கணினி வழிக் கற்பித்தல்
நோக்கம்
கணினி, மாணவர்களை நவீன தொழில் நுட்பத்திற்கு பழக்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் புதுமையான, அறிவியல்பூர்வமான கற்றலுக்கும் மாணவர்களைத் தயார் செய்கிறது. லீஃப் (Leib - 1982) என்பவரின் கருத்துப்படி ஆசிரியர் விரிவுரை மூலம் கற்பித்தலில் ஈடுபடாமல் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களையே கற்றுக் கொள்ள வைப்பது "கணினி வழிக் கற்பித்தல்” எனப்படும்.
கற்பித்தலில் கணினி பின்வரும் வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது
- கற்பித்தலுக்காக கலைத் திட்டம் தயாரிக்க
- கல்வி மேலாண்மை மற்றும் நிர்வாகம் செய்ய
- திட்டமிட
- கல்விப் பதிவேடுகள் பராமரிக்க
- கேள்வித்தாள் தயாரிக்க
- தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட
- கல்வி ஆய்வுகள் செய்ய மற்றும் கல்வி சார் கணக்கெடுப்பு செய்ய போன்ற எண்ணிலடங்கா பணிகளை விரைந்து முடிக்க கணினி பயன்படுகிறது.
கணினி வழிக் கற்றல் - கற்பித்தலின் பயன்கள்
வகுப்பறைக் கற்றலுக்கு கணினியின் பயன்பாடு
ஆசிரியருக்கு நான்கு முக்கிய பிரிவுகளில் கணினி முக்கிய பங்காற்றுகிறது
- அ) கேள்வித் தாள்களைத் தயாரிக்க, விடைத் தாள்களை மதிப்பிட மற்றும் தேர்வு முடிவுகளைப் பகுத்தறிய
- ஆ) மாணவர்களின் அறிவு மற்றும் திறன் வளர்ச்சியினை ஆண்டு முழுவதும் கவனித்து பதிவு செய்ய
- இ) பாடப் பகுதிகளுடன் தொடர்புடைய பிற தகவல்களை கணினியைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ள, மாணவருக்கு வழிகாட்ட மற்றும்
- ஈ) தனிப்பட்ட ஒவ்வொரு மாணவனின் வளர்ச்சி மற்றும் செயல் திறன்களை சகமாணவருக்கும், பிற ஆசிரியருக்கும், பெற்றோருக்கும், மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் தெரிவிக்க.
குறிபிட்ட கால அளவில் இப்பிரச்சனையைத் தீர்க்க ஆசிரியரை அதிகளவில் கற்பித்தலில் ஈடுபடச் செய்விப்பதே கணினி வழிக் கற்பித்தலின் அடிப்படை நோக்கமாகும். ஆசிரியர் மாணவர் மற்றும் கணினி ஆகிய மூன்றும் இணைந்து செயல்படும்போதே கணினி வழிக் கல்வி சிறப்பாக அமையும்.
கணினி வழிக் கற்றலில் ஆசிரியர் கற்பித்தல் பொருள்களை (Instructional Material) முதலில் தயார் செய்ய வேண்டும். இந்தக் கற்பித்தல் பொருள்களை மாணவர்கள் கணினியில் பயன்படுத்தி தாங்களாகவே கற்றுக் கொள்ளலாம். கணினியின் மூலம் கற்பதால் மாணவர்கள் கற்பித்தல் பொருள்களை அவரவர் கற்கும் வேகம் மற்றும் தேவைக்கேற்ப பயன்டுத்திக் கொள்ளலாம். கணினியைப் பயன்படுத்தும் போது, கணினி மிக விரைவாகவும், சரியாகவும் தகவல்களை கணினித் திரையில் உருவாக்கித் தரும். ஒவ்வொரு மாணவரும் தகவல்களைப் புரிந்து கொள்ள பயன்படுத்திய காலத்தையும் கணினி பதிவு செய்து கொள்ளும். இத்தகவல்களே கீழ்க்கண்ட மாதிரியில் கொடுக்கப்பட்டுள்ளன.
- கணினி மாணவரை அதிகமாகக் கற்க ஊக்கப்படுத்துகிறது.
- மாணவர்கள் அவர்களின் நோக்கங்களை அடைவதற்கு ஏற்ற அனுபவங்களைக் கொடுக்கிறது.
