களால் தனியாகவே தன்னுடைய விருப்பப்படி
வாழ்ந்துவிட்டவர்கள் ஒருவரோடு சேர்ந்து வாழ்தல் என்பதை வெறுத்தல் ஆகிய காரணங்களால்
குடும்பச் சிதைவுகள் ஏற்படுகின்றன என வரிசைப்படுத்துகின்றார் ஆசிரியர்.
தமிழ் நாவல்களில் பொருளாதாரச் சிக்கல்களும் குடும்பச்
சிதைவுகளும்
பொருளாதாரச் சிக்கல்களினால் சிதைவுக்குள்ளான
குடும்ப அமைப்பைப் பற்றி விளக்குகிற நாவல்களை எடுத்துக்கொண்டு வகைப்படுத்திக் காட்டுகின்றார்
ஆசிரியர். அதனடிப்படையில் பின்வருகின்ற தலைப்புக்களின் கீழ் இவ்வியலை விளக்கிச் செல்கின்றார்.
அவை பின்வருமாறு.
1. தன்னலமும் குடும்பச் சிதைவும்
கூட்டுக் குடும்பத்தில் பொதுநலம் மிகவும்
அவசியமானது. சுயநலம் தோன்றத் துவங்கினால் குடும்பம் சிதைவிற்கு உள்ளாகிவிடும். இதை
வேள்வித்தீ நாவல் வழி சான்று காட்டுகின்றார். ‘இரண்டு அண்ணன்கள் மூன்று சகோதரிகள்.
அனைவரும் நெசவுத் தொழில் செய்து வந்தனர். தந்தை இறந்து விட்ட நிலையில் தாயை யார் பார்த்துக்
கொள்வது என்ற பிரச்சினை எழுகிறது. மேலும் அண்ணன் தம்பிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்தினை
பங்கிட்டு செலவு செய்ய விருப்பமின்றி தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்ற சுய நலத்தால்
தனிக்குடித்தனம் செல்கின்றனர்.
2. இளையோர் மனநிலையும் குடும்பச் சிதைவும்
பெற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்து
குழந்தைகளை படிக்க வைத்து, பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற உழைக்கின்றனர். பிள்ளைகள்
முன்னேறுகின்ற நிலையில் பெற்றோர் முதுமையுறுகின்றனர். தங்களுடைய முன்னேற்றத்தை மட்டும்
நினைக்கும் பிள்ளைகள் பெற்றோரின் தியாகத்தை மறந்து விடுகின்றனர். என்பதை ஐசக் அருமைராஜனின்
கீறல்கள் எனும் நாவலில் எடுத்துக் காட்டுகின்றார். முத்தையா முந்திரி அலுவலகத்தில்
எழுத்தராகப் பணிபுரிகிறார். மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் என ஒவ்வொருவரும் பெற்றோரின்
தியாகத்தை உணராது போனதால் குடும்பம் சிதைந்து போவதினை ஆசிரியர் விளக்குகின்றார். தன்
உழைப்பு தன் வாழ்க்கை தன் முன்னேற்றம் என்ற மனநிலை தோன்றிய இச்சமூகத்தில் குடும்ப அமைப்பு
சிதைந்து போகின்றது என்பதை நாவல் வழி விளக்குகின்றார்.
