ஞாயிறு, மே 10, 2020

கருணையினால் அல்ல - ஜெயகாந்தன்

      கருணையினால் அல்ல ஆனந்த விகடன், 1965.
கௌரி 35 ஆண்டுகள் ஆன பின்பும் திருமணமாகாமல் தனியே குடியேற முடிவு செய்தால் தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் சூசயப்பர் வீட்டில் மேல் மாடியில் குடியேறினாள். டைப்பிஸ்டாக வேலை செய்து கிடைக்கும் 250 ரூபாயில் மாதம் 150 ரூபாய் வங்கியில் சேர்த்து வந்தாள். கௌரியைப் பார்க்க சொந்தம் என்று சொல்லிக்கொண்டு இராமநாதன் என்பவன் வந்தான். அவனைக் கண்டதும் தான் மறந்துவிட நினைக்கின்ற நினைவுகள் கௌரிக்கு ஞாபகம் வந்தன. அவன் கௌரியின் முன்னாள் காதலன். கௌரியின் தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இராமநாதனை மனமின்றி மறுத்து விட்டால் கௌரி. பக்கத்துத் தெருவில் கௌரி பிரிண்டிங்வைத்திருப்பதாக இராமநாதன் கூறினான். ஏன் என்று கேட்பதற்குள் அது என்னுடைய மூத்த மகளின் பெயர் என்று சமாளித்து விட்டான். இதற்கிடையில் சூசையப்பரின் வீட்டில் கந்தசாமி முதலியார் என்பவர் குடியிருப்பதும் அவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் அதனாலேயே அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதையும் கேள்வியுற்றாள். இராமநாதனின் அழைப்பின் பேரில் அவனது வீற்ற்குச் சென்ற கௌரி அவனது மனைவி இராஜம் என்பவளைச் சந்தித்தாள். கௌரி, இராமநாதன் பற்றி அறிந்த இராஜம் இருவரும் சேருவதில் எனக்கு எவ்வித வருத்தமுமில்லை என்று கூற, அதனை கௌரி மறுத்துவிடுகிறாள். ஒரு நாள் முதலியார் குளித்து விட்டு தனது வேட்டியை பாத்ரூமில் மறந்து வைத்து விட அவரையடுத்துக் குளித்த கௌரி தன்னுடைய ஆடைகளுடன் சேர்த்து கவனமின்றி எடுத்துக் கொண்டு வெளியே வருகையில் அதைக் கவனித்த முதலியார் கௌரியிடம் தனது வேட்டியைக் கேட்க நினைக்கையில் வலிப்பு ஏற்பட்டு விழுந்துவிடுகிறார். அன்று அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து முதலியாரைக் கவனித்துக் கொண்டாள் கௌரி. அன்று முதல் இராமநாதனின் சந்திப்பைத் தவிர்ப்பதற்காகவும் முதலியாரின் மீது கொண்ட அனுதாபத்தினாலும் அலுவலகத்திற்கு முதலியாருடனே சென்று திரும்புகிறாள். முதலியாருக்கு ஏதும் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டாள். ஒரு நாள் முதலியாரிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிக் கேட்க அதை அவர் மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் வந்துவிடுகிறார். அதைப்பற்றி முதலியார் சூசையப்பரிடம் வினாவுகின்ற பொழுது அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். திருமணப் பத்திரிக்கை கௌரி பிரிண்டிங்கில் கொடுக்கப்பட்டதையடுத்து இராமநாதனிடமிருந்து கௌரிக்குக் கடிதம் வந்தது. அதில் நீ என்னை மாறுப்பதாக நினைத்து அவரைத் திருமணம் செய்து உன்னையே தண்டித்துக் கொள்ளாமல் உனக்கு நிகரான யாரையாவது திருமணம் செய்து கொள் என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை முதலியாரிடம் கொடுத்து கௌரி தனது முன் காலத்து வாழ்க்கையைக் கூறினாள். பின்னர் கடிதத்தைப் படிக்கச் சொன்னாள். மறுநாள் முதலியாரைக் காணவில்லை. இரண்டொரு நாட்களில் கௌரிக்குக் கடிதம் வந்தது. அதில் நீ என்மீது கொண்ட இறக்கத்தினால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாய் கருணையினால் வருவதல்ல காதல் என்று கூறி என்னை மறந்து விடவும் என முதலியார் எழுதியிருந்தார். இதைப் படித்த கௌரி முதலியாரை பல நாட்களாகத் தேடி அலைந்தாள். ஒரு நாள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சாலையில் கிடந்தவரை பொதுமக்கள் சுற்றி வேடிக்கை பார்த்தனர். அவர் முதலியார்தான் என்பது கண்டு அவரை டாக்ஸியில் வைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். வழியிலேயே விழித்துக் கொண்ட முதலியார் வண்டியை நிறுத்தி இறங்கிச் சென்றார். அவரைத் தொடர்ந்து சென்ற கௌரி முதலியாரை வழி மறித்தாள். என்னுடைய காதல் கருணையினால் வரவில்லை. தினமும் உங்கள் நினைவால் தூங்க முடியவில்லை. எனவே வாடும் என்மீது கருணை கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாள். அதைக் கேட்டு மணம் மாறிய முதலியார் கௌரியைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.