மீளக் கற்றலுக்கு கணினியின் பயன்பாடு
- கணினி வழிக் கற்பித்தலில், கற்றல் - கற்பித்தலை மேம்படுத்த பல வகையான மென்பொருள்கள் (Software) உள்ளன. மாணவர்கள் இந்த மென் பொருள்களில் பதிந்துள்ள தகவல்களைத் திரும்பத் திரும்ப பயிற்சி செய்து (Drill and Practice) மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், கற்றது குறுகிய காலத்திற்கே நினைவில் இருக்கும்.
- மாணவர்கள் திரும்பத் திரும்ப கணினியைப் பயன்படுத்துவதால் கணினி சலிப்படையாது, கோபப்படாது. அதற்கு பதிலாக மாணவர்கள் சரியான பதிலைக் குறித்தால், கணினித் திரையில் பாராட்டு வார்த்தைகளும், புன்னகைக்கும் முகங்களும் தோன்றுவது போல மென்பொருள்கள் திட்டமிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
புதியன கற்றலுக்கு கணினியின் பயன்பாடு
திட்டமிடப்பட்ட கற்பித்தலுக்குத் (Programmed Instruction) தயாரிக்கப்பட்ட பாடப் பொருள்களையே மென்பொருளாக மாற்றி கணினியைப் பயன்படுத்தி மாணவர் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். அதற்கு மாணவர் கீழ்க்கண்ட படிகளைப் பின்பற்ற வேண்டும்.
- மாணவருக்குக் கணினியைப் பற்றிய அடிப்படை அறிவு தெரிந்திருக்க வேண்டும். கணினியை எவ்வாறு ஒளிர்விப்பது, மென் பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது போன்ற விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
- திட்டமிடப்பட்ட பாடப் பொருள் பதிந்துள்ள மென்பொருளை (Software) கணினியில் பயன்படுத்தி திரையில் ஒளிர்விக்க வேண்டும்.
- கணினித் திரையில், பாடப் பொருள்கள் சிறுசிறு தகவல்களாகவோ (அ) எளிய சோதனைகளாவோ வெளிப்படும்.
- தகவல்களை முழுமையாக மாணவர் படிக்க வேண்டும். சோதனைகளாக இருப்பின் சோதனையின் ஆரம்பம் முதல் முடிவு வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு சோதனையின் (அல்லது) தகவலின் இறுதியில் அதோடு தொடர்புடைய ஒன்று (அ) பல வினாக்கள் கேட்கப்படும். இவ்வினாக்கள் குறுவினா (அ) கோடிட்ட இடத்தை நிரப்புதல் (அ) பல்வகை பதில்களில் மிகப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்தல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு வகையைப் பின்பற்றி இருக்கும்.
- கணினியில் ஒளிரும் வினாவிற்கு பொருத்தமான பதிலை மாணவர் கொடுக்க வேண்டும். பதில் பொருத்தமானதாக இருப்பின், கணினித் திரையில் பாராட்டு வார்த்தைகள் (அ) புன்னகையுடன் கூடிய முகம் ஒளிரும்.
- பதில் தவறாக இருப்பின், மாணவர் மீண்டும் முந்தைய தகவலைப் படிக்க வேண்டும். இரண்டாவது முறையும் பதில் தவறாக இருப்பின், கணினியிலேயே சரியான பதில் ஒளிரும்.
- எனவே, மாணவர் ஒரு தகவலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பிறகே அடுத்த தகவலுக்குச் செல்ல இயலும். தகவலை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு மாணவர் எத்தனை காலம் வேண்டுமாயினும் எடுத்துக் கொள்ளலாம்.
- கணினி வழிக் கற்றலில், திரும்பத் திரும்ப கற்றலே புதுமையான கற்றலாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைக் கற்றலில் தனிப்பட்ட மாணவனின் கற்றலை விட அனைத்து மாணவரின் கற்றலுக்கே முக்கியத்துவம் தரப்படும். கணினி வழிக் கற்றலில் ஒவ்வொரு தனிப்பட்ட மாணவனும் அவருக்குத் தேவையான நேரத்தைப் பயன்படுத்தி, பாடப் பொருள்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். அவரவர், திறமைக்கேற்ப அடைவுகளை வெளிப்படுத்தலாம்.
விக்கிபீடியாவிலிருந்து