3. இயற்கையின் பங்கும் குடும்பச் சிதைவும்
குடும்பச் சிதைவு இயற்கையின் மாறுபாட்டாலும்
நடைபெறுகின்றது. மழையின்மையின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்ப நிலையினை பூமணியின் நைவேத்தியம் நாவல் வழி ஆசிரியர் விளக்குகின்றார். ‘சித்தரம்
பட்டி கிராமத்தில் மழையின்மையில் விவசாயம் பாதிக்கப்பட்டது. அவ்வூரில் உள்ள நிலங்கள்
பார்ப்பனர்களுக்கு உரியவை. அவை குத்தகைக்கு விடப்பட்டு அவற்றில் வரும் வருவாயினை வைத்து
வாழ்ந்து வந்த அவர்கள் வறட்சியின் காரணமாக ஊரை விட்டு நீங்கினர். மகாலிங்க ஐயர் பசியின்
பொருட்டு வாழைக்காய் திருடி காவல்காரனிடம் அடிவாங்கியதால் அவமானம் தாங்காமல் இறந்து
போனார். சங்கரையர் வறுமையின் பொருட்டு மனைவியும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட சில நாட்களில்
தானும் இறந்து போனார். என்பதாக குடும்பச் சிதைவினை நாவல் வழி எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
4. குடும்பச் சிதைவில் பாலியல்
பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான
காரணிகளில் முதன்மையானது குடும்பப் பொருளாதார நிலை. இதனை விளக்க அஸ்வகோஷின் சிறகுகள்
முளைத்து எனும் நாவல் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ‘கணவன் வேறொரு பெண்ணுடன் சென்று விட்ட நிலையில்
குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு தேவையானையிடம் வருகிறது. மகளின் திருமணத்தை முடித்து
மகனை படிக்க வைக்கின்றாள். மகன் பாஸ்கரன் படித்து வீடு திரும்புகையில் பாலியல் தொழிலில்
ஈடுபட்டதற்காக தேவையானையை காவல் துறையினர் கைது செய்கின்றனர். அவமானம் தாங்காமல் அவள்
இறந்து விடுகின்றாள். குடும்பத்தைக் காப்பாற்ற
வேண்டி எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனரோ அதே தொழில் மீண்டும் குடும்பச் சிதைவிற்கு
முக்கியக் காரணியாக விளங்குகிறது.
5. தொழிலாளர் போராட்டங்களும் குடும்பச் சிதைவுகளும்
தமிழ் நாவல்களில் ஐம்பதுகளில் தொடங்கி,
பல நிலைகளில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், இழப்புகள் இவற்றுக்கான போராட்டங்கள்
பற்றிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன. சிதம்பர ரகுநாதன், டி. செல்வராஜ், பொன்னீலன், கு.
சின்னப்பா பாரதி போன்றோர் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்கிறார்.
6. நுகர்வுப் பண்பாடும் குடும்பச் சிதைவுகளும்
‘அறிவியல் தொழில் நுட்பங்கள், சமூக மாற்றத்திலும்
முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வியாபாரத்தில் தொழில் நுட்பங்கள் நுழைந்துவிட்ட
நிலையில் மனிதனின் அன்றாடத் தேவைகள் அதிகரித்து விட்டன. பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து
விட்டது. அன்றாடப் பொருட்களும் விளம்பர உத்திகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. வரதட்சணை
எனும் பெயரில் அன்றாடப் பொருட்கள் அனைத்தும் சீதனமாக பெறப்படுகின்றன. இதனால் பெண்ணிற்குத்
திருமணம் என்பது பொருளாதாரத்தின் அடிப்படையில் பெரும் சிக்களுக்குரியதாகின்றது. வீடு
எனும் நாவலின் அமைப்பில் ரேவதி என்பவளின் திருமணம் நடைபெறுவதற்காக அக்குடும்பம் எவ்வளவு
பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதை அறியமுடிகின்றது. என்கிறார் ஆசிரியர்.
தமிழ் நாவல்களில் உளச்சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும்
பாலுறவுச் சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும்
பாலியல் சிக்கல்களை திருமணத்திற்கு முன்,
திருமணத்திற்குப் பின் என இருவகைப்படுத்துகின்றார்.
திருமணத்திற்கு முந்திய பாலியல் சிக்கல்கள்
எதிர் பாலினரோடு நெருக்கம்
இன்றைய சமூகச் சூழலில் ஆணும் பெண்ணும்
இணைந்து கல்வி பயிலுதல், பணியாற்றுதல் போன்ற சூழலில் நெருக்கமாக பழகும் வாய்ப்புகள்
அதிகரித்துள்ளன. இதனால் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்படுவது இயல்பாகிறது. இது காதலாகின்ற
நிலையில் ஏற்படுகின்ற எதிர்ப்புகளும் அதற்கான போராட்டங்களும் குடும்பச் சிதைவிற்கு
காரணங்களாகின்றன. என்கிறார்.
