விழுதுகள் – ஆனந்த விகடன், 1965.
தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள ஓங்கூர் எனும் ஊரில் உள்ள கொட்டகையில் உள்ள
சாமியார்கள். இராமலிங்கப் பண்டாரம்,
அழுக்குச் சாமி (ஓங்கூர் சாமி),
குள்ளச் சாமி (வைத்தியர்),
ஆணிக்கால் ஐயர் என்றழைக்கப்படும் ஆசாமி. இவர்களைத் தவிர
மற்ற ஆசாமிகளும் தங்குவதும் செல்வதுமாக இருந்தனர். ஒரு நாள் மாதவன் ஆசாமி என
ஒருவன் நிலையாகத் தங்கி விட்டான். எப்பொழுதும் ‘எண்டே மாதவி’ என்று கூறிக்கொண்டே இருப்பான். மாதவியும் மாதவனும்
காதலித்து சாதியை எதிர்த்து ஓடிவந்து ஓங்கூரில் வாழ்ந்தனர். பிரசவ வலியில் மாதவி
இறக்க, அவளது நினைவால் பித்துப் பிடித்தவனாகி விட்டான். ஓங்கூர்
சாமி முப்பது வருடங்களாக அதிகம் பேசியது கிடையாது. சிரிப்புதான் அவரது மொழி, அவரது கருத்து. காதில் கிடந்த தங்க நகைகளை கொள்ளையர்கள் பறித்துச் சென்று காவல் துறையினரிடம்
மாட்டிக் கொண்டனர். அப்பொழுதும் அவர்கள் திருடர்கள் என்று வாய்திறந்து சாமி
கூறவில்லை. தங்கத்தைப் பெற்றுக் கொள்ளவுமில்லை. ஓங்கூர் என்பது நான்கு தெருக்களையே உடையது வள்ளியம்மை முத்து முதலியாருக்கு
வேசியாக இருந்தாள். வேசியாயினும்
யாருமற்ற முதலியாருக்கு ஆதரவாகவும் இருந்தாள். ஊரைக் கடந்து செல்பவர்களும் லாரி டிரைவர்களும் வேசிகளின் மூலம் வியாதிகளைச் சுமந்து சென்றனர்.
அவற்றிற்கு வைத்தியம் பார்ப்பவர் வைத்தியச் சாமியார்தான் என்றாலும் அது அவருக்கே
ஒரு காலம் வந்து விட்டது. எவ்வளவோ மருந்து சாப்பிட்டும் பலனளிக்கவில்லை. பல
சோதனைகளுக்குப் பிறகு தான் என்றும் வழிபடும் ஓங்கூர் சாமியைத் தஞ்சமடைந்தார். நோய் தீர்ந்தது. அன்று முதல் அவர் யாருக்கும் வைத்தியம் பார்ப்பதில்லை. ஓங்கூர்
சாமியை வழிபடுங்கள் உங்கள் குறைகள் நீங்கும் என்று கூறி வந்தார். வள்ளியம்மை
குழந்தை பெறுதல் வேண்டி வைத்திய சாமியை நாடி வந்தார். அவர் அவளை வெறுத்து
ஒதுக்கினார். புனிதம் என்பது தொழிலில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை
உணர்ந்த வைத்தியர் வள்ளியம்மைக்கு மருத்துவம் செய்தார். அதற்குப்
பத்தியமாக அவளது தொழிலை விட்டு விடக் கூறியதை ஏற்று அவளும் இளநீர் வியாபாரத்தில்
ஈடுபட்டாள். வள்ளியம்மைக்கு குழந்தை பாக்கியம் யார் தருவார் என்ற போது வள்ளியம்மையை ‘எண்டே மாதவி’ என்று மாதவன் கூறியதும் வைத்தியருக்கு நம்பிக்கை வந்து
விட்டது. கரு உண்டானதும் மாதவனும் எங்கோ சென்று விட்டான். பிரசவ வேதனையில்
வைத்தியரே அவளுக்கு உதவி செய்தார். குறுகிய காலத்தில் குழந்தையை விட்டு
வள்ளியம்மையும் இறந்து விட்டாள். வைத்தியர் குழந்தையை கொட்டகைக்குத் தூக்கி
வந்தார். வெகுகாலம் பேசாத சாமி குழந்தையைத் தொட்டுச் சிரித்தார். அத்துடன் பேச்சு நின்றுவிட்டதை உணர்ந்து எல்லோரும் ஓடிவந்தனர்.
அவர் இறந்துவிட்டதை எண்ணி எல்லோரும் அழுதனர்.