ஞாயிறு, மே 10, 2020

கையில் ஒரு விளக்கு - ஜெயகாந்தன்

          கையில் ஒரு விளக்கு, குங்குமச் சிமிழ் 1986.
கௌரியம்மாள் பள்ளித் தலைமையாசிரியாராக இருக்கின்ற பொழுது தேசிய நல்லாசிரியர் விருதினையும் பெறுகிறார். அதே பள்ளியில் படித்து இந்த நிலையை அடைந்ததை நினைத்துப் பார்க்கிறார். இவரிடம் படித்த பலரும் வெவ்வேறு இடங்களில் சிறந்து விளங்குகின்றனர். அவரை அனைவரும் அத்தை என்றே அழைத்து வருகின்றனர். தனக்கென்று யாரும் இல்லாத நிலையில் கௌரியம்மாள் தன்னுடைய அண்ணன் மகன் ராமதுரையின் வீட்டில் தங்குகிறார். ராமதுரையின் பிள்ளைகளிடம் தனது ஓய்வுக் காலத்தைக் கழித்து வருகின்றார். அந்த வீட்டில் வேலை செய்யும் மணி எனும் சிறுவன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவது கௌரியம்மாளுக்குப் பிடிக்கவில்லை. அவன் அதிக உரிமை எடுத்துக் கொள்ளுகின்ற பொழுதெல்லாம் அவனைக் கண்டிக்கின்றார். இதை விரும்பாத ராமதுரை மணியை வேறு வீட்டிற்கு மாற்றுவதுதான் மணிக்கு நல்லது என்று நினைக்கின்றார். இதற்கிடையே மணியை தனது வீட்டில் கொண்டுவந்து விட்ட மெக்கானிக்கை சந்தித்து மணியைப் பற்றி விசாரிக்கின்ற பொழுது மணி மிகச் சிறந்த நடனக் கலைஞர்களின் மகன் எனவும் பெரிய செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவருகிறது. விபத்தில் பெற்றோர் இறந்துவிடவே மணியும் அவனது தங்கையும் அநாதையாக்கப்பட்டனர் என்பதை அறிந்தார். இதனைத் தனது மனைவியிடமும் கௌரியம்மாளிடமும் கூறினார். இவ்வளவு படித்து பட்டம் வாங்கிய நாம் மணியைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் தவறுதலாகப் புரிந்து கொண்டோமே என கௌரி வருத்தப்படுகிறார். இன்று முதல் மணியைத் தத்தெடுத்து படிக்க வைப்பது எனது கடமை என்று முடிவெடுக்கின்றார். கையில் ஒரு விளக்கை வைத்துக் கொண்டு அதனைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்பது கண்டு வருத்தப்பட்டார் கௌரி. மணியின் தங்கையையும் தானே படிக்க வைக்கிறேன் என்று கூறவே அவள் ஒரு ஏழைக் குடும்பத்தில் வாழ்ந்தாலும் மிகவும் சந்தோசமாக வாழ்கிறாள் எனவே அவளை இங்கு அழைக்க வேண்டாம் என்று மணி கூறிவிடுகிறான்.