திருமண வாய்ப்பு தள்ளிப் போதல்
பொருளாதார மற்றும் குடும்பச் சுமை காரணமாக
ஒருவரின் திருமண வாய்ப்பு தள்ளிப் போகின்றது. ஆணிற்கு திருமணம் தள்ளிப் போவதை விட பெண்ணிற்கு
திருமணம் தள்ளிப் போவதினை சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் திருமணம் ஆகாத பெண் மிகவும்
கண்டிப்போடு வளர்க்கப் படுகிறாள். திருமண வாய்ப்பு தள்ளிப் போவது குடும்பச் சிதைவிற்கு
காரணமாக விளங்குவதை ஆசிரியர் விளக்குகிறார்.
திருமணத்திற்குப் பிந்திய பாலுறவுச் சிக்கல்கள்
பாலுணர்வுத் தேவை நிறைவேறாமை
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் எனும் நாவலில் சபாபதிப்
பிள்ளையின் மனைவி பாலுணர்வுத் தேவையின் பொருட்டு ஊரைவிட்டு முடி திருத்தும் தொழிலாளியுடன்
ஓடிப் போவதனால் ஏற்பட்டுகின்ற குடும்பச் சிதைவு,
பாலுறவில் மனநிறைவின்மை
மெர்க்குரிப் பூக்கள் எனும் நாவலில் தண்டபாணியின்
மனைவி ‘சியாமளி’ கணவருடனான மனநிறைவின்மை காரணமாக கணவரின் இளைய சகோதரன் சங்கரனிடம் பாலியல்
உறவில் ஈடுபடுதல். இதனால் கணவன் மணிவியிடையே ஏற்படுகின்ற பிரச்சனையால் குடும்பம் சிதைவுறுகிறது.
பாலியல் வன்முறை
பாலங்கள் எனும் நாவலில் சாருவின் கணவன்
‘சுரேஷ்’ அவள் கருவுற்றிருக்கின்ற நிலையில் மனைவியின் முன்பாகவே வேறொரு பெண்ணுடன் தொடர்பு
கொள்வதனால் கணவன் மீது வெறுப்பு ஏற்பட்ட நிலையில் குடும்பம் சிதைவிற்குள்ளாகிறது.
பழைய காதல் பற்றிய நினைவுகள்
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்குகின்றன எனும்
நாவலில் அமிர்தம், திலகம் ஆகிய இருவருக்கும் வாழ்க்கை ஒத்துப் போகவில்லை. அமிர்தம்
தன் முன்னாள் காதலி நித்தியாவின் நினைவில் வாழ்கின்றான். இதனால் இருவருக்குமிடையே சிக்கல்கள்
எழுகின்றன.
பாலியல் விபத்துக்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவலில்
கங்கா திருமணத்திற்கு முன்பு பாலுறவிற்கு உட்படுத்தப்படுகின்றாள் இதனால் கங்காவினால்
குடும்பம் என்ற அமைப்பிற்குள் தன்னை இணைத்துக் கொள்ள இயலாமல் போகின்றது. இவ்வாறு நாவல்களை
ஆசிரியர் சான்று காட்டுகின்றார்.
1. பிற உளச்சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும்
உளவியல் சிக்கல் பல நிலைகளில் தோன்றுகின்றன. பொதுவாக
ஒவ்வொரு செயலுக்கும் உளவியல் காரணங்கள் சொல்லலாம். அதனடிப்படையில் இந்நூலில் தாய்
- மகன் இருவருக்குமிடையேயான காமம், தந்தை - மகள் இருவருக்குமிடையேயான காமம் என வகைப்படுத்தி
விளக்குகின்றார். இதற்குச் சான்றாக ஜெயகாந்தனின் ரிஷிமூலம் இந்திரா பார்த்த சாரதியின்
நிலமென்னும் நல்லாள் போன்ற நாவல்களைச் சான்று காட்டுகின்றார். மேலும் தந்தை மகனுக்குமான
பகை உணர்வை சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை எனும் நாவலின் வழி எடுத்துரைக்கின்றார்.
தியாகு குடிப்பழக்கத்தினால் ஹிஷ்டீரியா நோய்க்கு ஆளாகின்றான். அதனால் தந்தைக்கும் மகனுக்கும்
பகை ஏற்பட்டு தந்தை இறந்துவிடுகின்றார். குடும்பம் சிதைவுறுகின்றது. என்கிறார் ஆசிரியர்.
