ஞாயிறு, மே 10, 2020

எங்கெங்கு காணினும் - ஜெயகாந்தன்

     எங்கெங்கு காணினும் கல்பனா, 1980
கதையின் முதல் அத்தியாயம் ஊருக்கு நூறு பேர்புதினத்தின் கதைச் சுருக்கமாக அமைந்துள்ளது. பின்னர் அந்நாவலின் தொடர்ச்சியாகவே எங்கெங்கு காணினும்புதினம் தொடர்கிறது. புரட்சிப் படை இருக்கும் இடத்திற்கு ஆனந்தன் அழைத்துச் செல்லப்பட்டதோடு ஊருக்கு நூறு பேர்புதினம் முடிவுற்றது. ஆறுமாதங்களுக்குப் பிறகு பயிற்சிகள் முடிந்த பிறகு, சிலபல திட்டங்களோடு ஆனந்தன் மீண்டும் போராட்டம்இதழ் அலுவலகத்திற்கு வந்தார் என்பதாக இப்புதினம் தொடங்குகிறது. அலுவலகத்திற்கு வந்த ஆனந்தனை, ஆயுத பூஜை செய்யத் தயார் படுத்திக் கொண்டிருந்த ருக்குமணி, கோவிந்தசாமி விநாயகம் பார்த்து மகிழ்வுடன் வரவேற்றனர். ஆனந்தன் வந்ததும் வராததுமாக தான் ஆறுமாதம் பெற்ற பயிற்சிகள் குறித்தும் அது குறித்து புத்தகம் எழுதி வெளியிடுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன் என்பது குறித்தும் விளக்கினார். கோவிந்தசாமியும் ருக்குமணியும் மாடியில் குடிசை கட்டி தங்கி வருவதை கேள்விப்பட்டதும் ஆனந்தன் மகிழ்ந்தார். ஆனந்தன் எழுதவிருக்கும் நூலை அவர் சொல்ல ருக்குமணி எழுதத் துவங்கினாள். எழுதிக் கொண்டிருக்கையில் நூறு பேர் இயக்கம் திட்டத்தின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் அதன் நோக்கத்தையும் ஆனந்தன் விரிவாக விளக்கினார். அதோடு பயிற்சியின் போது இறந்துவிட்டதாக நினைக்கின்ற பலரையும் உயிரோடு கண்டதாகவும் கூறினார். யார் என்று ருக்குமணி கேட்க ஆனந்தன் கூறுவதாகக் கதை பாவம் இவ ஒரு பாப்பாத்திஎனும் புதினத்தில் வருகின்ற புரட்சியாளர் பாப்பாத்தியம்மாளின் மகன் பரந்தாமன் புரட்சியாளர் துரைசிங்கம், ராமா போன்ற பலரையும் கண்டதாக குறிப்பிடுகிறார். இதனடிப்படையில் இவ்விரு புதினங்களும் இணைகின்றன. பரந்தாமனை பார்த்ததாகக் கூறியதும் ருக்குமணி வியப்படைந்தாள். ஏனெனில் பரந்தாமன் இறந்துவிட்டதாகவும் அவனது தாய் பாப்பாத்தியம்மாள் தனது மகன் இல்லையென்று கூறியதையும் அனைவரும் அறிவர். மேலும் பரந்தாமன் முன்பு பலமுறை போராட்டம் இதழ் அலுவலகத்திற்குப் பலமுறை வந்திருக்கிறார் என்பது ருக்குவீற்குத் தெரியும். புத்தகம் வெளியிடுவதற்கு வெளியிட்ட விளம்பரங்கள் புத்தகத்தின் வெளியீட்டு ஆர்வத்தை மக்களிடம் அதிகப்படுத்தியது. மேலும் பல வரலாற்றுத் தரவுகளுடன் ஊருக்கு நூறு பேர் இயக்கம் தொடர்பான 100 உண்மைகள் என நூல் வடிவம் பெற்ற வெளியானது. எதிர் பார்ப்பையும் மீறி நூல் விற்பனையானது. அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. விமர்சிக்கப்பட்டது. ஆதரவுகளும் எதிர்பார்ப்புகளும் பரவிக் கொண்டிருந்தன. அதோடு ஊருக்கு நூறு பேர் இயக்கத்தின் இயக்கம் தொடர்பான வானொலி அறிவிப்புகளையும் வெளியிட்டனர். அரசாங்கமும் இதற்கு எதிராக மக்கள் இதை நம்ப வேண்டாம் என்ற அறிவிப்புகளையும் வெளியிட்டது. விநாயகம் அப்பொழுதுதான் தன்னை இவ்வியக்கத்தைச் சார்ந்தவன் என்றும் அறிமுகம் ஆனந்தனுக்கு முன்பே பயிற்சி பெற்றவன் என்றும் அறிமுகம் செய்துவிட்டு மீண்டும் பயிற்சிக்குச் சென்றுவிட்டான். ஆனந்தனை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பேசுவார் என அரசு அறிவுப்புகள் வெளியாயின. ஆனந்தன் விடுவிக்கப்பட்டார். மக்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் என்ன பேசாப் போகிறார். என்ற ஆர்வத்துடன் வானொலியை நோக்கி   காத்துக் கொண்டிருந்தனர்.