ஈகோ என்பதற்கு தன்முனைப்பு என்ற சொல்லாக்கத்தை ஆசிரியர் பயன்படுத்துகின்றார். அதனால்
சிதைந்து போன குடும்பத்தைக் காட்டுவதற்கு தோப்பில் முகமது மீரான் எழுதிய ஒரு கடலோர
கிராமத்தின் கதை சான்றாகின்றது.
தமிழ் நாவல்களில் பெண்ணுரிமையும் குடும்பச் சிதைவுகளும்
‘குடும்ப நிர்வாகத்தில் ஆண்களை விட பெண்களே
அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இருப்பினும்
பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் இரண்டாம் தலைப்பட்டதாகவே உள்ளன. இந்நிலையில் பெண்கள்
தங்களுக்கான உரிமைகளைப் பெற நினைக்கின்ற பொழுது ஆண்கள் மரபார்ந்த கட்டுப்பாட்டிற்குள்
பெண்களைக் கொண்டுவர நினைக்கின்றனர் என்பதை நாவல்கள் வழி ஆசிரியர் விளக்குகின்றார்.
சமூகவியலார் சுட்டும் பெண்ணுரிமைகள்
பெண்ணிற்கான உரிமைகளை மூன்று நிலைகளில்
வகைப்படுத்தப்படுவதாக ஆசிரியர் விளக்குகின்றார். 1. சமூக உரிமை 2. பொருளாதார உரிமை
3. அரசியல் உரிமை இவற்றில் சமூக உரிமையின் கூறுகளாக 1 சமத்துவம் 2. காதல் உரிமை 3.
வாழ்க்கைத் துணைத் தேர்வு உரிமை 4. கருத்தரிப்பை முடிவு செய்யும் உரிமை 5. பாலியல்
உரிமை என வகைப்படுத்துகின்றார்.
பெண் சமத்துவம் கோரலும் குடும்பச் சிதைவுகளும்
இராஜம் கிருஷ்ணன் எழுதிய வீடு எனும் நாவலில் மூன்று
குடும்பங்களில் சிதைவுகள் பேசப்பட்டுள்ளன. இந்நாவலில் வரும் தேவி என்பவள் குடும்ப முன்னேற்றத்திற்காக
உழைப்பவள். எனினும் அவளுக்குரிய சமத்துவம் இன்மையால் தேவி வீட்டை விட்டு வெளியேறுகின்றாள்.
திரிவேனியும் தன் கணவனுடன் சமத்துவ நிலையில் வாழமுடியாததால் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள்.
தேவி, திரிவேணி ஆகிய இருவரும் தங்களுக்குரிய சமத்துவ உரிமை கிடைக்கப்பெறாததால் வீட்டை
விட்டு வெளியேறுகின்றனர். இருவருக்குமான கணவர்கள் கற்றவர்களாயினும் சமத்துவம் பற்றி
உணராதவர்களாக உள்ளனர் என்பதை நாவல்கள் வழி ஆசிரியர் எடுத்துரைக்கின்றார்.
வாழ்க்கைத் துணைத் தேர்வு
தமிழ் சமூகத்தில் வாழ்க்கைத் துணைத் தேர்வு
உரிமை என்பது மிகுதியும் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது என்பதை நாவல் வழி விளக்குகின்றார்.
திருமணம் என்பது சாதி மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் ஆணைப் பொறுத்த
வரையில் பொருட்படுத்தாமலும் பெண்ணுக்கு முற்றிலும்
கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதாகவுமே இருக்கின்றது. ஒரு ஆண் பெற்றோர் ஒப்புதலின்றி
ஒரு பெண்ணை ஏற்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருப்பது போன்று ஒரு பெண் பெற்றுள்ளதாக கூறுவதற்கில்லை.
ஒரு பெண் அவ்வாறு நடந்து கொள்ளுகின்ற பொழுது அது அவளுக்குத் துன்பத்தைத் தரக்கூடியதாகவே
அமைகின்றது. என்பதை ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு நாவலின் வழி எடுத்துக் காட்டுகின்றார்
ஆசிரியர்.
கருத்தரிப்பை முடிவு செய்யும் உரிமை
“பெண் கரு உயிர்த்தல், குழந்தை பெறுதல்
என்பன ஆணின் வாரிசை உருவாக்கல், அவனுடைய ஆண்மைக்கான வெற்றியை நிலை நிறுத்தல் என்ற அளவிலேயே
அமைகின்றன. இதைப் பெண் குறைவின்றி நிறைவேற்றினால் பாராட்டப் படுவாளே அன்றி அவளுக்கு
உரிமை பாராட்டும் அளவில் எத்தகைய பெருமையும் விளைவதில்லை.” என்று கூறும் ஆசிரியர் செ.
கணேசலிங்கன் எழுதிய ஒரு பெண்ணின் கதை எனும் நாவலில் அசோகன் மற்றும் உமா ஆகியோரிடையே
ஏற்படுகின்ற சிக்கலினால் குடும்பம் சிதைவதினை எடுத்துரைக்கின்றார். கல்லூரி ஆசிரியையாக பணிபுரியும் உமா கற்பமுற்ற நிலையில்
பணியின் காரணமாக முதல் குழந்தையைத் தள்ளிபோடலாம் என்று கூற அசோகன் உனது வேலையை நிறுத்திவிட்டு
குழந்தையைப் பெற்று வளர்த்தால் போதும் என்பதாக வற்புறுத்துகிறான். இதனால் ஏற்படுகின்ற
மன விரிசல்கள் குடும்பச் சிதைவிற்குக் காரணமாவதாகக் குறிப்பிடுகின்றார்.
பாலியல் உரிமை
“பாலியல் உரிமை என்பது பெண் பாலுறவில்
நாட்டங்கொள்வது, அந்த உறவை மறுப்பது என இரண்டு வகைப்படும். இரண்டுமே சமூகத்தில் ஆணின்
அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கின்றன. இவற்றை எந்த நிலையில் ஒரு பெண் மீறினாலும் அது
அவள் கொண்டிருக்கின்ற குடும்ப வாழ்வைச் சிதைப்பதாகவே விளங்குகின்றது.” என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
பெண்ணின் பொருளாதார உரிமையும் குடும்பச் சிதைவுகளும்
சராசரி குடும்பத்தில் ஆணின் மூலமாக வருகின்ற
வருமானம் இன்றைய சூழலில் போதுமானதாக இல்லை.
அதன் காரணமாக பெண்ணும் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றாள். மேலும் “ஆணை விட பெண்
ஒருபடி மேலான பொறுப்புக்களையோ பதவிகளையோ வகிப்பது ஆணுக்கும் மனதளவில் ஏற்க இயலாதாகின்றது.”
என்பதை நாவல்கள் மூலம் சான்று காட்டி விளக்குகின்றார் ஆசிரியர்.
மதிப்புரை
தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள்
எனும் தலைப்பில் 1992ல் தொடங்கி 1999ல் ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்
இதற்கிடையில் 1966ல் விரிவுரையாளராகத் தனது கல்விப் பணியைத் துவங்கியுள்ளார். இதனையடுத்து
2006ல் இவ்வாய்வு, நூல் வடிவம் பெற்றுள்ளது. ஆய்வேடும் நூலும் கிடைக்கப்பட்டுள்ள நிலையில்
இரண்டினையும் ஒப்பிட வேண்டியுள்ளது. நூல் வடிவத்தின் பொருட்டு ஆய்வின் முன்னுரை நீக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வேட்டில் ஒவ்வொரு இயலுக்கும் இறுதியாகக் கொடுக்கப்பட்ட தொகுப்புரை எனும்
பகுதி தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. இவை தவிர எவ்வித மாற்றமுமின்றி ஆய்வேடு, நூல் வடிவம்
பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆய்வு அடிப்படையில்
குடும்பச் சிதைவினை, பொருளாதாரச் சிக்கல்கள், உளவியல் சிக்கல்கள், பெண்ணுரிமை கோரல்
எனும் மூன்றின் அடிப்படையில் ஏற்படுகின்ற குடும்பச் சிதைவுகளை விளக்க முயல்கிறது. இம்மூன்றும்
ஒன்றோடொன்று தொடர்புடையவை என்ற அளவில் ஆசிரியர் ஒவ்வொன்றையும் வகைப்படுத்திக் கூறியுள்ளார்.
ஆய்வில் ஒவ்வொரு இயலிலும் இறுதியாகத் தொகுக்கப்பட்ட கருத்துக்கள் முடிவுரையில் தொகுப்பாக
விளக்கப்பட்டுள்ளன.
தமிழ் நாவல் வரலாற்று வளர்ச்சியில் குடும்பம்
எனும் இயல் மிகவும் சுருக்கமான நிலையில் 14 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால்
தலைப்பின் பொருண்மை பற்றிப் பார்க்கும் பொழுது முதல் இயலை இன்னும் சற்று விரிவாக விளக்கியிருக்கலாம்
என்பதாகத் தோன்றுகிறது. மேலும் குடும்ப அமைப்பு மாற்றங்களும் சிதைவுகளும் எனும் இயல்
கூட்டுக் குடும்ப அமைப்பு எவ்வாறு தற்காலச் சூழலுக்கு ஏற்ப சிதைவுறுகிறது என்பதினை
பல்வேறு நிலைகளில் விளக்குகின்றது. மேலும் மார்க்சிய அறிஞர்களின் விளக்கங்களை முன்வைத்து
தனிக்குடும்ப அமைப்பினை வகைப்படுத்தி விளக்கும் விதமாக இவ்வியல் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தமிழ் நாவல்களில் பொருளாதாரச் சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும் எனும்
இயல் தற்காலப் பொருளாதார சூழலுக்கு ஏற்ப குடும்ப அமைப்பில் சிதைவுகள் ஏற்படுவதும் மனிதனின்
மன நிலை மாறுவதூம் குறித்து தக்க சான்றுகளுடன் விளக்குகிறது. கூட்டுக் குடும்பங்களில்
பொதுநலம் மிகுந்திருந்ததையும் தற்காலச் சூழலில் சுயநலம் அதிகரித்து விட்டிருப்பதையும்
அதற்கான பொருளாதாரக் காரணத்தையும் ஆசிரியர் நாவல்கள் வழி எடுத்துரைக்கின்றார். தமிழ்
நாவல்களில் உளச்சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும் எனும் இயல், பாலியல் சார்ந்து ஏற்படுகின்ற
உளச்சிக்கல்களை மையப்படுத்தி விளக்குகிறது. திருமணத்திற்கு முன்பு ஆணிற்கும் பெண்ணிற்குமான
காதல் உறவுகளை புரிந்து கொள்ளாத சமூகத்தில் ஏற்படுகின்ற சிக்கல்கள், திருமணத்திற்கு
பின்பு கணவன் மனைவி இடையே ஏற்படுகின்ற பாலியல் சிக்கல்கள் போன்றவை குடும்பச் சிதைவிற்குக்
காரணமாக அமைவதினை நாவல்கள் வழி எடுத்க்காட்டியுள்ளார். தமிழ் நாவல்களில் பெண்ணுரிமையும்
குடும்பச் சிதைவுகளும் எனும் இயல் பெண்ணியம் குறித்த தற்கால சமூக அமைப்பில் பெண்ணின்
சமத்துவம் குறித்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள இயலாத மரபார்ந்த குடும்ப அமைப்பு சிதைவிற்கு
உள்ளாவதினை ஆசிரியர் நாவல்களின் துணை கொண்டு விளக்கியுள்ளார். வாழ்க்கைத் துணையைத்
தேர்வு செய்தல், பொருளாதார சமத்துவம், கருத்தரிப்பை முடிவு செய்யும் உரிமை முதலானவற்றில்
பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுவதால் ஏற்படும் குடும்பச் சிதைவுகளை விளக்கியுள்ளார்.
இவ்வாய்வு நூலை மதிப்பீடு செய்யப்பட்ட
நிலையில் நாவல்களில் ஆய்வு செய்பவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டுதலாக அமையும். மேலும்
நாவல்களை வாசிக்கும் முன்பு இது போன்ற நாவல் குறித்த ஆய்வு நூற்களை படித்து விட்டு
நாவல்களை வாசித்தால் கதைகளைப் புரிந்து கொள்வதில் மேலும் புரிதல்கள் ஏற்படும். என்பதை
அறிய முடிகின்றது.